பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்: டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

By செய்திப்பிரிவு

அனைத்துப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு தொடங்கி கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அவர்கள் கல்வி கற்கும் வளாகத்திலேயே மருத்துவ பரிசோதளை செய்யவும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் பிரத்யேக அடையாள எண்ணுடன் அவர்களின் மருத்துவ குறிப்புகளை பதிவு செய்து கணினி மயமாக்கி பாதுகாக்க வழிவகை செய்யப்படும் என அமமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டாட்சி முறை - மாநில உரிமைகள்

பல்வேறு மொழி கலாச்சார பின்னணி கொண்ட மாநிலங்களின் ஒன்றியமே நமது இந்திய தேசம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம் எழுந்தது இதன் அடிப்படையில்தான்.

குறிப்பாக நிதி விஷயத்தில் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்தி வருகின்றன மத்தியில் அமையும் அரசுகள். மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி முடிவு செய்ய அமைக்கப்படும் எல்லா குழுக்களும் மாநிலங்களுக்கு எதிராக, குறிப்பாக தமிழக நலனுக்கு எதிரானதாகவே அமைகின்றன. பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் வரை இந்த அநீதி தொடர்கிறது.

1971-ம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் வரி வருவாயை மத்திய அரசு பகிர்ந்தளிக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் நிலைநாட்டவும் ஜெயலலிதா வழியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும்.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம்

· இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்.

· தமிழுக்கான முக்கியத்துவத்தை உணரச் செய்து தமிழுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும்.
* தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே நீடிக்கும்.

இட ஒதுக்கீடு - உள் இட ஒதுக்கீடு கொள்கை

எந்தச் சூழலிலும் 69% இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆபத்து ஏற்படாமல் அமமுக போராடும். ஏற்கனவே அமலில் உள்ள இந்த 69% இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது, உரிய கணக்கீடுகளைச் செய்து, எந்தவொரு சமூகமும் பாதிக்கப்படாத வகையில் அனைத்து சமூகங்களும் சம உரிமை மற்றும் சம நீதியைப் பெறும் வகையில் அமமுக தெளிவான, சரியான நிலைப்பாட்டை முன்னெடுக்கும்.

திறமையான நிர்வாகம் - உண்மையான மக்களாட்சி

*அரசு நிர்வாகத்தில் இன்னும் எஞ்சியிருக்கும் ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகளை மாற்றி அமைத்து, அரசு அலுவலகங்கள் மக்களை இரு கரம் நீட்டி வரவேற்று, சேவையாற்றும் இடமாக மாற்றப்பட வேண்டும். சேவை பெறும் உரிமைச் சட்டம் (Right to Services Act) போன்றவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை.

· வெளிநாடுவாழ் தமிழர் நலம், நீர்ப்பாசனம் உட்பட புதிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும்

* வரிவிதிப்பு சீரமைப்பு, கனிம வளம், சுற்றுலா உள்ளிட்ட மாற்று வருவாய் வழிகளை செயல்படுத்துவதன் மூலம் அரசின் வருவாயை அதிகப்படுத்தி தற்போது தமிழ்நாடு பெரும் கடனில் இருக்கும் சூழ்நிலை 5 ஆண்டுகளில் மாற்றப்படும்.
· மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும்.
· வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட தேதியில் விநியோகம் செய்யப்படும்.

மக்கள் நலன் சார்ந்த மின் ஆளுமை

தற்போது உள்ள இ-சேவை மையங்கள் போதிய ஊழியர்கள் உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் இருக்கின்றன. அவற்றை உரிய வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கேற்ப சம்பந்தப்பட்ட துறைகளின் ஓர் ஊழியர் அல்லது அதிகாரி இந்த இ-சேவை மையங்களுடன் இணைந்து செயல்பட வழி வகை செய்யப்படும்.

மதுவிலக்கு கொள்கை

மதுவின் பாதிப்பில்லாத அடுத்த தலைமுறையை உருவாக்கவும், மதுவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, ஐ.நா. சபை வழிகாட்டுதலின்படி உடல் மற்றும் உள்ளம் சார்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கும் வழிவகை செய்வதில் அமமுக உறுதியுடன் இருக்கிறது.

தமிழகத்தில் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே உள்ள மதுபான ஆலைகளை படிப்படியாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விலையில்லாத் திட்டங்கள்

சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்களைக் கைதூக்கிவிடுவதற்கும், மற்றவர்களைப் போல அவர்களும் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது ஓர் அரசாங்கத்தின் கடமை. எனவே இங்கே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிறவரையில், இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியமாகும். 'இலவசம்' என்ற சொல்லை சிலர் கொச்சைப்படுத்தியபோது அதனால் பயன்பெறுவோரிடம் நெருடல் ஏற்படக்கூடாது என்பதற்காக, 'விலையில்லா' என்ற பதத்தைப் பயன்படுத்தி திட்டங்களைச் செயல்படுத்திய மக்கள் மனங்களில் மகராசியாக குடியிருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அடிச்சுவட்டை இதிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பின்பற்றும்.

தொழில் கொள்கை

பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் தமிழகத்தில் பல லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இலட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோயின. இந்த தேக்க நிலையை மாற்றி மூடப்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளை திறப்பது, அதன் மூலம் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரதான கொள்கையாக இருக்கும்.

சிறு குறு தொழில்புரிவோர் ஜி.எஸ்.டி. தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்வதில் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதை மனதில் வைத்து ஜி.எஸ்.டி. நடைமுறையை கிராமப்புறத்தினரும் சிரமமின்றி பின்பற்ற எளிய நடைமுறையை உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

· தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் தொழில்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை செயலர்கள், தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களை உள்ளடக்கிய நிரந்தர ‘தொழில் வளர்ச்சி வாரியம்’ ஒன்று அமைக்கப்படும். மாநிலத்தின் தொழில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலும் முதலீட்டாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த வாரியத்தின் கூட்டம் நடைபெறும்.

· பல்வேறு வகை இயந்திர உற்பத்தி பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. மூலம் கடுமையான வரி விதிக்கப்பட்டுவதால் அந்த தொழில்களே முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு சிறு குறு தொழில்களின் மையமாக விளங்கும் கோயம்புத்தூர் மண்டலத்தின் மோட்டார் பம்புசெட்டிற்கு 18 % வரி வசூலிக்கப்படுகிறது. இதை 5 % ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

· தொழில் துறையின் கீழ் வரும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகப் பிரச்னைகளை அந்தந்த துறை அமைச்சகங்களே கவனிக்கும் வகையில் நிர்வாகத்தை பகிர்ந்தளித்து தொழில் துறையின் சுமையை குறைப்பதன் மூலம் முதலீடு மற்றும் ஏற்றுமதி விஷயங்களில் கூடுதல் மற்றும் சிறப்பு கவனத்தை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

· தமிழகத்தின் முதலீடு மற்றும் ஏற்றுமதி விவகாரங்களை கவனிப்பதற்கென்றே தொழில் துறையின் கீழ் ஒரு தனி இயக்குனரகம் (A dedicated Directorate Under Industries Department) ஏற்படுத்தப்படும். தற்போது நடைமுறையில் உள்ள தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனரகம் இந்த புதிய இயக்குனரகத்தோடு இணைக்கப்படும்.

வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் நிறுவனங்களுக்கு மின்சாரம், குடிநீர், கழிவு நீர் சுத்திகரிப்பு, தகவல் தொடர்பு, நவீன சாலைவசதி இணைப்பு உள்ளிட்ட வசதிகளோடு தரம் மேம்படுத்தப்பட்ட நிலம் சலுகை விலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

· தொழில் முதலீடுகளை வகைப்படுத்தி துறை வாரியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவார். சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அந்த அதிகாரி பாலமாக இருப்பார்.

கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதில் தொடங்கி, அரசுத் துறைகளின் அனுமதி பெறுவது மற்றும் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதில் ஏற்படும் நிர்வாக சிக்கல்களை தீர்ப்பது வரை அரசையும் குறிப்பிட்ட அந்நிறுவனத்தையும் அந்த அதிகாரி வழிநடத்தும் வகையில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

· ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு தொழிற்பேட்டை மற்றும் அதையொட்டிய நகரியம் (Township) அமைவது உறுதிப்படுத்தப்படும். சிறப்பு முதலீட்டு மண்டலம் என்ற அந்தஸ்தோடு இந்த தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

60 நாட்களில் தொழில் தொடங்க அனுமதி

தமிழகத்தில் உரிய தகுதிகளுடன் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் 60 நாட்களில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்படும்.

அந்நிய செலாவணி - சிறப்பு கவனம்

இன்று திருப்பூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட தமிழகத்தில் சில முக்கியமான பகுதிகளில் அந்நிய செலாவணியை ஈட்டும் தொழில்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நகரங்களின் அடிப்படை கட்டமைப்புகளான தரமான சாலை வசதிகள், மின்சாரம், குடிநீர், சுகாதாரம், தரமான தங்குமிடங்கள் போன்றவற்றை மேம்படுத்தவும், புதிதாக உருவாக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.

ஏற்றுமதி மண்டலங்கள்

தமிழகம் முழுவதும் விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் அமைந்த பகுதிகளில் பிரத்யேக ஏற்றுமதி மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அப்பகுதியில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு சிக்கலின்றி ஏற்றுமதியாவது உறுதிப்படுத்தப்படும். இந்த விஷயத்தில் தனியார் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை அந்தந்த மண்டல மையங்களில் உள்ள அதிகாரிகள் வழங்குவார்கள்.

துறைமுகங்கள் மேம்பாடு

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் துறைமுகங்களின் பங்கு முக்கியமானது. நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியிலும் துறைமுகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, கொளச்சல் உள்ளிட்ட எட்டு துறைமுகங்கள் இருக்கின்றன. இவற்றின் சரக்கு கையாளும் திறனை காலத்திற்கேற்ப உரிய கட்டமைப்புகளோடு சர்வதேச தரத்துடன் தரம் உயர்த்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

துறைமுகங்களின் விரிவாக்கத்திற்காக போதிய நிலங்கள் அளிக்கப்படும். இது குறிப்பிட்ட துறைமுகத்தின் மேம்பாட்டிற்காக மட்டுமல்லாமல், துறைமுகத்தோடு தொடர்புடைய தொழிற்சாலைகள் அமைந்த தொழிற்பேட்டையாக அமையும் வகையில் இருப்பது உறுதி செய்யப்படும். அந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான அனுமதிகளை அந்த துறைமுக மேம்பாட்டுக் கழகமே அளிக்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்.

துறைமுகங்களையும் அருகாமையில் அமைந்த தொழில் சார்ந்த நகரங்களையும் நவீன சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளோடு இணைக்கவும் அதைத் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்படும்.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இணையம் பெட்டகத் துறைமுகத் திட்டத்தை வரவிடமாட்டோம் என்ற உறுதியை குமரி மாவட்ட மக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அளிக்கிறது.

நிலக்கரி கொள்முதல்

தமிழகத்தின் மின் உற்பத்தியில் பிரதான பங்கை வகிப்பது அனல்மின் நிலையங்கள்தான். அதற்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் நிலக்கரி தொடர்ச்சியாகவும் போதிய அளவுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. தற்போது பத்து முதல் பதினைந்து நாட்களுக்கான நிலக்கரியை மட்டுமே இருப்பு வைப்பதற்கான வசதியும் வாய்ப்பும் இருக்கிறது.

நிலக்கரி இறக்குமதியில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், பிற மாநிலங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு வருவதில் ஏற்படும் தாமதங்கள் போன்றவையால் நிலக்கரி பற்றாக்குறை எற்பட்டு அனல்மின் நிலையங்கள் ஒன்றுமாற்றி ஒன்று உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு மாதமும் ஏற்படுகிறது.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து நிலக்கரி இறக்குமதியை தங்கு தடையின்றி மேற்கொள்ள வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிரந்தரக் கொள்கை ஒன்று மத்திய அரசின் அனுமதியுடன் வகுக்கப்படும். இந்தியாவின் பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரியைக் கொண்டுவருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் களையப்படும்.

அத்துடன் தமிழ்நாடு அனல்மின் நிலையங்களின் தேவைக்காக குறைந்தது முப்பது முதல் நாற்பத்தைந்து நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைக்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் எற்படுத்தித் தரப்படும். இதன் மூலம் அனல் மின் நிலையங்கள் தடையற்ற மின் உற்பத்தியைத் தொடர முடியும்.

கூடங்குளம் அணு உலை

கூடங்குளத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் மிக மோசமாக செயல்படுவதாக பல்வேறு தரவுகள் தெரிவிக்கின்றன. முதல் அணு உலை கடந்த நான்கு ஆண்டுகளில் 46 முறையும், இரண்டாவது அணு உலை கடந்த இரண்டு ஆண்டுகளில் 19 முறையும் பழுதடைந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இப்படி பாதுகாப்பும், பராமரிப்பும் இன்றி செயல்படும் விதம் பற்றி சுதந்திரமான அமைப்பைக் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கூடங்குளம் விரிவாக்க திட்டத்தை கைவிடவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும்.

மக்கள் நலப்போராட்ட வழக்குகள் வாபஸ்

· கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, வழக்குகளில் சிக்கிய பொதுமக்கள் இன்னமும் சிரமங்களை அனுபவித்து வருவதை மனதில் கொண்டு அவர்கள் மீதான வழக்குகளை நிபந்தனையின்றி முழுமையாக வாபஸ்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

· அதுபோல தூத்துக்குடி ஸ்டெர்லைட், கதிராமங்கலம் மீத்தேன் திட்டம், உயர்மின்கோபுரம் அமைத்தல், கெயில் குழாய் பதித்தல் போன்ற திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

கூடுதலாக சட்டப்பேரவைத் தொகுதிகள்

மத்திய அரசின் நிதியைப் பெறுவதில் தொடங்கி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது வரை நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி இருப்பதால், மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப தமிழகத்தில் கூடுதலாக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது.

இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் திட்டங்களும் அதன் வழியாக கிடைக்கிற பயன்களும் மக்களுக்குச் சென்று சேர்வதும், மக்கள் பிரதிநிதிகள் மக்களை அணுகி பணியாற்றுவதும் விரைவாக நடைபெறும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நம்புகிறது. இதனடிப்படையில் சட்டப்பேரவைத் தொகுதிகளை அதிகபட்சம் 2 லட்சம் வாக்காளர்களைக் கொண்டதாக மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளை இந்த இயக்கம் மேற்கொள்ளும்.

மீண்டும் சட்ட மேலவை

சமூகத்தில் மதிப்புமிக்கவர்களும், பல்வேறு துறை வல்லுநர்களும் ஆட்சியாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கி ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த உதவும் வகையில் தமிழ்நாட்டில் சட்ட மேலவை மீண்டும் உருவாக்கப்படும்.

புதிய ஊராட்சிகளை உருவாக்குதல்

தமிழகம் முழுவதும் பெரிய ஊராட்சிகளைப் பிரித்து மக்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய ஊராட்சிகள் உருவாக்கப்படும்.

எளியோருக்கும் உயர்ந்த மருத்துவ வசதி

ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை உரிமையாக கிடைக்க வேண்டியது மருத்துவ வசதி. உலகளவில் மருத்துவ துறையின் முக்கிய மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், மருத்துவ சுற்றுலாவின் (Medical Tourism) தலைநகரம் என சென்னை வர்ணிக்கப்பட்டாலும் இங்கே இன்னும் ஏழை, எளிய மக்களுக்குப் போதிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்பதை உணர்ந்திருக்கும் அமமுக, அதற்கான முன்னெடுப்புகளைச் செய்வதை மிக முக்கியமான கொள்கையாக கொண்டுள்ளது. பணக்காரர்களுக்கு கிடைக்கிற மருத்துவ வசதிகள், எல்லோருக்கும் அந்தந்த மாவட்டங்களிலேயே கிடைக்க வேண்டும் என்பதில் இந்த இயக்கம் உறுதியோடு பயணிக்கும்.

தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 3 கிலோமீட்டருக்குள் அடிப்படை மருத்துவ வசதி கிடைப்பதை இலக்காக நிர்ணயித்து திட்டங்கள் வகுக்கப்படும். வசதி படைத்தவர்களுக்கு கிடைக்கிற உயர் தரத்திலான மருத்துவ வசதிகள், அனைத்து தரப்பு மக்களுக்கும் அந்தந்த மாவட்டங்களிலேயே கிடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தற்போது அமலிலுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா போன்ற பேரழிவு நோய்களுக்கும் சிகிச்சை பெறும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்படும்.

இதய சிகிச்சை, குழந்தைகள் நலன், புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றுக்கு தனித்தனியாக அனைத்து வசதிகளையும் கொண்ட அரசு உயர்சிறப்பு மருத்துவமனைகள் தமிழகத்தின் முக்கிய நகரங்களையொட்டி உருவாக்கப்படும்.

விவசாயிகள் நலன்

"விவசாயம் தொழில் அல்ல; வாழ்க்கை முறை" என்பதை அடிப்படை கொள்கையாகக் கொண்டிருக்கிற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டின் ஒவ்வொரு விவசாயியும், 'நான் ஒரு விவசாயி' என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்ளக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதை முதன்மையாக கருதுகிறது. இதற்காக உற்பத்திச் செலவில் இருந்து குறைந்த பட்சம் 50% அதிகமாக விளைப் பொருட்களுக்கு விலை கிடைக்க வேண்டும்.

அந்த விலையையும் கூட மண்ணில் பாடுபட்டு உழைத்து விளைவிக்கிற விவசாயிகளே நிர்ணயிக்கக் கூடிய சந்தைச் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. 'எங்கும் எதிலும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை' என்பதை முன் வைத்து தமிழகம் முழுமைக்குமான ஒருங்கிணைந்த விவசாயத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த அமமுக முயற்சி எடுக்கும்.

தொலைநோக்கு பார்வையுடன் பட்டா நிலங்களில் சந்தனம் மற்றும் அகில் (Agar wood) போன்ற மரங்களை வளர்க்க ஊக்குவிக்கப்படும். இதன்மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் கிராமப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். மாணவ, மாணவியரை இத்திட்டத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் பெரும் வெற்றி பெற வைக்கமுடியும். அவர்களின் எதிர்காலத்திற்கும் அது உதவியாக இருக்கும்.

விவசாயத்தை, விவசாய நிலங்களை அழிக்கிற ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஈத்தேன் போன்ற எந்த திட்டங்களையும் அமமுக தமிழ் மண்ணில் அனுமதிக்காது. இதற்காக எப்போதும் விவசாயிகளின் பக்கம் நின்று செயல்படுவதை உணர்வுப்பூர்வமான கடமையாகக் கருதுகிறது.

· விவசாயிகளுக்கு வீடு தேடி உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் மானியத்துடன் வழங்கப்படும்.

· பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை விற்பதற்குள் விவசாயிகள் அனுபவிக்கும் பெரும் இன்னலை போக்கும் வகையில் விவசாயிகளின் இடத்திற்கே சென்று நெல் கொள்முதல் செய்யப்படும்.

· நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.3,000 வரையிலும், கரும்புக்கான ஆதாரவிலை டன்னுக்கு ரூ.4,000 ஆகவும் நிர்ணயிக்கப்படும். கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகையைப் பெற்றுத்தருவதில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்து, காலக்கெடு நிர்ணயித்து அத்தொகையை அளித்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

· சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், தேயிலை, பருப்பு வகைகள், வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, மிளகாய் உள்ளிட்டவற்றுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.

· விண்ணப்பித்த 60 நாட்களில் விவசாய பம்புசெட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

· விவசாயத்திற்கான கட்டணமில்லா மின்சாரம் தொடரும்.

· தேவையான இடங்களில் ஆறுகளின் குறுக்கே முதற்கட்டமாக 100 தடுப்பணைகள் கட்டப்படும்.

· இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பெயரில் காவிரி டெல்டாவில் இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்துவதுடன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

· மரபணு மாற்றப்பட்ட விதைகள், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படும். இயற்கை வழி உரங்கள், மருந்துகள் பயன்பாட்டை அதிகபடுத்துவதுடன்

அவற்றுக்கான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளும் உருவாக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையான இயற்கை வழி வேளாண்மையை மேற்கொள்கிற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான சிறப்பு பன்நோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும்.

· நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான உரிய சட்டம் நிறைவேற்றப்படும்.

· ஆறு, ஏரி, கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் ஓரங்களில் பனை மரங்களை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொண்டுநிறுவனங்கள், பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஓர் இயக்கமாகவே மேற்கொள்ளப்படும்.

· 100 நாள் வேலை எனப்படும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதியளிப்புத்திட்டத்தில் விவசாயம், தோட்டக்கலை சார்ந்த பணிகளும் சேர்க்கப்படும். இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்படும் ஊதியம் எந்தவித சேதாரமும் இன்றி பயனாளிகளுக்கு முழுமையாக சென்று சேருவது உறுதி செய்யப்படும்.

· பனைவெல்லம், நாட்டுச்சக்கரை உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் அவற்றை அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கும்.

· மூலிகை மற்றும் மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கவும், அவை தொடர்பான தொழில் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

· அரசின் முன்முயற்சியுடன் உழவர் பெருங்குடி மக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் நடமாடும் விவசாய சந்தைகள் உருவாக்கப்படும். அரசு மாணவர் விடுதிகள், அம்மா உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்கு விவசாயிகளிடம் இருந்தே நேரடியாக காய்கறிகளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் உணவுக்கு தரமான காய்கறிகள் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்கும்.

· இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனால், இதை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன. பயிர்க்காப்பீட்டு விஷயத்தை அமல்படுத்துவதில் தனியார் நிறுவனங்களை அனுமதித்ததால்தான் இந்த நிலை என்று விவசாயிகள் நினைக்கிறார்கள்.

எனவே, தனியார் நிறுவனங்களை அப்புறப்படுத்திவிட்டு, பொதுத்துறை நிறுவனமான, தேசிய வேளாண் பயிர்க்காப்பீட்டு நிறுவனம் மூலமே பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை எந்தவித தாமதமுமின்றி கிடைப்பதற்கு வசதியாக அந்தந்த மாவட்டங்களிலேயே உரிய அலுவலர்களுடன் சிறப்பு அலுவலகங்கள் அமைக்கப்படும்.

முன்னுதாரணமான நீர் மேலாண்மை

புவியியல் அடிப்படையில் இயற்கையாகவே நீருக்கு வஞ்சிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு அமைந்துவிட்டது. அதனால்தான் நம்முடைய நீர்த் தேவைகளுக்கு அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்க வேண்டியுள்ளது.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கிற ஆறுகளையும், வாய்க்கால்களையும், வடிகால்களையும் சீரழிவில் இருந்து மீட்டெடுப்பது அத்தியாவசியம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நினைக்கிறது.

தேவையான இடங்களில் தடுப்பணைகளைக் கட்டுவதையும், ஏற்கனவே இருக்கிற நீர்நிலைகளைப் பராமரிப்பதையும், புதிய நீர்நிலைகளை உருவாக்குவதையும் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். நீர்ப்பாசனத்திற்கு என தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி இவற்றை எல்லாம் சிறப்புற செயல்படுத்திட இந்த இயக்கம் உறுதி ஏற்கிறது.

ஜெயலலிதா கனவுத் திட்டமான மழை நீர் சேகரிப்பை எல்லா முனைகளிலும் உறுதியோடு செயல்படுத்துவோடு, நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதையும், தமிழ்நாட்டிற்கான தனி தண்ணீர் கொள்கை உருவாக்குவதையும் அவசியமான பணிகளாக கழகம் கருதுகிறது.

நதி நீர் இணைப்பு

காவிரி விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பைப் பெற்ற பிறகும் நமக்குரிய நீரைத் தராமல் கர்நாடகா நம்மை வஞ்சிக்கிறது. முல்லைப் பெரியாரிலும் நமக்கான இடர்பாடுகள் தொடர்கின்றன. மத்தியில் அமையும் அரசுகளும் தங்களின் அரசியல் சுயநலத்திற்காக அதை வேடிக்கை பார்க்கும் அரசாகவும் அந்த துரோகச் செயல்களுக்கு துணைபோகும் அரசாகவும் அமைகின்றன.

இந்தப்பிரச்சனைக்குத் நிரந்தர தீர்வாக தென்மாநில நதிகளை, குறிப்பாக கோதாவரி - கிருஷ்ணா-காவிரி நதிகளை இனைக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதற்காக மத்திய அரசின் நிதி கிடைப்பதில் தாமதம் மற்றும் சிக்கல் எழுந்தால், உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிதி முகமைகளின் நிதி உதவி பெற்று இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அமமுக பாடுபடும்.

மாநிலத்துக்குள்ளாக ஓடும் சிறு நதிகளை இணைக்கும் திட்டங்களுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமை தரப்படும். நீண்டகாலமாக கிடப்பில் இருந்து தற்போது பெயரளவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம், காவிரி, அக்கியாறு, தென்வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு ஆகிய 6 ஆறுகளை இணைக்கும் கட்டளை கதவனையுடன் கூடிய காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மிகத் தாமதமாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அத்திக்கடவு அவினாசி திட்டம் உண்மையில் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் முதலில் பவானி சாகர் அணையின் நீர் வரத்து உயர வழிவகை செய்ய வேண்டும். இதற்காக மேற்கு மண்டல விவசாயிகளின் நீண்டகால கனவுத் திட்டமான பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தினை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியம்

தமிழகத்தின் விவசாயத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது காவிரி பாயும் பகுதிகளில் நடக்கும் விவசாயம்தான். அந்த விவசாயம் செழித்தோங்க தங்கு

தடையற்ற காவிரி நீர் டெல்டாவின் கடைமடைப் பகுதி வரை பாய வேண்டியது அவசியம். இதை உறுதிப்படுத்தும் வகையில் காவிரி நடுவர்மன்ற இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தவர் ஜெயலலிதா.

அதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை அமைத்தது மத்திய அரசு. இதன் காரணமாக தமிழக அரசுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் காவிரியின் குறுக்கே மேகாதாதுவில் அணை கட்டுவதற்காக ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. அங்கே அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த டெல்டாவும் பாலைவனமாகும் என்பதை உணர்ந்து தமிழக விவசாயிகள் கொதித்து போயிருக்கிறார்கள்.

அவர்களின் கொதிப்பை போக்கும் விதமாக மேகதாதுவில் அணை கட்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்வதையும், இனிவரும் காலங்களில் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தக் கட்டுமானப் பணிகள் நடந்தாலும் அது காவிரி பாயும் மாநிலங்களின் ஒட்டுமொத்த அனுமதி மற்றும் ஒப்புதலை பெறாமல் நடக்க முடியாது என்பதையும் அமமுக உறுதி செய்யும்.

· காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரிலேயே அதிகாரமுள்ள அமைப்பாக அது அமைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை நடுவர் மன்றத் தீர்ப்பை முழுமையாகவும், முறையாகவும் அமல்படுத்தும் வகையில் கூடுதல் அதிகாரங்களை தற்போதுள்ள ஆணையத்திற்கு வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்.

· குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாத்ததில் காவிரி நீரைப் பெறும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை இந்த காவிரி ஆணையம் பெற்றிருக்கும் நிலையை ஏற்படுத்துவோம்.

· தமிழக விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதையும், முல்லை பெரியாரில் இராண்டாவது அணை கட்டும் முயற்சியையும் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கமாட்டோம்.

விவசாயத்துடன் இணைந்த தரிசு நில மேம்பாடு

நிரந்தர நில உரிமைப் பத்திரங்கள் மூலமாக தனியார் நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, புறம்போக்கு நிலங்களை பயன்பாட்டின் அடிப்படையில் பிரித்து, தரிசு நிலங்களை மேம்படுத்தி மானாவாரி பயிர் மற்றும் பழவகை மரங்கள், வேம்பு, முருங்கை, பனை மற்றும் புளிய மரங்கள் பயிரிடும் வகையில் அந்நிலத்தை குறைந்தபட்சம் சீர்திருத்தி, விவசாயத்தின்பால் ஆர்வம் கொண்டு, நிலமில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர் குழுவுக்கு முன்னுரிமை அளித்து அந்நிலங்களை குறைந்தது ஐந்து ஏக்கர் அளவுக்கு விதிமுறைகளின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்நடை வளர்ப்பு

· தரிசு நில வகைப்பாட்டிற்குப் பிறகு மீதமிருக்கும் நிலத்தை விவசாயப் பயன்பாட்டிற்குப் பயன்படுவது போலவே, பால் வளத்தைக் கருத்தில் கொண்டு மாட்டுப் பண்ணை மற்றும் ஆடு மற்றும் கோழி வளர்ப்பு மையங்கள் அமைக்கவும் படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த இடம் பகிர்ந்தளிக்கப்படும்.

இந்த தரிசு நிலங்களை விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்புத் தேவைகளுக்காக வழங்கப்படும்போது, அரசுக்கு ஏதேனும் வருவாய் கிடைத்தால் அந்தத் தொகை சம்மந்தப்பட்ட கிராமத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

· கோழிப்பண்ணை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அத்தொழிலில் நவீனமயமாக்கலை ஊக்குவிக்கவும், ஏற்றுமதியை அதிகப்படுத்தவும் தற்போது மாநில அரசு வழங்கும் 25% என்ற மானியத்தை மேலும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் கோழிப்பண்ணை அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
· நாட்டு மாடு மற்றும் நாட்டு நாய் வகைகளை பாதுகாக்கவும், அவற்றை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் நலன்

அரசு எந்திரத்தின் அச்சாணிகளாக இருக்கும் அரசு ஊழியர்களும், எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கான பணியில் தங்களை அர்ப்பணித்திருக்கும் ஆசிரியர்களும், மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களும் எதற்காகவும் போராடாத சூழ்நிலையை ஏற்படுத்துவது வளர்ச்சிக்கு முக்கியம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தரப்பட வேண்டும்.

அதேநேரத்தில் காலத்திற்கேற்ப நிர்வாகத்தை மேம்படுத்துவதிலும், கற்பித்தலைத் தரமாக்கிடுவதிலும், உள்ளன்போடு சிகிச்சை அளிப்பதிலும் அவர்களுக்குள்ள பொறுப்பை உணர்த்தி, அரசு ஊழியர் – ஆசிரியர்கள், மருத்துவர்களின் முழுமையான பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் அரசாட்சி நடக்க வேண்டும் என்பதே அமமுக கொள்கை.

காலியாக உள்ள ஆசிரியர், அரசு ஊழியர் உள்ளிட்ட அரசுப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். பகுதி நேர ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், இசை, ஓவியம் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு காலியிடங்களை நிரப்புவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையே செயல்படுத்தப்படும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே குடியிருப்பு வசதியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் அங்கே போக மறுப்பதற்கு குடியிருப்பு வசதிகள் போதிய அளவு இல்லாமல் இருப்பதே காரணம்.

இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சி ஒன்றியம் தோறும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

100 பேருக்கு குறையாமல் வேலைசெய்யும் அரசு அலுவலக வளாகங்கள் அனைத்திலும் சலுகை விலை உணவகங்கள் அமைக்கப்படும். இந்த உணவகங்களை நடத்த மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பெண்கள் நலன் மற்றும் முன்னேற்றம்

அனைத்து துறைகளிலும் பெண்கள் கால்பதித்து சாதனை சிகரங்களை தொட்டு வரும் இந்த நேரத்தில் அரசியலில் பெண்களுக்கான உரிய பங்கு என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது. மத்திய அரசை வலியுறுத்தி நாடளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் பருவம் எய்தும் காலம் தொடங்கி அவர்களின் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதை மனதில்வைத்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு தொடங்கி கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அவர்கள் கல்வி கற்கும் வளாகத்திலேயே மருத்துவ பரிசோதளை செய்யவும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் பிரத்யேக அடையாள எண்ணுடன் அவர்களின் மருத்துவ குறிப்புகளை பதிவு செய்து கணினி மயமாக்கி பாதுகாக்க வழிவகை செய்யப்படும்.

இதன்படி ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஓர் அடையாள எண்ணுடன் மருத்துவ குறிப்புகளை பதிவு செய்து கொள்ளும் ஒரு மாணவி, தனது கல்லூரி படிப்பு வரை எந்த ஊரில், எந்தக் கல்வி நிலையத்தில் கல்வி பயின்றாலும் அதே எண்ணைக் குறிப்பிட்டு தொடர் மருத்துவ அறிவுரைகளையும், சிகிச்சைகளையும் எளிதில் பெற முடியும்.

ஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிடரி நாப்கின் வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் ஒரு பெண் ஆசிரியையின் மேற்பாற்வையில் சங்கடம் இல்லாமல் இந்த இலவச விநியோகம் நடக்க பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்படும்.

இந்த இலவச சானிடரி நாப்கின் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்டம் தோறும் மையங்கள் அமைக்கப்படும். அந்தந்த பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இம்மையங்களில் உரிய பயிற்சி மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கென்று சிறப்பு உளவியல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். பணிக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களும் வயது வித்தியாசம் இன்றி உளவியல் ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் பெயரில் ரூபாய் 50000 வைப்புநிதியாக வங்கியில் போடப்படும். அதே குடும்பத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டதற்கான சான்றிதழை ஆதாரமாக வைத்து இரண்டாவது பெண் குழந்தையின் பெயரிலும் ரூபாய் 50,000 வைப்பு நிதியாகப் பெயரில் போடப்படும். அப்பெண் குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் அவர்களின் மேல் கல்விகாகவோ, திருமணத்திற்காகவோ அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளலாம்.

பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக சிறப்பு விடுப்பு (Special Leave) அளிக்கப்படும்.

ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்டு, தற்போது நிதிப்பற்றாக்குறை எனக் கூறி கடந்த இரண்டாண்டுகளாக சரிவர செயல்படுத்தப்படாத, மகப்பேறு கால நிதி உதவித்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கான திருமண உதவித்திட்டத்தின் கீழ் தாலிக்காக 8 கிராம் தங்கமும், உதவித்தொகை ரூ.25,000லிருந்து ரூ50,000/- ஆகவும், பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு தாலிக்காக 8 கிராம் தங்கத்துடன், ரூ.50,000 மாக உள்ள உதவித்தொகை ரூ.1,00,000/- ஆகவும் உயர்த்தப்படும்.

கணவனை இழந்த பெண்களின் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் டாக்டர் தர்மாம்பாள் திட்டத்தின் கீழ் கல்வித்தகுதி தேவையில்லாத பெண்களுக்கு விதவை மறுமணத்திற்கான தற்போது வழங்கப்படும் 4 கிராம் தங்கத்துடன், ரூ.25,000 மாக உள்ள உதவித்தொகை ரூ.50,000/- ஆக உயர்த்தப்படும். பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த விதவைப் பெண்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கத்துடன் தற்போதுள்ள ரூ.50,000 உதவித்தொகை ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும்.

காஸ் சிலிண்டருக்கு மானியம்

தமிழகத்தில் உள்ள சுமார் இரண்டு கோடிக்கும் மேலான குடும்பங்கள் சமையல் காஸ் இணைப்பை பெற்று இருக்கின்றன. காஸ் சிலிண்டருக்கான விலை நாளுக்குநாள் ஏறி வரும் நிலையில் ஏழை மற்றும் நடுத்த குடும்பங்களுக்கு மாதத்திற்கு ஒரு சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியத்தொகையாக வழங்க கழக அரசு ஏற்பாடு செய்யும்.

திருநங்கையர் நலன்

திருநங்கைகளுக்கு அரசின் சார்பில் தங்கும் விடுதிகள் உருவாக்கப்படும். அவர்களும் மற்றவர்களைப் போல கௌரவத்தோடு வாழ்வதற்கான கடனுதவிகள், திட்டங்கள் செயல்படுத்தப்படும். தகுதியும் திறமையும் உள்ள திருநங்கையருக்கு அரசு வேலைகளில் உரிய வாய்ப்பளிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்