2021-22இல் கல்லூரியில் நுழையவும் நீட் தேர்வு; இனி கல்லூரி படிப்பும் ஏழைகளுக்கு கனவாகிவிடும்: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கண்டனம்

By செய்திப்பிரிவு

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறித்தது போதாதென்று, தற்போது கல்லூரிக் கனவையே பறிக்க முற்பட்டிருக்கிறார்கள். இனி கல்லூரியில் கால் வைக்கவே பல லட்சம் செலவு செய்ய வேண்டும் என்ற நிலையை ஒவ்வொரு மாணவருக்கும் இந்த அறிவிப்பு ஏற்படுத்துகிறது. "நீட்" அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தேசியத் தேர்வு முகமை (National Testing Agency - NTA) 2021 - 2022 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - நீட் (NEET) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ இளங்கலைப் பட்ட மாணவர் சேர்க்கைக்கான தேர்வு என்பதுடன் இளங்கலை செவிலியர் - பி.எஸ்.சி நர்சிங் (B. Sc. Nursing) - படிப்பு, இளங்கலை உயிரி அறிவியல் - பி. எஸ். சி. லைஃப் சைன்ஸ் (Life Science) ஆகியவற்றிற்கும் இந்தத் தேர்வு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

உயிரி அறிவியல் (லைஃப் சைன்ஸ்) என்றால் விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு பட்டப் படிப்புகளுக்கான பிரிவுகள் உள்ளடங்கியது. தேசியக் கல்விக் கொள்கை 2020, பள்ளிகளை வேலை வாய்ப்புத் திறன் அளிக்கும் மையங்களாக சுருக்கி, தேசியத் தகுதி காண் தேர்வுதான் அனைத்துப் பட்டப் படிப்பிற்கும் தகுதியாகக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்று இதுவரை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தவில்லை. தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் தாக்கங்கள் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்கள் முழுவதுமாக விவாதிக்கவில்லை.

எந்த வல்லுநர் குழுவாலும் "நீட்" பரிந்துரைக்கப்படவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும், பிரிவுகளுக்கும் எதிரானதுதான் "நீட்". ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறித்தது போதாதென்று, தற்போது கல்லூரிக் கனவையே பறிக்க முற்பட்டிருக்கிறார்கள்.

இனி கல்லூரியில் கால் வைக்கவே பல லட்சம் செலவு செய்ய வேண்டும் என்ற நிலையை ஒவ்வொரு மாணவருக்கும் இந்த அறிவிப்பு ஏற்படுத்துகிறது. மருத்துவ சேர்க்கைக்கான "நீட்"யை எதிர்கொள்ள தேவைப்படும் பயிற்சிக்கான ஆசிரியர்களே மாநில அரசிடம் இல்லை என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் கூறியுள்ள சூழலில், செவிலியர் படிப்பு தொடங்கி இனி எல்லாப் பட்டப் படிப்பிற்கும் "நீட்" என்பது சமூக நீதிக்கும், சம கற்றல் வாய்ப்பிற்கும் எதிரானது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மாணவர்கள் உட்பட விளிம்பு நிலை மக்கள், குறிப்பாக பெண்கள், +2 முடித்தால் கல்லூரி செல்லலாம் என்று இருக்கும் வாய்ப்பை தட்டிப் பறிக்கவே இந்த "நீட்".

சமூகத்திலும் கல்வியிலும் பின் தள்ளப்பட்ட சமூகப் பிரிவில் பிறந்தவர்கள் உயர்கல்வி பெற பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டமும், அதில் சிந்தப்பட்ட ரத்தமும் பெற்றுத் தந்த உயர் கல்வி உரிமையைத் தட்டிப் பறிக்கவே, நர்சிங் மற்றும் உயிரி அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு "நீட்" தான் தகுதி என்ற அறிவிப்பு.

அயோத்திதாசப் பண்டிதர், மகாத்மா ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், தோழர் மா.சிங்காரவேலர் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளின் கடும் உழைப்பால், இடைவிடாத போராட்டங்களால் கிடைத்த உயர்கல்வி வாய்ப்பினை, வடிகட்டி வெளியேற்றும் யுக்தியான "நீட்" மூலம் மத்திய அரசு பறிக்கத் துடிப்பதை அனுமதிக்க இயலாது.

இத்தகைய மக்கள் விரோதக் கொள்கையை தமிழ் நாடு மக்கள் நிராகரிக்க வேண்டும். இறுதி இறையாண்மை பெற்ற இந்திய மக்கள், தேர்தலில் தங்களின் வாக்கு மூலமாகத் தேர்ந்தெடுக்கும் அரசிற்கு இறையாண்மை தருகிறார்கள். மக்களாட்சியின் இந்த மகத்துவத்தை உணர்ந்து "நீட்" நிராகரிப்பிற்கு தங்களின் வாக்குகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சியே மக்களாட்சி. அத்தகைய மக்களாட்சி மாண்புகளை உயர்த்திப் பிடித்து மக்கள் நலனில் அக்கறை கொண்ட பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தேசியத் தேர்வு முகமை, 2021-22 கல்வியாண்டிற்கான "நீட்" அறிவிப்பை உடன் திரும்பப் பெற வேண்டும்.

2021 -2022ஆம் கல்வி ஆண்டிற்கான அனைத்துப் பட்டப் படிப்பிற்கும் மாணவர்கள் சேர்க்கையை மேல்நிலைப் பள்ளி மதிப்பீடு அடிப்படையில்தான் நிகழ்த்த வேண்டும். தமிழ்நாடு மாணவர்களின் கல்வி நலனைக் காத்திட, சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, அமையப்போகும் அடுத்த சட்டப்பேரவை தேசியக் கல்விக் கொள்கை 2020 குறித்து முழுமையான விவாதம் நடத்தும் வரை அதன் நடைமுறைச் செயல்பாடுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிறுத்திவைக்க வேண்டும்.

நோய்த்தொற்று அதன் விளைவான ஊரடங்கு, ஒரு கல்வி ஆண்டு முழுவதும் முழுமையான கற்றல் செயல்பாடு நிகழ வாய்ப்பு இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில் தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ள "நீட்" அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்