அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு பலத்தைக் காட்ட ஊர்வலம் சென்ற சிவகங்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன்

சிவகங்கை தொகுதியில் சீட் மறுக்கப்பட்டதால் போர்க்கொடி உயர்த்தி வரும் அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு தங்களது பலத்தை காட்ட அதே பகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.

அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொகுதியான சிவகங்கையை அதிமுக தலைமை செந்தில்நாதனுக்கு ஒதுக்கியது. இதனால் அமைச்சரின் ஆதரவாளர்கள் நேற்றுமுன்தினம் ஊர்வலமாக சென்றும், மறியல் செய்தும் எதிர்ப்புக் காட்டினர்.

இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர்கள் பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), எம்.மருதுஅழகுராஜ் (திருப்பத்தூர்), எஸ்.நாகராஜன் (மானாமதுரை) ஆகியோர் வந்தனர். அவர்களை சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

மானாமதுரை வடக்கு ஒன்றியச் செயலாளர் சிவசிவஸ்ரீதரன் வெற்றி வேல் பரிசாக கொடுத்து வரவேற்றார். ஆனால் அவர்களது வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதரவாளர்கள் செல்லாமல் புறக்கணித்தனர்.

தொடர்ந்து காரில் கட்சியினருடன் ஊர்வலமாக வந்த வேட்பாளர்கள், சிவகங்கை சிவன் கோயிலில் வழிபாடு செய்தனர்.

பிறகு போர்க்கொடி உயர்த்தி வரும் அமைச்சருக்கு தங்களது செல்வாக்கை நிருபிக்கும் வகையில் அமைச்சர் ஆதரவாளர்கள் சென்ற அதே பகுதியில் வேட்பாளர்கள் கட்சியினருடன் ஊர்வலமாக சென்றனர்.

தொடர்ந்து அரண்மனைவாசலில் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருபடத்திற்கு வேட்பாளர்கள் மரியாதை செலுத்தினர். பிறகு செந்தில்நாதன் பேசியதாவது: சிறப்பான வரற்பை பார்க்கும்போது எங்களை 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்தள்ளது,’ என்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE