ஆரூண் எம்.பி. மீது பாய்ந்தது வழக்கு: 500-க்கும் மேற்பட்ட வாகன அணிவகுப்பால் நடவடிக்கை

தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் திங்கள் கிழமை விதிமுறைகளை மீறி 500 வாகனங்களுடன் சென்று பிரச்சாரம் செய்தார். இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில் போலீ ஸார் அவர்மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆரூண், ஒவ்வொரு முறையும் தேர்தலில் பிரச்சாரத்தைத் தொடங்கும்போது கோயில்களில் பூஜை செய்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆதரவாளர்களுடன் சென்று பிரச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த முறை அவர் பிரச்சாரத்தைத் தொடங்கும்முன்பே `தி இந்து' நாளிதழ் தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஆரூண், ஆயிரம் வாகனங்களுடன் சென்று பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் என செய்தி வெளியிட்டது.

செய்தியில் குறிப்பிட்டபடியே ஜே.எம்.ஆரூண் திங்கள்கிழமை தேனி மாவட்ட எல்லையான கெங்குவார்பட்டியில் 500 வாகனங்களுடன் பிரச்சாரத்தை ஆரவாரமாகத் தொடங்கினார். அவரது பிரம்மாண்ட வாகன அணிவகுப்பு பிரச்சாரத்தால், தேனி மாவட்டச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

இதுபற்றிய தகவல் அறிந்த தேனி மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான பழனிச்சாமி, வாகன அணிவகுப்பு குறித்து தீவிரமாக விசாரிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ஜே.எம்.ஆரூண் மீது 4பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேவதானப்பட்டி, சின்னமனூர், பழனிச்செட்டிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர். கூடலூர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட காவல்நிலையங்களிலும் ஜே.எம்.ஆரூண் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி ஆட்சியர் பழனிச்சாமியிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் விதிமுறை மீறி செயல் பட்டதற்காக ஆரூண் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இதுபற்றி மேல் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

தேனி அருகே திங்கள்கிழமை தெங்குவார்பட்டியில் இருந்து தேவதானப்பட்டி நோக்கி செல்லும் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூணின் பிரச்சார வாகனங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE