கருத்தியல் ரீதியாக ஒன்றிணைந்துள்ள திமுக கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி காணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
மேலும், குடியுரிமைச் சட்டத்தில் அதிமுக எடுத்த நிலைப்பாடு அவர்களைத் தோலுரித்துக் காட்டிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம்:
உங்கள் கட்சியினர் 30 தொகுதிகளிலேயே நிலையாய் நின்றனர்; ஆனால் கடைசியில் 25க்கு ஒப்புக்கொண்டீர்கள். கட்சியினரின் எதிர்வினை எப்படி இருந்தது?
நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து அவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். தற்போதைய அரசியல் கள நிலவரத்தின்படி இந்த எண்ணிக்கை குறைவு எனத் தெரிந்தாலும் அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். சொல்லப்போனால், திமுக கூட்டணியில் எல்லாக் கட்சிகளுமே கள நிலவரத்தை உணர்ந்து கடைசி நிமிட முடிவாக தொகுதி உடன்பாட்டை எட்டியுள்ளன.
தொகுதி உடன்பாட்டில் அரசியல் அழுத்தம் இருப்பதாக நினைக்கிறீர்களா? ஒருவேளை தேர்தல் அறிவிப்பு குறுகிய காலத்தில் வந்ததால் இச்சிக்கல் ஏற்பட்டிருக்கிறதா?
தேர்தல் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்தல் சீக்கிரம் வருமென்பதை ஆளுங்கட்சியினர் மட்டும் அறிந்து வைத்திருக்கின்றனர். இருப்பினும், தொகுதிப் பங்கீட்டில் நாங்கள் எவ்வித அரசியல் அழுத்தத்தையும் சந்திக்கவில்லை. திமுகவும் எங்களுக்கு எந்த நெருக்கடியும் தரவில்லை.
வேட்பாளர் தேர்வில் அதிருப்தி தெரிவித்து சிலர் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்களே? இதனால் பாதிப்பு ஏற்படாதா?
இது எல்லாக் கட்சிகளுமே சந்திக்கும் பிரச்சினைதான். காங்கிரஸ் சார்பில் போட்டியிட 2,500 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஆனால், இருப்பதோ 25 தொகுதிகள். அதனால், சிலருக்கு மனமாச்சர்யங்கள் இருப்பது இயல்புதானே. அந்த மனச்சோர்வை தலைமைதான் சரி செய்ய வேண்டும். அதை நாங்கள் சரியாகச் செய்துவிட்டோம். அவர்களும் புரிந்துகொண்டுள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சியில் முக்கியப் புள்ளிகளின் உறவினர்களுக்கே சீட் வழங்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சொல்லுங்கள்?
எல்லாத் தொகுதியிலுமே அப்படி சீட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு அவரது மகனுக்காக சீட் கேட்கவில்லையே, நானும் என் குடும்பத்தினர் யாருக்கும் சீட் கேட்கவில்லை. தலைவர்கள் எப்படி வேலை செய்கிறார்களோ அதேபோல் அவர்களின் குடும்பத்தினரும் கட்சிப் பணி செய்கிறார்கள்.
அப்படியாக, 25 பேரில் மூன்று பேர் மட்டுமே வாரிசுகள் என்பது பெரிய எண்ணிக்கை இல்லையே. (உண்மையில், காங்கிரஸ் கட்சியில் 5 வாரிசுகளுக்கும், முக்கியப் புள்ளியின் உறவினர் ஒருவருக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது) அதுவும் தகுதியில்லாதவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை.
காங்கிரஸில் ஒரு பெண் வேட்பாளர் கூட அறிவிக்கப்படாதது ஏன்?
இன்னும் 4 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதில் நிச்சயம் பெண்கள் இருப்பர். 4 தொகுதிகளும் பெண்களுக்கே என்று கூற இயலாது.
2011-ல் கூட்டணியில் உங்களுக்கான சீட் 63 என்றளவில் இருந்தது. இப்போது அது 25 ஆகச் சரிந்துள்ளது. காரணம் என்ன?
அடுத்த தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் போட்டியிடலாம். அரசியலில் எதுவும் சாத்தியம் தானே. வெற்றி, தோல்வி, ஏற்றத்தாழ்வு எல்லாம் அரசியலில் வரும், போகும். இப்போதைக்கு எங்களின் இலக்கு இந்தக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே. அதற்கான களப்பணியில் இறங்கியுள்ளோம். அடுத்த தேர்தலில் நிச்சயமாக கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவோம்.
திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்தபோது, உங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு கருத்தில் கொள்ளப்பட்டது. இந்தத் தேர்தலில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?
மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் நாங்கள் 8ல் வெற்றி பெற்றோம். அந்த வெற்றி வாய்ப்பு இப்போது எங்களை நிரூபிக்கப் போதாதா? நீங்கள் ஏன் பழைய கணக்குகள் பற்றிப் பேசுகிறீர்கள். என் கணிப்பு சரியென்றால் நாங்கள் 90 சதவீதத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இப்போதைய கள நிலவரப்படி பார்த்தால் எங்களுக்கு 100 சதவீதம் வெற்றி உறுதி.
உங்கள் கூட்டணியின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?
அதிமுக கூட்டணியுடன் ஒப்பிடும்போது எங்கள் கூட்டணியின் வாக்கு விகிதம் பெரியது. ஒருவேளை நாங்கள் தேர்தலில் சோபிக்கவில்லை என்றாலும்கூட எங்களின் வாக்கு விகிதம் அதிமுகவின் தற்போதைய வாக்கு விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.
மேலும், எங்களின் கூட்டணி கருத்தியல் ரீதியாக இணைந்த கூட்டணி. இது நீண்ட காலமாக வலுவாக இருக்கிறது. ஆனால், அதிமுக- பாஜக கூட்டணி அப்படியானது அல்ல. அங்கே நிறைய குழப்பங்கள் உள்ளன.
திமுகவின் தேர்தல் அறிக்கை, வளர்ச்சியை முன்னிறுத்துவதாக உள்ளது. அது விவசாயத்தை செழிக்கச் செய்யும். வேலைவாய்ப்பை உருவாக்கும். சமூகத்தில் நலிவடைந்தவர்களைப் பாதுகாக்கும். சமூக நீதியை நிலைநாட்டும். கல்வியில் சீர்திருத்தங்களுக்கு வித்திடும். இவை தான் உண்மையில் மக்களின் எதிர்பார்ப்பு. அதை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம்.
அதிமுகவின் சிஏஏ நிலைப்பாடு குறித்து உங்களின் கருத்து என்ன?
நாடாளுமன்றத்தில் அதிமுக காட்டிய ஆதரவால் மட்டும் சிஏஏ மசோதா நிறைவேறியது. அவர்கள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டனர். இப்போது அதைத் திரும்பப் பெறுவது பற்றி பரிசீலிப்போம் எனக் கூறுகின்றனர். இவர்கள் யாரை முட்டாளாக்க நினைக்கிறார்கள்? குடியுரிமைச் சட்டத்தில் அதிமுக எடுத்த நிலைப்பாடு அவர்களைத் தோலுரித்துக் காட்டிவிட்டது
அதிமுகவின் தேர்தல் அறிக்கை, வெற்று அறிக்கை. போலி வாக்குறுதிகளைக் கொண்டவை.
ஆனால், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்று வாக்குறுதி அளித்துள்ளார்களே?
அரசாங்கத்தில் காலிப் பணியிடங்கள் மிக மிகக் குறைவு. கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் எத்தனை வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளனர். இதெல்லாம் வெறும் தேர்தல் வாக்குறுதிகள். நடைமுறையில் செயல்படுத்தக்கூடியது அல்ல. வாக்காளர்களை முட்டாள்களாக்கும் செயல்.
இதற்கு முன்னதாக உங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றபோது ஆட்சி அதிகாரத்தில் நீங்கள் பங்கு கேட்கவில்லை. பாஜக நாளுக்கு நாள் சீராக அதன் இருப்பை உறுதி செய்து கொண்டிருக்கும் சூழலில் இந்த முறை நீங்கள் கேட்பீர்களா?
2021 தேர்தலுக்குப் பின் அதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வோம். இப்போதைக்கு இது கொள்கை அளவிலேயே இருக்கிறது. அப்புறம் தமிழகத்தில் பாஜ்க வளர்வதாகக் கூறுவதே ஒரு மாயை. எங்களின் பலத்தை அறிய, தமிழகத்தில் 6 நாட்கள் எங்கள் தலைவர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது திரண்ட மக்கள் வெள்ளத்தைப் பார்த்திருந்தாலே உணர்ந்து கொள்ளலாம். அந்தக் கூட்டம் அண்மையில் எந்தத் தலைவருக்கும் திரளவில்லை. அந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல. நரேந்திர மோடிக்கோ, அமித் ஷாவுக்கோ அந்தக் கூட்டம் வரவில்லையே. ராகுலுக்காகத் திரண்ட கூட்டம் காங்கிரஸ் மீதான நம்பிக்கையில் திரண்ட கூட்டம்.
சரி, அப்படியென்றால் ராகுல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நகரங்களில் எல்லாம் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டால் அதை காங்கிரஸ் வெற்றி என்பீர்களா இல்லை ராகுலின் வெற்றி என்பீர்களா?
இரண்டு தான். காங்கிரஸும் ராகுல் காந்தியும் வெவ்வேறு அல்லவே.
கோவை தெற்கு தொகுதி உங்களுக்குச் சவாலாக இருக்கும் என நினைக்கிறீர்களா?
மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனும், பாஜகவின் வானதி சீனிவாசனும் செய்திகளில் வல்லவர்கள். ஆனால், பொதுவெளியில் எங்கள் கூட்டணியின் பலத்தால் எங்கள் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரே வெல்வார். கமல்ஹாசனின் கட்சியால் வாக்குகள் சிதறும் என நாங்கள் நம்பவில்லை.
சிறுபான்மையினரின் வாக்குகள் உங்கள் கூட்டணிக்கே வருமா இல்லை மநீமவுக்கும் சிறிதளவு மடைமாற்றம் ஆகுமா?
வாக்குறுதிகளை நிறைவேற்றும் சக்தியுள்ளவர்கள் யார் என்று மக்கள் சீர்தூக்கிப் பார்ப்பார்கள். கமலின் கட்சி மிகச் சிறியது. இந்தத் தேர்தலில் அவர்களால் நிச்சயமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. தோற்கும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். திமுகவின் வாக்கு விகிதம் மிகப் பெரியது. எங்கள் கூட்டணியே களத்தில் வலுவான கூட்டணி. அதனால் மக்கள் எங்களுக்கே வாக்களிப்பார்கள்.
கடந்த தேர்தலில் எல்லாக் கட்சிகளும் மதுவிலக்கு பற்றிப் பேசின. இந்தத் தேர்தலில் யாரும் வாய் திறக்கவில்லையே.. ஏன்?
அரசியல் களம் மாறியிருக்கிறது. மதுவிலக்கு என்பது கொள்கை முடிவு. அதைத் தேர்தல் பிரச்சார வாக்குறுதியாக்க முடியாது. மதுவிலக்கு என்பது நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
தமிழில்: பாரதி ஆனந்த்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago