அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்ததும், அரசியல் வட்டாரத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது திமுகவின் வேட்பாளர் பட்டியல். அதுவும், முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் யார் திமுக சார்பாக களமிறக்கப்படுகிறார் என்பதை அறிய பலரும் ஆர்வமாக இருந்தனர். 37 வயதான சம்பத்குமார், முதல்வரை எதிர்த்துக் களம் காண்கிறார் என்றதும் பலருக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட திமுக தலைவரிடமே அந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. "முதல்வரை எதிர்த்து சாதாரண வேட்பாளரை நிறுத்தியுள்ளீர்களே?". அதற்கு ஸ்டாலின் சொன்னார்: "யார் சொன்னது சாதாரண வேட்பாளர் என்று. அவர் சாதாரண வேட்பாளராக இருக்கலாம். ஆனால், அவர் வெற்றி வேட்பாளர்" என்று சொன்னார்.
அதிமுகவின் எஃகு கோட்டையாக திகழும் எடப்பாடி தொகுதியில், அதிகபட்சமாக அதிமுக 6 முறை வென்றிருக்கிறது.
இந்த நிலையில், அதிகம் அறிமுகம் இல்லாதவர் என பார்க்கப்படும் சம்பத்குமாரிடம் 'இந்து தமிழ்' சார்பாக பேசினோம். அதிகம் பேசாவிட்டாலும், தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்.
உங்களை வேட்பாளராக அறிவித்ததும், உங்களை பற்றிய தகவல்கள் தேடினாலும் கிடைக்கவில்லை. உங்களுக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லை என கூறப்படுகிறது. உங்களை குறித்தும் உங்களது கட்சிப்பணி, களப்பணிகள் குறித்தும் சொல்லுங்கள்...
» அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியாகிறது: முக்கிய அறிவிப்புகள் வர உள்ளதாக தகவல்
» மக்களிடம் எழுச்சி இருக்கிறது; ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்- உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
எடப்பாடியில் உள்ள கொங்கணபுரம் தான் என் சொந்த ஊர். அப்பா தமிழரசன் - அம்மா புஷ்பா. அம்மா அரசுப்பள்ளியில் சத்துணவு டீச்சர். அப்பா, லாரி ஓட்டுநர். நான் ஒரு விவசாயி. பாரம்பரியமாக நாங்கள் திமுக குடும்பம். அம்மா - அப்பா யாரும் கட்சியில் பொறுப்புகளில் இருந்தது இல்லை. நான் 2003-ல் தான் திமுகவில் பணியாற்றத் தொடங்கினேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்துதான் கட்சிக்குள் வந்தேன். அதன்பிறகு, 2007-ல் கிளை துணை செயலாளர், அதன்பிறகு கொங்கணபுரம் பேரூர் இளைஞரணி செயலாளர், பின்னர் கிளை செயலாளராக இருந்தேன். 2015-ல் இருந்து மாவட்ட துணை செயலாளராக உள்ளேன். படிப்படியாகத்தான் கட்சியில் இத்தகைய பொறுப்புகளுக்கு வந்தேன்.
கரோனா காலத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறேன். எங்கள் தலைவரின் ஆணைக்கிணங்க தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறோம். அது எல்லா மக்களுக்கும் தெரியும். ஆளும் ஆதிமுகவினர் யாரும் அப்போது எதையும் செய்யவில்லை. மக்களுக்கு நான் நன்கு அறியப்பட்டவன் தான்.
எடப்பாடி தொகுதியில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு கொடுக்கும் என நம்பினீர்களா?
இல்லை, அப்படி நான் எதிர்பார்க்கவே இல்லை. நமக்கு விருப்பம், கேட்டிருக்கிறோம். தலைமை கொடுத்தால் நிற்போம். இல்லையென்றாலும் கட்சி வேலையை செய்வோம் என்றுதான் இருந்தேன்.
அனுபவம் இல்லாதவர், வயதில் குறைந்தவர் போன்றவை உங்கள் பக்கத்தில் பலவீனமாக பார்க்கப்படுகிறதே?
இல்லை, பலவீனம் எல்லாம் கிடையாது. தலைவர் ஒரு இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டவர். அதனையெல்லாம் பார்க்காமல், ஒரு இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இளைஞர் மத்தியில் நம்மை ஊக்குவிக்கிறார். எனக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் திமுக தலைவரை சந்தித்தீர்களா? உங்களுக்கு அறிவுரைகள், பிரச்சார வியூகங்கள் ஏதேனும் சொன்னாரா?
'வெற்றி பெற வாழ்த்துகள்' என சொன்னார். கண்டிப்பாக ஜெயித்து அந்த வெற்றியை தலைவருக்கு சமர்ப்பிப்பேன் என சொல்லி வந்திருக்கிறேன். தனிப்பட்ட ரீதியாக அறிவுரை எல்லாம் சொல்லவில்லை.
முதல்வரையே எதிர்த்துப் போட்டியிடுவதால் கூடுதல் பயமோ பதற்றமோ இல்லையா?
அதெல்லாம் ஒன்றும் இல்லை. உங்களுக்குத்தான் அவர் முதல்வர். எங்களுக்கு எங்கள் தொகுதியில் ஒருவர். முதல்வராவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறார். அவர் ஊருக்கு வந்தால் போலீஸ்தான் பாதுகாப்புக்காக அதிகமாக இருப்பார்கள். மக்கள் அதிகமாக இருக்க மாட்டார்கள். மக்கள் செல்வாக்கு அவருக்கு இருக்காது.
மக்கள் செல்வாக்கு இல்லாமலா அந்த தொகுதியிலிருந்து தொகுதி மக்களால் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்?
மக்கள் செல்வாக்கெல்லாம் இல்லை. நீங்கள் வேண்டுமானால் ஒரு 'சர்வே' எடுத்துக்கொள்ளுங்கள். எப்போது வந்தாலும் போலீஸ் அதிகமாக இருப்பார்களா? அல்லது மக்கள் அதிகமாக இருப்பார்களா என்று. அவரை வரவேற்க கூட மக்கள் இருக்க மாட்டார்கள். நான்கு முறை ஜெயித்தார் என்றால், கூட்டணி போன்ற விஷயங்கள் காரணமாக இருக்கும். கடந்த கால நிலவரங்கள் வேறு. இப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அதனால் எனக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
திமுக தலைவரை முதல்வராக்க மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்றால், அது உங்களுக்கும் எடப்பாடி தொகுதியில் பலமாக இருக்கும் என்கிறீர்களா?
ஆமாம், அதுதான் எங்களுக்கு பலமே. தலைவர்தான் எங்களின் பலம். மறைந்த தலைவர் கருணாநிதி செய்த சாதனைகள் தான் பலம். திமுக தலைவரை முதல்வராக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதுதான் எங்களின் கூடுதல் பலம். எங்கள் தொகுதியை பொறுத்தவரை திமுக தலைவர்தான் வேட்பாளர்.
சில கருத்துக்கணிப்புகள் திமுகதான் ஜெயிக்கும் என்று சொல்வதால் இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா?
இல்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு முதல்வராக அந்த தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை.
ஆனால், அவர் அடிக்கடி சேலம் மாவட்டத்திற்கு வந்து புதிய திட்டங்கள் பலவற்றை தொடங்கி வைத்திருக்கிறாரே?
எங்கள் தொகுதிக்கு இதுவரை எந்த நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்போ, தொழில் வாய்ப்போ ஏற்படுத்தியிருக்கலாம். அதனை செய்யவில்லை. அதனால், தொகுதியில் கீழ்மட்ட மக்கள் முதல் மேல்மட்ட மக்கள் வரை அதிருப்தியில் தான் இருக்கின்றனர். பூலாம்பட்டியில் பூங்கா அமைத்துத் தருவோம் என்றார், அதனை செய்யவில்லை. பூலாம்பட்டி - நெறிஞ்சிப்பேட்டை பாலம் அமைத்துத் தருவதாக கூறினார். அதனையும் கட்டித்தரவில்லை. எடப்பாடியில் நெசவாளர்களுக்கு ஜவுளிப்பூங்கா சொன்னபடி அமைத்துத் தரவில்லை. அங்கு பிரதான தொழிலே நெசவுத்தொழில்தான். அதன்பிறகு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது. எந்தவொரு தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தவில்லை. எல்லோரும் நாமக்கல் போன்ற பக்கத்து மாவட்டங்களுக்குத்தான் வேலைக்கு செல்கின்றனர்.முதல்வர் தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே வளர்த்துக்கொண்டார். பொதுமக்களின் வாழ்வு மேம்படவில்லை.
நீங்களும் விவசாயி என்கிறீர்கள், முதல்வரும் விவசாயி என்கிறார். எடப்பாடி விவசாயிகள் யாரை ஆதரிப்பார்கள்?
உண்மையான விவசாயி யார் என்று மக்களுக்கு தெரியும். முதல்வர் தன்னை விவசாயி என சொல்லிக்கொள்கிறார். ஆனால், மத்திய அரசுடன் கைகோர்த்துக்கொண்டு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். எட்டுவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தினார். அதனால், அனைத்துத் தரப்பு மக்களும் அதிருப்தியில்தான் இருக்கின்றனர்.
இவ்வளவு நம்பிக்கையுடன் இருப்பதற்கு என்ன காரணம்?
நாங்கள் கொண்ட கொள்கைதான் இந்த நம்பிக்கையை கொடுத்தது.
முதல்வரை எதிர்க்க நீங்கள் என்ன பிரச்சார வியூகம் வைத்திருக்கிறீர்கள்?
அப்படியெல்லாம் இல்லை. எங்களை பொறுத்தவரை தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வோம். கள நிர்வாகிகள் எங்களுக்கு ஒத்துழைப்புடன் இருக்கின்றனர். அவர்களின் வயது குறைவாக இருந்தாலும் அவர்களின் அனுபவம் அதிகம். அந்த அனுபவத்தின் மூலம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
என்னென்ன பிரச்சினைகளை தேர்தல் பிரச்சரத்தில் முன்வைப்பீர்கள்?
திமுகவின் தேர்தல் அறிக்கை ஒன்றே போதும். முதல்வரின் செயல்படுத்தப்படாத, அறிக்கைகளில் மட்டுமே உள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். அதுவே எங்களின் வாக்கு வங்கியை அதிகப்படுத்தும்.
மேற்கு மண்டலம் எப்போதும் திமுகவுக்கு சாதகமாக இருக்காது, அதிமுகவின் கோட்டை என்பதுதானே கள வரலாறு?
கண்டிப்பாக இந்த முறை அப்படியிருக்காது. கடந்த காலக்கட்டத்தில் இருந்திருக்கலாம். இந்த தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். பத்தாண்டு காலம் மக்கள் சிரமத்தை அனுபவித்துள்ளனர். ஒரு மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர்.
ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அவர் போன்ற மக்கள் செல்வாக்குள்ள பெரிய தலைவர்கள் தோற்பது, மிக மிக அரிதாகத்தானே நடந்திருக்கிறது?
அரிதாக நடந்திருந்தாலும் அதே வரலாறு மீண்டும் நடக்கும். முதல்வரை தோற்கடிப்பதை சவாலாக கருதவில்லை. 'ஈஸி'யாகத்தான் இருக்கும். இந்த தொகுதியில் வேறு யாரை நிறுத்தியிருந்தாலும் திமுகதான் ஜெயிக்கும்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago