25 நாட்கள் கடுமையாக உழைத்தால் 23 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 12) பாமக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
"தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நாம் வெற்றியை நோக்கி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு ஆகியவற்றை நாம் வெற்றிகரமாக முடித்திருக்கிறோம். நமக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீட்டில் எந்த மனக்கசப்பும் இல்லை என்பதே நமது அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணிநேரத்தில் 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்றும் நாம் வெற்றிகரமாக அறிவித்திருக்கிறோம்.
» நீலகிரியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எம்எல்ஏவே நிர்வாகியைத் தாக்கியதால் பரபரப்பு
» அண்ணன் திமுக, தம்பி அதிமுக: ஆண்டிபட்டியில் 2வது முறையாக மோதிக் கொள்ளும் சகோதர வேட்பாளர்கள்
பாமகவின் வேட்பாளர் பட்டியலைப் பார்க்கும் போது அது அனுபவ முதிர்ச்சி, இள ரத்தம், மகளிர் சக்தி, சிறுபான்மைக்கான பிரதிநிதித்துவம், பட்டியலினப் பன்முகத் தன்மை என அனைத்தும் கலந்த கலவையாகக் காட்சியளிக்கிறது.
பாமக தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச்செயலாளர்கள் திருக்கச்சூர் கி. ஆறுமுகம், கே.எல். இளவழகன், டி. கே. இராசா, எஸ்.எக்ஸ். ராஜமன்னார் ஆகிய ஐவரும் சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளுக்காக களமாடிய அனுபவம் கொண்டவர்கள். மகளிரின் பிரதிநிதியாக பொருளாளர் ம.திலகபாமாவும், சிறுபான்மையினரின் பிரதிநிதியாக ஏ.வி.ஏ.கஸ்ஸாலியும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கட்சிப் பணியில் சிறப்பாக செயல்பட்ட அனுபவம் கொண்ட மீ.கா.செல்வகுமார், வழக்கறிஞர் கே.பாலு, தருமபுரி வெங்கடேஸ்வரன், சேலம் அருள், செஞ்சி எம்.பி.எஸ். இராஜேந்திரன், சித்தமல்லி பழனிச்சாமி, சோளிங்கர் கிருஷ்ணன், மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம், கும்மிடிப்பூண்டி பிரகாஷ் ஆகியோர் களத்தில் தங்கள் அனுபவத்தைக் காட்டுவார்கள்.
அரசியலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவமும், பிரதிநிதித்துவமும் வழங்குவதில் பாமகவுக்கு இணை பாமகதான் என்பதை உறுதி செய்யும் வகையில் விருத்தாசலம் கார்த்திகேயன், நெய்வேலி ஜெகன், கீழ்வேளூர் வேத.முகுந்தன், காஞ்சிபுரம் மகேஷ்குமார், சங்கராபுரம் ராஜா, வந்தவாசி முரளி சங்கர் ஆகியோருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
பாமகவின் வேட்பாளர்கள் அனைவரும் பாமகவின் வளர்ச்சிக்காக ஆற்றிய உழைப்பு, தியாகம், அறிவுசார்ந்த பணி, களப்பணி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பாமகவின் இவர்கள் அளவுக்கும், இவர்களை விடக் கூடுதலாகவும் தியாகம் செய்தவர்கள், உழைத்தவர்கள், அறிவார்ந்த பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் உள்ளனர். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் 23 இடங்கள் மட்டுமே பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், மாவட்டம் சார்ந்தும், தொகுதிகளைச் சார்ந்தும், வெற்றி வாய்ப்புகளை கருத்தில் கொண்டும் தான் வாய்ப்பு வழங்க முடியும் என்பதால் தான் மேற்கண்ட 23 வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாதவர்கள் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என்று பொருள் அல்ல. அவர்கள் இன்னும் உயர்ந்த பதவிகளுக்குக் கூட தகுதியானவர்கள் தான். அதற்கான சூழலும் வாய்ப்பும் இப்போது அமையவில்லை என்பது தான் உண்மை.
பாமக இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இப்போது இருப்பதை விட செல்வாக்காகவும், வலிமையாகவும் அரசியல் பயணம் மேற்கொள்ளவிருக்கும் கட்சியாகும். அப்போது இன்னும் உயர்ந்த பதவிகளை பாமகவுக்காக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், உழைத்தவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள் என்பது தான் உண்மை.
இந்த உண்மையை உணர்ந்த சிங்கக் குட்டிகள் அனைவரும் பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் தீவிர களப்பணியையும், வாக்கு சேகரிப்பையும் தொடங்கி விட்டதை பார்க்க முடிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்றைய பொழுதையும் சேர்த்து இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ளன. வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கி விட்டது. இந்தத் தேர்தலை ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெறும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தைப் போலத் தான் நாம் அணுகியாக வேண்டும். அந்த அளவுக்கு நமக்கு கால அவகாசம் மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், மிகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் களத்தில் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த உண்மையை புரிந்து கொண்டு, இன்று முதல் 25 நாட்களுக்கு நாம் கடுமையாக உழைத்தால் சட்டப்பேரவையின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில் தொடங்கி ஆத்தூர் (திண்டுக்கல்) வரை அனைத்து 23 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே பல்வேறு கால கட்டங்களில் கூறியவாறு நமது சாதனைகளைக் கூறித் தான் இந்தத் தேர்தலை சந்திக்க வேண்டும்; மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். அதற்கு திண்ணைப் பரப்புரை தான் மிகச்சிறந்த ஆயுதம் ஆகும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கியுள்ள வன்னிய சமுதாயத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தனி இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று நாம் நடத்திய போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் குறித்தும், நமது கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு மட்டும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50% இடப்பங்கீடு வழங்கப்பட்டு இருப்பது குறித்தும் வீடு, வீடாக சென்று பரப்புரை செய்ய வேண்டும்.
இடப்பங்கீடு வழங்கிய அதிமுக அரசுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், அந்த ஆட்சி மீண்டும் அமைவதை உறுதி செய்ய வேண்டிய கடமை பாட்டாளி மக்களுக்கு இருப்பதையும் நினைவூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து சமூக மக்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுத்துத் தருவதற்காக தேர்தலுக்குப் பிறகு ராமதாஸ் போராடவிருக்கிறார் என்பதை மக்களுக்கு புரியும் வகையில் விளக்க வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, கடலூர் & நாகை மாவட்டங்களில் அமையவிருந்த சுற்றுச்சூழலை பாதிக்கும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலத் திட்டத்தை கைவிட்டது, மேட்டூர் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தியது, எண்ணேகோல் புதூர் திட்டப் பணிகளைத் தொடங்கியிருப்பது, அத்திக்கடவு & அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியது, தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப் பெற்றது, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தைக் கைவிட்டது, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியது உள்ளிட்ட பாமக கோரிக்கை, ஆலோசனைகளை ஏற்று அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். அனைத்து தோழமைக் கட்சியினரையும் அரவணைத்து செயல்பட வேண்டும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு சிறு மனக்குறையும் இல்லை; அவரது நல்லாட்சி தொடர வேண்டும்; அவரே மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் நிலவுகிறது. அந்த எண்ணத்தை திண்ணமாக்கும் வகையில் நமது களப்பணி அமைய வேண்டும்.
தமிழ்நாட்டில் மக்கள் அச்சமின்றி நடமாட வேண்டும்; வணிகர்கள் அச்சமின்றி வணிகம் செய்ய வேண்டும்; நிலவுடைமையாளர்கள் தங்களின் நிலம் அபகரிக்கப்பட்டு விடுமோ? என்று அஞ்சி நடுங்கும் நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது; பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தொல்லையின்றி சென்று வரும் நிலை உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் அதற்கு பாமகவும், அது அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற வேண்டும் என்பதை திண்ணைப் பரப்புரைகள் மூலமும், தெருமுனைக் கூட்டங்கள் வழியாகவும் மக்களிடம் கூற வேண்டும்.
பாமக போட்டியிடும் 23 தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மீதமுள்ள 211 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது இன்னும் பல மடங்கு முக்கியமாகும். இதை உணர்ந்து பாமகவினர் களப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்; அடுத்த 25 நாட்களும் மக்கள் சந்திப்பை மட்டுமே தலையாய கடமையாகக் கொண்டு 23 தொகுதிகளில் பாமகவின் வெற்றியையும், 234 தொகுதிகளிலும் நமது கூட்டணியின் வெற்றியையும் உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago