கரோனா காலத்தில் மக்களுக்கு மாங்காய் கொடுத்த ஒரே அமைச்சர் நடராஜன்தான்: அமமுக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்து பேட்டி

By ஜெ.ஞானசேகர்

கரோனா காலத்தில் மக்களுக்கு மாங்காய் கொடுத்த ஒரே அமைச்சர் நடராஜன்தான் என்று அமமுக சார்பில் போட்டியிடும் அரசு முன்னாள் தலைமைக் கொறடா ஆர்.மனோகரன், வேட்புமனுத் தாக்கல் செய்தபின் தெரிவித்தார்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் என்.நடராஜனும் அமமுக சார்பில் ஆர்.மனோகரனும் போட்டியிடுகின்றனர். என்.நடராஜனும், ஆர்.மனோகரனும் பல ஆண்டுகள் அதிமுகவில் ஒன்றாகப் பயணித்தவர்கள். 2011- 2016 தேர்தலின்போது திருச்சி கிழக்குத் தொகுதியில் வென்று, அரசு தலைமைக் கொறடாவாகவும்- மாவட்டச் செயலாளராகவும் ஆர்.மனோகரன் இருந்தபோது மாவட்ட அவைத் தலைவராக மனோகரன் அலுவலகத்தில் பணியாற்றியவர் என்.நடராஜன்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட ஆர்.மனோகரன் வெற்றியை இழந்துவிட, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட என்.நடராஜன் வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவியேற்றார். இதனிடையே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது ஆர்.மனோகரன் அமமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில், சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக ஆர்.மனோகரன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக சார்பில் என்.நடராஜனே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, ஆர்.மனோகரன் ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து மாற்றப்பட்டு திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, இன்று பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சுப.கமலக்கண்ணனிடம் இருவரும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

முதலில் என்.நடராஜன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இவருடன் மாநகர் மாவட்டத் தலைவர்கள் கே.செந்தில்வேல் (தமாகா), ஏ.ராஜேஷ்குமார் (பாஜக) ஆகியோர் உடனிருந்தனர். வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பிறகு என்.நடராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த 5 ஆண்டுகளில் கட்சிப் பணி, ஆட்சிப் பணி ஆகியவற்றை சிறப்பாகச் செய்துள்ளேன். அதைக் கவனத்தில் கொண்டுதான் எனக்கு மீண்டும் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன்" என்றார்.

அமமுக வேட்பாளர் ஆர்.மனோகரன் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, "அதிமுகவின் வலிமையையும், அமமுகவினரிடத்தில் தடுமாற்றம் உள்ளதையும் இது காட்டுகிறது" என்று என்.நடராஜன் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் அதிமுக வேட்பாளர் என்.நடராஜன்

அமமுக வேட்பாளர் வேட்புமனு

அதைத் தொடர்ந்து அமமுக வேட்பாளர் ஆர்.மனோகரன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவருடன் தேமுதிக மாநகர் மாவட்டச் செயலாளர் டி.வி.கணேஷ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான அப்துல்லா ஹசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆர்.மனோகரன் கூறும்போது, "2011 தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்குச் சேவை செய்தேன். 2011- 2016 ஆண்டுகளில் நான் செய்த பணிகளைக் கவனத்தில் கொண்டுதான், 2016 தேர்தலில் என்.நடராஜன் போட்டியிட்டபோது மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் திருச்சி கிழக்குத் தொகுதியில் என்.நடராஜன் எதுவும் செய்யவில்லை.

கரோனா பாதிப்பின்போது தமிழ்நாட்டில் மக்களுக்கு மாங்காய் கொடுத்த ஒரே அமைச்சர் என்.நடராஜன்தான். திருச்சி கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த மக்கள், 2011- 2016 காலகட்டத்தில் நான் செய்த சேவையை மனதில் நிலைநிறுத்தி இந்தத் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் எம்ஜிஆர் சிலைக்கு அருகே ஜெயலலிதாவுக்கு சிலை அமைத்துள்ளனர். ஆனால், திருச்சி மாநகரில் 2 அமைச்சர்கள் இருந்தும் கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு எங்கும் சிலை அமைக்கவில்லை. இந்த ஏக்கத்தை அதிமுக தொண்டர்கள் பலரும் என்னிடம் கூறியுள்ளனர். அமமுக வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 23-ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்" என்று ஆர்.மனோகரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்