சிஏஏ சட்டம் குறித்த திமுக நிலைப்பாடு; தேர்தல் அறிக்கையில் சில திருத்தம்: ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குடியுரிமைச் சட்டம் குறித்த எந்த தகவலும் இல்லை என்பதால் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் குடியுரிமைச் சட்டத்தை நீக்கக்கோரும் அம்சங்களை இணைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவையே உலுக்கிய போராட்டம் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் ஆகும். கரோனாவுக்கு முன்னர் இப்போராட்டம் நாடு தழுவிய அளவில் பெரிதாக நடந்தது. இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் சிறுபான்மை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.

இச்சட்டத்துக்கு எதிராக திமுக ஒரு கோடி கையெழுத்தைப் பெற்று குடியரசுத்தலைவரிடம் அளித்தது. ஆனால் நேற்றைய திமுக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை என்பதால் இஸ்லாமியர் மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை மூலம் தேர்தல் அறிக்கையில் திருத்தங்களை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள - வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும், வாக்குறுதி 367-ல், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது” என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் வாக்குறுதி 500-இல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன்:

“இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். * இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்."

மேற்கண்ட திருத்தங்களைப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐப் பொறுத்தவரை, அதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்ததோடு மட்டுமின்றி - நானே வீதிகளில் இறங்கி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று - அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களிடம் திமுக கொடுத்திருக்கிறது.

அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது. எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு - அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்குக் கழகம் அழுத்தமான குரல் கொடுக்கும் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்