தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே விவசாயியிடம் ரூ.4,200 லஞ்சம் வாங்கிய நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் இன்று (9-ம் தேதி) கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பகுதி, குலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.பாஸ்கரன் (47), விவசாயி. இவர் 16 ஏக்கரில் சி.ஆர்.1009 ரக நெல் சம்பா சாகுபடி செய்திருந்த நிலையில், தொடர் மழையால் மகசூலில் பேரிழப்பு ஏற்பட்டது. விளைந்த, மீத நெல்லை விற்பதற்காகத் திருவிடைமருதூர் வட்டத்தில் காமாட்சிபுரத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு 116 நெல் மூட்டைகளை பிப். 14-ம் தேதி கொண்டு சென்றார். கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.40 வீதம் லஞ்சம் கேட்கப்பட்ட நிலையில், அவ்வளவு பெரிய தொகை தர இயலாது என பாஸ்கரன் கூறினார். இதனால் பாஸ்கரனின் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய பணியாளர்கள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பேரம் பேசிய கொள்முதல் நிலைய ஊழியர்கள் கடந்த 6-ம் தேதி நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்துக் கொண்டனர். பின்னர் பாஸ்கரனிடம் மூட்டைக்கு ரூ.40 வீதம் ரூ.4,200-ஐ 8-ம் தேதி கொடுத்தால்தான் உங்களது நெல்லுக்கான பணம் வங்கிக் கணக்கில் ஏறும் எனக் கூறிவிட்டனர்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாஸ்கரன், இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டக் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலகத்தில் இன்று காலை புகார் செய்தார்.
இதையடுத்து காமாட்சிபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று பிற்பகல் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் போலீஸார் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது பாஸ்கரனிடமிருந்து ரூ. 4,200 லஞ்சம் வாங்கிய நேரடி நெல் கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தர் எஸ்.கேசவமூர்த்தியை (38) ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கையும் களவுமாகக் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.30,000 ரொக்கத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.
இதுகுறித்து விவசாயி பாஸ்கரன் கூறுகையில், ''எனக்கு வழக்கமாக 800 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். கடந்த ஜனவரி மாதம் பெய்த எதிர்பாராத மழையினால் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டு 116 மூட்டைகள் மட்டுமே கிடைத்தன. இதனைக் காமாட்சிபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காகக் கொண்டு சென்றபோது, லஞ்சம் கொடுத்தால்தான் கொள்முதல் செய்வோம் எனப் பணியாளர்களும், சுமை தூக்குபவர்களும் கூறிவிட்டனர்.
ஏற்கெனவே மகசூல் இழப்பால் வருவாய் இல்லாமல் இருந்தபோது லஞ்சப் பணம் கொடுக்க இயலவில்லை. நான் 21 நாட்கள் காத்திருந்த நிலையில் கடந்த 6-ம் தேதிதான் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அப்போதும் மூட்டைக்கு ரூ.40 பணம் கொடுத்தால் மட்டுமே எனது வங்கிக் கணக்கில் பணம் ஏறும் எனக் கறாராகப் பணியாளர் கூறிவிட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாததால் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் செய்தேன். புகார் செய்ததால் எனக்கு வரவேண்டிய பணம், தற்போது வங்கிக் கணக்கில் ஏறுமா எனத் தெரியவில்லை'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago