வெள்ளத்தில் மக்களை மீட்பதில் தன்னார்வலர்களும் உறுதுணை

வட கிழக்குப் பருவ மழையால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்கள் சொல்லித் தீராது. சொல்லில் தீராது. தொடர் மழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது; குடிசைப் பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டன; கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். சாலைகள் சேதம், பயிர்கள் சேதம், விளை நிலங்கள் சேதம் என சேதங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

தமிழக அரசு, அமைச்சர்கள் குழு, அரசியல் தலைவர்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரணப் பணிகள் தொடர்கின்றன. தன்னார்வலர்களும், அரசு சாரா அமைப்புகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.

களத்தில் மீட்புப் பணி நடவடிக்கைகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் சிலரை சந்தித்துப் பேசினேன்.

அப்துல் கனி,பேன்யன் அமைப்பு

முழு நேர சமூகப் பணியாளரான அப்துல் கனி, சுனாமி, உத்தரகாண்ட் வெள்ளம், தானே புயல், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்.

தற்போதைய மீட்புப் பணி குறித்துப் பேசியதாவது: ''முதல் நாளான 16-ம் தேதி (திங்கள்) அன்று வேளச்சேரி, ராம் நகர் விரிவாக்கப் பகுதியில் வசிக்கும் சுமார் பேரை, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தோம். இரண்டாம் நாளில், குளோபல் மருத்துவமனையின் பின்புறமும், அபார்ட்மெண்ட்களில் இருந்தவர்களை மீட்டு வந்தோம்.

தரமணி ஐடி நிறுவனங்களின் மையம் என்பதால் அங்கே ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான குடியிருப்புகளும் இருந்தன. ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்கள், விடுதிகளிலேயே மாட்டிக் கொண்டனர். குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பெண்கள் விடுதியில் சுமார் 100 பெண்கள் இருந்தனர். அவர்களையும் படகுகள் கொண்டு மீட்டோம். இரண்டாம் நாளில் சுமார் 600 முதல் 700 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நீலாங்கரை மீனவர்கள் சுமார் 30 படகுகளோடு வந்து, எதையும் எதிர்பார்க்காமல் எங்களோடு வந்து உதவி செய்தனர். அவர்களுக்கு என் நன்றிகள்.

வர மறுத்த முதியோர்

பிள்ளைகள் எல்லோரும் வெளிநாடுகளில் இருக்க, முதுமைக்காலத்தில் தனியாக வசித்து வந்தவர்களின் நிலை மிகக் கொடுமையாக இருந்தது. சோழிங்கநல்லூரில் வசித்தவர்களில் பலர் வீட்டை விட்டு வெளியேற மறுத்தனர். அவர்களிடம் நிலைமையை எடுத்துக்கூறி, சமாதானப்படுத்தி மீட்டு வருவதே, பெரும்பாடாக இருந்தது.

மூழ்கிய மருத்துவமனைகள்

பாதுகாப்பு தேடியும், மருத்துவ வசதிக்காகவும், மருத்துவமனைகளுக்குப் போனால், அவையே தண்ணீரில் மூழ்கி இருந்தன. மருத்துவமனைகள் தங்களின் அமைவிடத்தை பாதுகாப்பான இடத்தில் அமைக்க வேண்டும். மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளின் நிலை இன்னும் மோசம். அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் சிலரும், அறுவை சிகிச்சைக்கான ஏற்பாட்டோடு சிலரும் இருந்தனர். விபத்துகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர்களும் இருந்தனர்'' என்றார்.

ஹரிஹரன்,வாழும் கலை அமைப்பு

ஹரிஹரன், அடிப்படையில் மென்பொருள் நிறுவன அதிகாரி. வாழும் கலை அமைப்பின் சார்பாக, குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொண்டிருந்த ஹரிஹரன் குழுவினரிடம் பேசினோம்.

"ஏற்கெனவே 'மகிழ்ச்சியான குழந்தைகள்; மகிழ்ச்சியான சென்னை' என்ற பெயரில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மாநகராட்சி மாணவர்களுக்கு பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் பயிற்சி அளித்திருந்தோம். இதனால் எளிதாக அவர்களின் இடங்களுக்குச் செல்ல முடிந்தது. உணவுப் பொருட்களோடு, என்ன தேவை என்று கேட்டு அவற்றை அளிக்க முடிந்தது. வீடுகளை இழந்து நின்றவர்களை அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி கட்டிடங்களில் தங்க வைத்தோம்.

கார்ப்பரேட் அலுவலர்களின் உதவியும், கூட்டு முயற்சியும்

சென்னை முழுவதும், சுமார் 250 வாழும் கலை நிறுவன தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். அவர்கள் சார்பாக கோட்டூர்புரத்தில் இன்று சுமார் 2,000 பிரெட் பாக்கெட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. பொருளாதார உதவிகளோடு தன்னார்வலர்களாகவும் ஆர்வத்துடன் இயங்குகின்றனர்.

அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆகியவை ஒட்டுமொத்தமாக வாங்கப்படுகின்றன. இல்லத்தரசிகள் காய்கள் நறுக்குவது, சமைப்பது உள்ளிட்ட பணிகளை அவர்களாகவே முன்வந்து செய்கின்றனர். மொத்தத்தில் அனைவரின் கூட்டு முயற்சியாகவே இயங்கி வருகிறோம்" என்றார்.

ஸ்ரீமதி கேசன்,ஸ்பேஸ் கிட்ஸ் இண்டியா

சாரணர் படை மாணவரான மருத்துவர் ஸ்ரீமதி, மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மருந்து மற்றும் உணவுப்பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். இவரின் குழுவினர் கோவளம் கடற்கரையில் இருந்து, மீனவர்களின் உதவியோடு படகுகளில் மக்களை மீட்கின்றனர்.

வில்லிவாக்கத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீமதி தனது பணி குறித்துப் பேசினார்.

"தனியார் நிறுவனங்களும், பொதுமக்களும் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்கின்றனர். அக்வாஃபினா நிறுவனம், தன்னுடைய பங்காக 3,000 லிட்டர் தண்ணீரை அளித்திருக்கிறது. நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தாலும், அரசு சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுமார் ஒரு வாரமாகத் தேங்கி நிற்கும் தண்ணீரால், கொசுக்கள் மற்றும் கிருமிகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. தண்ணீரில் குளோரின் பவுடர் தெளிக்கப்பட வேண்டும்.

பயத்தைப் போக்க வேண்டும்

முதலில் அரசு தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும். ஏரிகளின் இருப்பிடங்கள், வழித்தடங்கள் ஆகியவை அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். பொருளாதார உதவிகளோடு, பொதுமக்களின் பயத்தைப் போக்கி, உள ரீதியிலான உதவிகளையும் அரசு அளிக்க வேண்டும். இயற்கைச் சீற்றங்களுக்கான எதிர்வினை குறித்த அடிப்படை விஷயங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

கெல்லீஸ் இளம்பெண்கள் முகாமில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதிகாரிகள் தங்களால் முடிந்த அளவு தண்ணீரை வெளியேற்ற முயற்சி எடுத்துள்ளனர். ஆனாலும் தண்ணீர் குறைந்தபாடில்லை. அங்கிருந்த பெண்கள் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே நாப்கின் உள்ளிட்ட பொருட்களை கேட்டுப் பெற்றனர். புரசைவாக்கம் சாலைகள் அனைத்துமே அசுத்தமாகவே காட்சி அளிக்கின்றன. மொத்தத்தில் சென்னையின் பல இடங்கள் மிகவும் அடிப்படையாகத் தேவைப்படும் அனைத்து வசதிகளும் இல்லாமலேயே இருக்கின்றன.

எழில்குமரன் என்னும் சட்டக்கல்லூரி மாணவர், தனி ஒருவராக சுமார் 500 பேருக்கு சமையல் செய்து கொடுத்திருக்கிறார். 'ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்' சட்டப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து நாட்களாக எங்களுடனே இருக்கின்றனர். பெரும்பாலானோர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று தெரியாது. அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

இன்னமும் புரசைவாக்கம், தென்னஞ்சேரி, வியாசர்பாடி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை மருந்துகளும், உணவுகளும் தேவைப்படுகின்றன. உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், எங்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்றார் ஸ்ரீமதி.

தன்னார்வலர்களின் முகநூல் முகவரி: >அப்துல் கனி,>ஸ்ரீமதி கேசன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE