திருச்சி சிறுகனூரில் திருப்புமுனை கண்டோம்; தேர்தல் களத்தில் வெற்றிச் சிகரத்தைக் காண்போம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 9) தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
"மனதெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது உங்கள் திருமுகம்தான். மகத்தான மாநாடு போல, மாற்றாரை மருள வைக்கும் வகையில் நடைபெற்ற திருச்சி - சிறுகனூர், தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டத்தின் எண்ண அலைகள் எனது இதயக் கரைகளில் ஓயாது எழுச்சி ஒலி எழுப்பிக் கொண்டே இருப்பதால், அதிலிருந்து அடுத்தடுத்த பணிகளில் முழுமையாக ஈடுபட என்னால் இன்னும் இயலவில்லை.
திருச்சிக்குள் கடல் புகுந்ததா? திருவரங்கம் - திருவானைக்காவல் திருக்கோயில்களின் திருவிழாக்கள் ஒருசேர நடைபெற்றதா? திடீர் ஜனநாயகப் புரட்சிக்கான சிந்தை கவர் அடையாளமா? திக்கெட்டும் வாழும் தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த உணர்வுத் திரட்சியா? என்ன சொல்வது, எப்படிப் பொருத்தமாக விளக்குவது என்றே தெரியவில்லை. அப்படி ஒரு எழுச்சிப் பிரமாண்டம்!
» புதுச்சேரியில் காங்கிரஸைக் கரைத்து நெருக்கடி தரும் முன்னாள் அமைச்சர்கள்: சமாளிப்பாரா நாராயணசாமி?
» அறிவியல் சமுதாயத்துக்கு நன்றி: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஸ்டாலின் பதிவு
வெற்றி… வெற்றி… மகத்தான வெற்றி... வியக்க வைக்கும் வெற்றி என்பதைத் தாண்டி சொற்கள் சுரக்கவில்லை!
தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகளான உங்களுக்கு, தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டத்தை வெளியிடும் சிறப்புப் பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்புடன் ஒரு கடிதம் எழுதினேன்.
தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் அந்தச் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்பதையும், அதில் இடம்பெறும் நிகழ்ச்சிகளையும் நேரத்தையும் சுட்டிக்காட்டி, உடன்பிறப்புகளாம் உங்கள் பங்கேற்புக்கான அன்பு அழைப்பு விடுத்து மற்றொரு கடிதம் எழுதினேன்.
இரண்டு கடிதங்கள், இடைவெளியோ குறைவு, இடர்ப்பாடுகளோ ஏராளம்; எனினும், அந்தப் பயணத்தை மிகக்குறுகிய நாட்களுக்குள் இமாலய வெற்றியை வழங்கிய உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு, எனது இதயத்தில் பூத்த நன்றி நறுமலர்களை வாரி வழங்கி என் வாழ்த்துகளை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்ச் 14-ம் நாள் திமுகவின் மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்தல் தேதி வெளியிடப்பட்டதால், அதனை ஒத்திவைத்த நிலையில், மாநாட்டு வளாகத்தை அரும்பாடுபட்டு உருவாக்கியிருந்த திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, ஒத்திவைத்த மாநாட்டை மிஞ்சும் வகையில் வெற்றிகரமாக நடத்திக் காட்டிவிட்டார். நேருவிடம் ஒரு பணியை ஒப்படைத்துவிட்டால், நாம் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்து முடித்துவிட்டு, நம்மை அழைக்கக்கூடிய ஆற்றலாளர்.
இம்முறையும் அதனைக் கச்சிதமாக செய்து, காண்போர் கண்களில் ஆச்சரியம் நிறைந்திடச் செய்திருக்கிறார்.
தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' சிறப்புப் பொதுக்கூட்டத்திற்காகத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உடன்பிறப்புகள் பேரார்வத்துடன் தீரர் கோட்டமாம் திருச்சி நோக்கி வந்தபோது, வழியெங்கும் காற்றில் அசைந்தாடிய கருப்பு சிவப்புக் கொடிகளின் அழகையும் கம்பீரத்தையும் பார்த்து உள்ளத்தில் லட்சிய இளஞ்சூடு பரவிடப் பெற்றனர். பதாகைகள், அவற்றில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள், ஓவியங்கள் என எல்லா வகையிலும் திமுகவின் கொள்கைகளை முன்னிறுத்தும் பணியை எள்ளளவும் குறைவின்றிச் செவ்வனே செய்திருந்தார் கே.என்.நேரு.
காலை நிகழ்வில் திமுக கொடியை 90 அடி உயரக் கொடிக்கம்பத்தில் ஏற்றி வைக்கும்போது காணுமிடம் எல்லாம் திமுக தோழர்கள் நிறைந்திருந்து, உணர்ச்சிமிகு முழக்கங்களை எழுப்பினார்கள். அதன்பிறகு, அலை அலையாய், பேரலையாய், பெருங்கடலாய் உடன்பிறப்புகள் சிறுகனூர் நோக்கி பெரும்பலம் காட்டிய நிலையில், திமுகவின் இந்த எழுச்சியை காவல்துறை நண்பர்களால் முன்கூட்டிக் கணக்கிட முடியவில்லை. அதனால், மாலை நிகழ்வுக்காக திருச்சியிலிருந்து சிறுகனூர் பொதுக்கூட்ட வளாகத்திற்கு நான் புறப்பட்டுச் செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல்.
முதன்மைச் செயலாளர் நேரு முன்னின்று, இயன்ற அளவு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும்கூட என்னுடைய கார், தொடர்ந்து பயணிக்க வசதியில்லை. அதனால், மாற்றுப்பாதையை உடனடியாகத் தேர்வு செய்த நேரு, பொதுக்கூட்டத்திற்காக வந்திருந்த மதுரையைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரிடம் நிலைமையைச் சொல்ல, அவரும் அவருடன் வந்திருந்தவர்களும் எனது பயணத்திற்காக தங்களின் காரைத் தந்தார்கள். அதில்தான் நானும் நேருவும் பயணித்து, சிறுகனூர் பொதுக்கூட்ட மேடைக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.
போர்க்களத்தின் தளகர்த்தராக, முன்கள வீரராக, தலைமைக்கு எந்நாளும் தொண்டராக, எப்போதும் கருணாநிதியின் உடன்பிறப்பாக, அனைத்து நிலைகளிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்திய கே.என்.நேருவின் பெரும் உழைப்பும், அவருக்குத் துணையாக இருந்த திருச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் / செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைரமணி ஆகியோரின் அயராத பணியும் பாராட்டுக்குரியவை என்பதில் ஐயமில்லை.
சிறப்புப் பொதுக்கூட்ட விழா மேடையிலிருந்து உடன்பிறப்புகளின் கடல் அலை நிகர்த்த ஆர்ப்பரிப்பைக் கண்டு ஆனந்தமடைந்தேன். உங்களில் ஒருவனான நான் உங்கள் அருகில் வந்து திருமுகம் காணும் ஆவலுடன், நீளமான நடைமேடையில் நடந்து வந்தபோது, உங்களுக்கும் எனக்கும் இடையிலான அந்த உணர்வலை ஒரே சீரான அலைவரிசையில் இருப்பதை உணர்ந்தேன். அதுவே திமுகவுக்கான வெற்றி அலையாக உருவெடுப்பதையும் அறிந்தேன்.
திமுகவின் வெற்றியை, தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற காரணத்தால்தான், கட்சி எல்லைகளைக் கடந்த பல்துறை வல்லுநர்கள் தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
மிகக் குறுகிய இடைவெளியில் அவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையிலும், நாட்டு மக்களிடம் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய கடப்பாட்டுடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், விவசாயிகளின் நலன் காக்கப் பாடுபடும் பாலகிருஷ்ண தீட்சிதர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சூழலியலாளர் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன், ரவீந்திரநாத், எழிலன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் வெகு சிறப்பாக உரையாற்றியதை நேரலையில் பார்த்தவாறுதான் நிகழ்ச்சிக்கு வந்தேன். திமுக மேடையில் கருத்துரையாற்றிய அவர்கள் அனைவருக்கும் நேற்று (மார்ச் 8) என் நன்றியினை அலைபேசி வாயிலாகத் தெரிவித்தேன்.
வல்லுநர்கள் எந்தெந்தத் துறைகள் சார்ந்து கருத்துகளை வழங்கினார்களோ அந்தத் துறைகளின் சார்பில்தான், பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் சீரழிவிலிருந்து தமிழகத்தை மீட்கும் வகையில் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை வெளியிட்டேன்.
1. வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு (தொழில்வளர்ச்சி-வேலைவாய்ப்பு)
2. மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி (வேளாண் வளர்ச்சி)
3. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் (நீர் மேலாண்மை)
4. அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம் (கல்வி - சுகாதாரம்)
5. எழில்மிகு மாநகரங்களின் மாநிலம் (நகர்ப்புறக் கட்டமைப்பு)
6. உயர்தர ஊரக கட்டமைப்பு - உயர்ந்த வாழ்க்கை தரம் (ஊரக உட்கட்டமைப்பு)
7. அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் (சமூக நீதி - சமத்துவ நிலை)
இவையடங்கிய 7 உறுதிமொழிகளை 'மு.க.ஸ்டாலின் ஆகிய நான்' வழங்கினேன்.
'மு.க.ஸ்டாலின் ஆகிய நான்' என்பவன் உயிர்நிகர்த் தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகளான உங்களில் ஒருவன். அதனால்தான், உங்களின் ஒத்துழைப்போடுதான் இந்தத் தொலைநோக்குத் திட்டத்தை திமுக ஆட்சியில், அடுத்த பத்தாண்டுகளில் நிறைவேற்றிட முடியும் என்பதை வலியுறுத்தி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை திரண்டிருந்த உங்களையும் உறுதிமொழி ஏற்கச் செய்தேன். கட்டுப்பாடு மிக்க பட்டாளம் போல அத்தனை பேரும் எழுந்து நின்று ஒரே குரலில் உறுதிமொழியை ஏற்றபோது, திமுகவின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதுபோல அமைந்தது.
திமுகவால் இதனைச் செய்து முடிக்க முடியும். திமுகவால் மட்டுமே செய்து முடிக்க முடியும் என்பதால் நமக்கான பொறுப்பு மிகுந்திருக்கிறது. தோழமைச் சக்திகளுடன் இணைந்து நின்று களப் பணியாற்றி, வெற்றியினை உறுதி செய்திட பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. திமுகவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கண்டு ஆட்சியாளர்கள் மிரள்வதும் தெரிகிறது.
மார்ச் 8 - மகளிர் தினத்திற்கு முதல் நாள் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில், குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் 'உரிமைத் தொகை' என அறிவித்தேன். திருச்சியில் வெளியிட்ட அறிவிப்பு, தமிழகத்தின் திக்குகள் எங்கும் உடனடியாகப் போய்ச் சேர்ந்து பெண்களிடம் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் வரவேற்பு, பேராதரவைப் பெற்றது.
உளவுத்துறை மூலம் இதனைத் தெரிந்துகொண்ட அடிமை அதிமுக ஆட்சியாளர்கள், மாதந்தோறும் 1,500 ரூபாய் என்று அறிவிக்கிறார்கள். அதுவும், திமுக முன்கூட்டியே தெரிந்துகொண்டு அறிவித்துள்ளது என்று கூறுகிறார்கள் என்றால், அவர்கள் எந்த அளவு பச்சைப் பொய் சொல்கிறார்கள் என்பதையும், எவ்வளவு பலவீனமான நிர்வாகத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் தமிழக மக்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
இந்த அடிமைக் கூட்டத்தாரிடமும், அவர்களை ஆட்டிப்படைக்கும் கட்சியினரிடமும் தமிழகம் இனியும் ஏமாறத் தயாராக இல்லை. வெற்று விளம்பரங்கள், அவசர கதி அறிவிப்புகளால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மாறாக, விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றம் எனப் பெண்களையும் பொதுமக்களையும் நாள்தோறும் நசுக்கி வதைப்பதே மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கொள்கைத் திட்டமாக இருக்கிறது.
இந்நிலையை மாற்றுவோம்; இழிநிலையைத் துடைத்தெறிவோம். தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் மாநாடுகளைவிட மிகச் சிறப்பான வகையிலே நடந்தேறச் செய்த லட்சோப லட்சம் உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி மலர்களைக் காணிக்கையாக்கிக் களிப்பு மிகக் கொள்கிறேன். அதனை வாடாத வெற்றிமாலையாகத் தொடுத்திடுங்கள்.
களத்தின் கதாநாயகனான தேர்தல் அறிக்கை மார்ச் 11இல் வெளியாகிறது. அதன்பின், தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் நடைபெறவிருக்கின்றன. உங்கள் எழுச்சி முகம் கண்டு இன்பம் கொள்ள நேரில் வருவேன்; மக்களின் பேராதரவைத் திரட்டிட வருவேன். உங்களில் ஒருவனான நான் உங்களை நம்பியே வருகிறேன்.
உழைப்போம்... ஓயாது உழைப்போம்... இலக்கை நோக்கி ஒன்றுபட்டு உழைப்போம்!
திருச்சி சிறுகனூரில் திருப்புமுனை கண்டோம்; தேர்தல் களத்தில் வெற்றிச் சிகரத்தைக் காண்போம்!".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago