தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் பெரியகுளம் தொகுதி மட்டும் தனித்தொகுதியாக உள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் தொண்டனாக இருந்து தமிழக முதல்வர் வரை அரசியல் வளர்ச்சி கண்ட தொகுதி இது. தனித்தொகுதியாக மாறி விட்டதால் இவர் போடி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.
மாவட்டத் தலைநகராக தேனி இருந்த போதிலும் பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்குள்தான் வரையறுக்கப்பட் டுள்ளது.
பெரியகுளம் தொகுதியில் தேனி, பெரியகுளம் என இரு நகராட்சிகள் உள்ளன. தேனி, பெரியகுளம் இரண்டு ஊராட்சி ஒன்றியங்களும், தேவதானப் பட்டி, கெங்குவார்பட்டி, தென்கரை, வடுகபட்டி, தாமரைக்குளம் என பேரூராட்சிகளும் உள்ளன. பெரியகுளம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியினர் பெரியகுளத்தை ‘மாம்பழ நகரம்’ என்றும் கூறுவர்.
தேவதானப்பட்டி, லெட்சுமிபுரம், ஜெயமங்கலம் பகுதிகளில் செங்கரும்பு மற்றும் ஆலைக்கரும்புகள் சாகுபடி செய்யப்படுகின்றன. வடுகபட்டியில் பூண்டு மார்க்கெட்டும், லெட்சுமிபுரத்தில் வெல்லம் மார்க்கெட்டும் உள்ளது.
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சினையை இத்தொகுதியில் அமைந்துள்ள வைகை அணை தீர்த்து வைக்கிறது. தமிழக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகவும் வைகை அணை விளங்குகிறது.
பெரியகுளத்தில் மஞ்சளாறு, சோத்துப்பாறை என இரண்டு அணைகள் உள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதியும், பெரிய குளம் நகராட்சி, தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியும் இந்த தொகுதியில்தான் உள்ளது. பெரியகுளத்தில் உள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
பெரியகுளம் தொகுதியில் பட்டிய லினத்தவர், முக்குலத்தோர், நாயுடு, இஸ்லாமியர்கள், நாடார், செட்டியார் என பல்வேறு சமூகத்தினர் பரவலாக உள்ளனர். வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளை தூர்வாருதல், பெரியகுளத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, கும்பக்கரையில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையை அகலப்படுத்துதல், வவ்வால் அணைக்கட்டு திட்டம், மீறுச முத்திரக்கண்மாயில் படகுசவாரி என நீண்ட கால கோரிக்கைகள் பல கிடப்பில் உள்ளன.
இத்தொகுதியில் 1977 முதல் 2019 வரை நடைபெற்ற 11 தேர்தல்களில் 7 முறை அதிமுகவும், மூன்று முறை திமுகவும், ஒருமுறை கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. பெரியகுளம் தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 ஆண் வாக் காளர்களும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 28 பெண் வாக்காளர்களும், 103 மாற்று பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.
தொடர்ந்து இந்த தொகுதி திமுக, அதிமுக பிரமுகர்களின் விருப்பத் தொகுதியாக இருந்து வந்தது. ஆனால் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு இது தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. இதனால் கட்சியில் பெரியளவில் வெளியில் தெரியாத, மக்களுக்கு அறிமுகம் இல்லாத பலரும் இங்கு களம் காண வாய்ப்பு கிடைத்தது. கட்சியின் தொண்டர்களும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கூட இங்கு போட்டியிட்டு வருகின்றனர்.
இதன்படி 2011-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.லாசர் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2016-ல் அதிமுகவைச் சேர்ந்த கே.கதிர்காமு, 2019-ல் கேஎஸ்.சரவணக்குமார் ஆகியோரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்கள். வெற்றி, தோல்வியைக் கடந்து இங்கு போட்டியிடுபவர்கள் அனைவருமே தொகுதி மக்களுக்கு புதிய வேட்பாளர்களாவே அறிமுகமாயினர்.
தற்போது அதிமுக சார்பில் எம்.முருகன் போட்டியிடுகிறார். எம்ஏ.பிஎட் படித்துள்ள இவர் சென்னையில் அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். கடந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்பு மாற்றம் செய்யப்பட்டார். திமுக சார்பில் கேஎஸ்.சரவணக்குமார் போட்டியிடு கிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
தனித்தொகுதி மாற்றத்தினால் பிரதான கட்சிகளில் இருந்து புதியவர்கள் அதிகளவில் இங்கு போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சிப் பிரமுகர்களின் ஆளுமையை எதிர்கொண்டு தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சிப்பணிகளையும் செய்ய வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.
திமுக, அதிமுக பிரமுகர்களின் விருப்ப தொகுதியாக இருந்தது. மறுசீரமைப்புக்குப் பிறகு தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago