காற்று மாசுப்பாட்டை குறைக்க சுத்தமான காற்று திட்டம்: ரூ.451 கோடியில் நிறைவேற்ற மதுரை மாநகராட்சி முடிவு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகரில் காற்று மாசுப்பாட்டை 70 சதவீதம் குறைக்க ரூ.451 கோடியில் சுத்தமான காற்று திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி தயார் செய்துள்ளது.

நாடு முழுவதும் காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களை தேர்வு செய்து, அந்த நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைக்கவும், சுத்தமான காற்று பொதுமக்களுக்கு கிடைக்கவும் மத்திய அரசு சுத்தமான காற்று திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

தமிழகத்தில் 2017ம் ஆண்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எடுத்த காற்று மாசு அடிப்படையில் காற்று மாசுபாடு அதிகமுள்ள சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் காற்று மாசு துகள்களின் அளவு சில சமயங்களில் 70 முதல் 100 வரை சென்றவிடுகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரியம் 2017ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்புபடி மதுரையில் காற்றில் மாசுதுகள்களின் அளவு 67.1 மைக்ரோ கிராம் அளவு இருந்துள்ளது.

இதே வேகத்தில் காற்றுமாசுபாடு அதிகரித்தால் ஒரு கட்டத்தில் மதுரை நகர்ப்பகுதிகளில் சுவாசிக்க சுத்தமான காற்றே இருக்காது. மதுரையில் ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கு மேலான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த வாகனங்கள் வெளியிடும் புகை, வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் புழுதியால் காற்று மண்டலம் பலமாக பாதிக்கப்படுகிறது. அதுதவிர சாலை மாசு, போக்குவரத்து நெரிசல், கட்டுமானப்பணிகள் உள்ளிட்டவற்றால் காற்று மாசு அதிகமாக நடக்கிறது.

இந்த காற்று மாசுப்பாட்டை 70 சதவீதம் குறைக்க ரூ.451 கோடியில் சுத்தமான காற்று திட்டத்தை மதுரையில் செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மத்திய அரசின் சுத்தமான காற்று திட்டம் அடிப்படையில் மதுரையில் தற்போதுள்ள காற்று மாசுப்பாட்டை 2025ம் ஆண்டிற்குள் 70 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளோம். 2021ம் ஆண்டில் 31 சதவிதமும், 2022ம் ஆண்டில் 45 சதவீதமும், 2023ஆம் ஆண்டில் 55 சதவீதமும், 2024ஆம் ஆண்டில் 65 சதவீதமும், 2025 ஆம் ஆண்டில் 70 சதவீதமும் காற்று மாசு குறைக்கப்படும்.

அதற்காக இந்தத் திட்டத்தில் காற்று மாசு அதிகமுள்ள சாலைகள், நகர்ப்புற சந்திப்புகளில் காற்று சுத்திகரிப்பு அமைப்புகள் நிறுவப்படுகிறது. காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வாயுக்களில் உள்ள கேடு விளைவிக்கும் நச்சுப்பொருட்களை குறைத்து காற்றை சுத்தப்படுத்தும்.

அதுபோல் கட்டுமான கழிவுப்பொருட்களை அதே இடத்தில் மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், இனி கட்டப்படும் எந்த ஒரு கட்டிடங்களும் நல்ல காற்றோட்டம் கிடைக்கக்கூடிய வகையில் இடம் விட்டு கட்டினால் மட்டுமே மாநகராட்சி அனுமதி வழங்கும்.

இதுபோன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையால் மதுரையில் காற்று மாசுப்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது. மத்திய அரசுக்கு இந்த திட்டம் தயார் செய்து அனுப்பியுள்ளோம். அவர்கள் அனுமதி வழங்கி நிதி ஒதுக்கியதும் இந்த திட்டம் தொடங்கப்படும், ’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE