ஊபா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக - அதிமுக அரசுகள்; தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

ஊபா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்கும், அதிமுக அரசுக்கும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 10) வெளியிட்ட அறிக்கை:

"ஊபா (UAPA) எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 72 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2019ஆம் ஆண்டு இச்சட்டத்தின் கீழ் 1,226 வழக்குகள் பதியப்பட்டு, 1,948 பேர் கைது செய்யப்பட்டனர். 2015 -ம் ஆண்டில் 897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,128 பேர் கைது செய்யப்பட்டனர். 2016-ம் ஆண்டில் 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 999 பேர் கைது செய்யப்பட்டனர். 2017-ம் ஆண்டில் 901 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,554 பேர் கைது செய்யப்பட்டனர். 2018-ம் ஆண்டு 1,182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,421 பேர் கைது செய்யப்பட்டனர்.

2019-ம் ஆண்டில் ஊபா சட்டத்தின் கீழ் அதிக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. அந்த வருடத்தில் தமிழகத்தில் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 498 பேரும், தமிழகத்தில் 308 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட ஊபா சட்டம், இன்றைக்கு அடக்குமுறைச் சட்டமாக மாறியிருக்கிறது. அமைதியான மாநிலம் என்றும், தீவிரவாதத்தின் நிழல் கூடப் படாத மாநிலம் என்றும் ஆட்சியாளர்களால் சொல்லப்படும் தமிழகத்தில், இந்தச் சட்டம் கடந்த சில ஆண்டுகளாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகநூலில் பதிவிட்டதற்காக இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பலரைக் கைது செய்த கொடுமைகள் எல்லாம் அரங்கேறியுள்ளன.

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிதி திரட்டிக் கொண்டிருந்த ஒரு மாணவியை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைக்கு எதிராக இச்சட்டத்தை ஆட்சியாளர்கள் பயன்படுத்துவது ஆபத்தானதாகும். தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினத்தவர் மீது ஊபா சட்டம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சமூகச் செயற்பாட்டாளர்களை இந்தச் சட்டத்தைக் காட்டி அரசு மிரட்டி வருகிறது. மதவாத வன்முறை, பயங்கரவாதம் இல்லை என்கிறது பாஜக அரசு. அதேசமயம், அரசு சொத்தை சேதப்படுத்துவதைப் பயங்கரவாத செயலாக அரசு பார்க்கிறது.

மக்களுக்காக நடக்கும் போராட்டங்களை இந்தச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத செயலாக வரையறுக்க முடியும். ஒவ்வொரு குற்றத்திற்கும் ஏற்கெனவே தனித்தனி குற்றவியல் சட்டங்கள் இருக்கும்போது, அந்தக் குற்றங்களுக்கான தண்டனையை ஊபா சட்டத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?

பயங்கரவாதம் குறித்து உலகளாவிய அளவில்கூட தெளிவான வரையறை இல்லை. ஆனால், இங்கு மதவாதத்தை எதிர்த்தால், மக்கள் உரிமைக்காகப் போராடினால் ஊபா சட்டத்தைப் பயன்படுத்தும் அபாயகரமான சூழல் உள்ளது.

மதத்தின் பெயரால் வன்முறை செய்து பல உயிர்களை இழக்கக் காரணமான இந்து அமைப்புகள் இங்கே தேசப் பற்றாளர்கள். ஆனால், மக்களுக்காக நியாயமாகப் போராடுபவர்கள் தீவிரவாதிகளா? ஊபா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும், அதற்குத் துணைபோகும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசுக்கும் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்