தேர்தல் காலத்திலும் வேலையின்றி தவிக்கும் ஓவியர்கள்

By செய்திப்பிரிவு

தேர்தல் காலத்திலும் போதிய அளவு வேலை இல்லாததால் ஓவியர்கள் தவித்து வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் ‘ஓய்வில்லாமல் ஓவியர்கள் சுழன்ற காலமும்’ இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவான டிஜிட்டல் மோகம், ஓவியர்களின் கைகளை சிறைபிடித்து கொண்டது. மேலும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் போன்ற காரணத்தால், அவர்களது வாழ்வாதாரம் முடங்கியது.

இதிலிருந்து மீண்டு வர முடியாமல், மாற்று தொழிலை தேடி செல்லும் அவலமும் ஏற்பட்டுவிட்டது. இதில், கூலி தொழிலுக்கு சென்றவர்களும் உள்ளனர். சுவர்களை அலங்கரித்த கரங்கள், வெற்று கரங்களாக இருப்பது காலத்தின் கொடுமை எனவும் கூறலாம்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர்கள் கூறும்போது, “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், ஓவியர்களை அழைத்த காலம் மலையேறிவிட்டது. ஒவ்வொரு தேர்தல்களிலும் எங்களது பங்களிப்பு என்பது அதிகளவில் இருந்தது. சுவர்களின் கட்சியின் சின்னங்கள், தலைவர்களின் புகைப்படம் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களை எழுதி, மக்களிடம் கொண்டு சென்ற மகத்தான பணியை செய்து வந்தோம்.

காலபோக்கில், டிஜிட்டல் மயமானதால், எங்களது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் எங்களது வாழ்வாதாரத்தை முடக்கிபோட்டுவிட்டது. இப்போது யாராவது அழைப்பாளர்களாக என காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தேர்தல் நேரத்தில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை நம்பி வாழ்கிறோம். துரிகையை (பிரஷ்) பிடித்த கரங்களால், வேறு எதையும் பிடிப்பதற்கு மனம் ஏற்க மறுக்கிறது. இருப்பினும், குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு, கூலி தொழிலுக்கும் செல்கிறோம். தமிழக தேர்தலுக்கு கடந்த காலங்களில் போதிய கால அவகாசம் கொடுத்தனர். அதன்மூலம் ஓரளவு சம்பாதித்து வந்தோம். ஆனால், இப்போது நடைபெற உள்ள தேர்தலில் கால அவகாசம் இல்லாததால், எங்களது நிலை கேள்வி குறியாகிவிட்டது.

மேலும் குறைந்த அளவே கூலி கிடைக்கிறது. ஒரு சின்னம் வரைய ரூ.50-ம் மற்றும் சின்னத்துடன் வேட்பாளர் பெயரை சேர்த்து எழுத ரூ.250 கொடுக்கின்றனர். மேலும் 50 அடி நீளம் கொண்ட சுவரில், தலைவர்களின் பெயர், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் வரைய ரூ.2 ஆயிரம் கூலி கொடுக்கின்றனர். இந்த பணியில் 3-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுகிறோம்.

கரோனா கால முடக்கத்துக்கு பிறகு தமிழக தேர்தல் கை கொடுக்கும் என காத்திருந்த நாங்கள், கால அவகாசம் இல்லாததால் சுமார் 5 ஆயிரம் ஓவியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு உட்பட அனைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஓவியர்களுக்கு அரசு இயந்திரம் முன்னுரிமை வழங்க வேண்டும். மேலும் எங்களுக்கான நல வாரியத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்கி ஓவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அரசு முன் வர வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE