தமிழ் உள்பட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்குக: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் மொழிச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டுமானால் தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்கி இந்தி மொழித் திணிப்பு குறித்த சர்ச்சைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மத்திய அரசு அலுவல்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்து பெரும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழிப் பிரிவு இயக்குனர் அவதேஷ் குமார் மிஸ்ரா மே 27 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில்,மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் சார்பில் அலுவல் சார்ந்த சமூக ஊடகங்களை கையாளும் அதிகாரிகள் இந்தி அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தை பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். அவர் வெளியிட்ட இன்னொரு சுற்றறிக்கையில், அரசு அலுவல்களை முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரு சுற்றறிக்கைகளும் தான் தொடர்பு மொழி குறித்த சர்ச்சைகள் வெடிப்பதற்குக் காரணமாகும்.

மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது அம்மொழியை திணிக்கும் முயற்சிகள் இந்திய விடுதலைக்கு முன்பிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களிடம் கடுமையான எதிர்ப்பு எழும்போதெல்லாம் இந்த முயற்சியில் இருந்து பின் வாங்குவதும், பின்னர் இன்னொரு தருணத்தில் வேறு வடிவத்தில் ஹிந்தியை திணிக்க முயற்சி செய்வதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

1938 ஆம் ஆண்டில் கட்டாயப் பாடமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நுழைய முயன்று விரட்டியடிக்கப்பட்ட இந்தி, அதன்பின் 27 ஆண்டுகள் கழித்து 1965ஆம் ஆண்டில் ஹிந்தி ஆட்சி மொழிச் சட்டம் என்ற பெயரில் நுழைவதற்கு முயன்றது.

அப்போதும் பெரும் போராட்டத்தின் மூலம் விரட்டியடிக்கப்பட்ட இந்தியை இப்போது சமூக ஊடகங்களுக்கான அலுவல் சார்ந்த மொழி என்ற சற்று மென்மையான வடிவத்தில் திணிக்க மத்திய அரசு முயல்கிறது.

இந்தியா என்பதே பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடு தான். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித்தனியாக மொழி, கலாச்சாரம் போன்ற அடையாளங்கள் உள்ளன.

அவ்வாறு இருக்கும் போது ஒரு தேசிய இனத்தின் மொழியான இந்தியை தமிழர்கள் உள்ளிட்ட மற்ற தேசிய இனங்களின் மீது கட்டாயப்படுத்தி திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரன் ரிஜ்ஜு, அனைத்துத் துறைகளிலும் இந்தி மொழி ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதனால், இந்தி பேசாத மாநில மக்களிடத்தில் இந்தி திணிப்பு குறித்த அச்சம் அதிகரித்திருக்கிறது.

எனினும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘ இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் முக்கியம். அவை அனைத்தையும் வளர்க்க மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது’’ என்று கூறியிருப்பது மட்டும் தான் நம்பிக்கை அளிக்கிறது. ராஜ்நாத் சிங் அவர்களின் ட்விட்டர் பதிவுகள் அனைத்தும் இந்தியில் இல்லாமல் ஆங்கிலத்தில் இருப்பதும் இந்த நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

இந்தியாவிலுள்ள அனைத்து மக்களுக்கும் மொழிச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டுமானால் தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழிகளாக்கப்பட வேண்டும். இக்கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது.

2014 மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,‘‘ இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் சாதனைகளின் களஞ்சியமாக திகழும் அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டிருக்கிறது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவித்து இந்தி மொழித் திணிப்பு குறித்த சர்ச்சைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்