திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்: தொழில் நிறுவனங்களில் 75% தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி

By செய்திப்பிரிவு

திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் முக்கிய அம்சமாக தொழில் நிறுவனங்களில் 75% தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், அல்லது தங்கள் கட்சி கூட்டணியில் இருந்தால் இந்தவகையான மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்போம், இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்போம் என்றெல்லாம் வாக்குறுதி போன்று அளிப்பார்கள்.

அதிலும் சமீபகால தேர்தல் அறிக்கைகள் தேர்வு வினாத்தாள் போன்று மிக கவனமாக, ரகசியமாகத் தயாரிக்கப்படுகிறது. அதில் ஏழை மக்களுக்குப் பயன்தரும் வகையில் அளிக்கப்படும் விலையில்லாப் பொருட்கள் போன்று எந்தக் கட்சி என்ன வாக்குறுதிகளை அறிவிக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கும்.

அதேபோன்று திமுக கடந்த சில தேர்தல்களில் அதற்கென குழு அமைத்து அந்தக் குழுவில் கட்சி சாரா துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வேளாண் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரது கருத்துகளையும் உள்வாங்கித் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து அதை அறிக்கையாக வெளியிடுகின்றது. இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

விவசாயக் கடன் தள்ளுபடி, 5 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி என திமுக தலைவர் பிரச்சாரத்தில் அறிவிக்க அதையே உத்தரவாக சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி.

1000 ரூபாய் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும், தேர்தல் அறிக்கையில் இது இடம்பெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்க, தங்கள் தேர்தல் அறிக்கையில் ரூ.1500 மாதந்தோறும் தருவோம், 6 மாதம் சிலிண்டர் இலவசம் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்திருக்கும் சூழலில் திமுக முதலில் தேர்தல் அறிக்கையைத் தற்போது ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

16-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலின் தொடர்ச்சியாக திமுக தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் உள்ளன என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

* கடன் ஊழல் புகாருக்கு ஆளான அதிமுக அமைச்சர்களை விசாரிக்க தனி நீதி மன்றம் அமைக்கப்படும்.

* உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் மீது தனித்துறை அமைக்கப்பட்டுத் தீர்வு காணப்படும்.

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
* ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும்.
* சிலிண்டருக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும்.
* அனைத்து அரசு வேலைகளிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% அதிகரிப்பு.
* சட்டம் -ஒழுங்கு பணியில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு ரூ.1 கோடி வழங்கப்படும்.

* குழாய் மூலம் குடிநீர் சென்னையில் கட்டாயமாக்கப்படும்.
* மலைக்கோயில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி.
* கிராமப்புற பூசாரி ஓய்வூதியம் அதிகரிப்பு.
* இந்து ஆலயங்கள் புனரமைக்கப்படும்.
* 205 அர்ச்சகர்களுக்கு உடனடிப் பணி நியமனம்.
* 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை 1500 ஆக அதிகரிப்பு.
* மற்ற ஓய்வூதியங்களும் 1500 ஆக அதிகரிப்பு.
* 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்.
* சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் அரசுப் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.
* ஆறு மாசு அடைவதைத் தடுக்க தமிழக ஆறு திட்டம்.
* கரோனாவில் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு.
* பத்திரிகையாளர், ஊடகத்துறையினர் தனி ஆணையம், ஓய்வூதியம் அதிகரிப்பு.
* பேறுகால உதவித்தொகை 24,000 ரூபாயாக அதிகரிப்பு.
* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.
* சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு.
* புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* 3 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும்.

* ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.
* ரேஷனில் உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
* மணல் குவாரிகளை அரசே ஏற்கும்.
* மருத்துவப் படிப்புகள் அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும்.
* போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.
* வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்.
* நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* நரிக்குறவர், வேட்டைக்காரர், குருவர், லம்பாடி மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வழி வகை செய்யப்படும்.
* ஆன்மிகச் சுற்றுலாவுக்கு ஒரு லட்சம் பேருக்கு தலா 25,000 ரூபாய்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழு நிலுவை கூட்டுறவு சங்கக் கடன் தள்ளுபடி.
* 5 சவரன் வரை உள்ள நகைக் கடன் தள்ளுபடி.

இவ்வாறு பல அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE