தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை நிறைவேற்றாததால், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் கட்சி அதிருப்தியில் இருக்கிறது.
பட்டியல் வெளியேற்ற கோரிக்கைக்கு இச்சமூகத்தில் எந்தளவிற்கு ஆதரவிருக்கிறதோ, அதே அளவுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாகப் பேசுவோர் மிகக்குறைவே.
பட்டியல் வெளியேற்ற கோரிக்கைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர்களில் முக்கியமானவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில மாணவர் சங்க செயலாளரான எட்வின் நம்புடையார்.
அவருடன் ஒரு பேட்டி.
பள்ளர், பன்னாடி, காலாடி, குடும்பர் உள்ளிட்ட சமூகங்களை தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறது மத்திய அரசு. இது உங்கள் சமூகத்துக்கு எத்தகைய பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
வெறுமனே பெயர் மாற்றத்தால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. பட்டியல் இனத்தில் இருந்து வெளியே எடுக்கப்படும் இம்மக்களை எந்தப் பட்டியலில் கொண்டுபோய் வைக்கப் போகிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வேண்டாம், பிற்பட்டோர் பட்டியலில் வைக்க வேண்டும் என்று சிலர் பேசுகிறார்கள். ஏற்கெனவே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய இந்தச் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் சாதி இழிவில் இருந்து விடுதலை கிடைக்கவில்லையே? நெல்லை டக்கரம்மாள்புரத்தில் உள்ள தேவாலயத்தையே 'எஸ்சி சர்ச்' என்றுதான் அழைக்கிறார்கள்.
நாடார்கள் உள்ளிட்ட மற்ற சாதியினருக்கு வேறு சர்ச் இருக்கிறது. இதே நிலைதான் தமிழகம் முழுக்கவும். பெயர் மாற்றமோ, பட்டியல் வெளியேற்றமோ மட்டும் சர்வரோக நிவாரணியாகிவிடாது. இல்லையில்லை, பட்டியல் வெளியேற்றம் தான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்று சொல்வீர்களானால், எதற்கு பி.சி., எம்.பி.சி. பட்டியலில் கொண்டுபோய் எங்களைச் சேர்க்க வேண்டும்?
ஆண்ட சாதி, மன்னர் பரம்பரை, பசுவைத் தெய்வமாக வழிபடுவோர் என்ற தகுதியின் அடிப்படையில் நேரடியாக எங்களைக் கொண்டுபோய், உயர் சாதியினர் பட்டியலில் சேர்த்துவிட வேண்டியதுதானே?
முன்பு மன்னர்கள், இப்போது மத்தியான சோத்துக்கு வழியில்லாதவர்கள் என்ற வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டுப் பட்டியலில் எங்களைச் சேர்த்துவிடலாம். அப்படிச் செய்தால், அதனை நாங்கள் முழுமனதுடன் ஆதரிப்போம்.
ஏற்கெனவே பல சமூகங்கள் தங்களைச் சுட்டும் இழிவுப்பெயரை மாற்றியிருக்கின்றன. அதே அடிப்படையில், குடும்பன், காலாடி போன்ற பெயர்களை மாற்றிக்கொள்ள தேவேந்திரர்களும் விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது?
பெயரில் இழிவு இருக்கிறது என்றால், மானத்துடன் கூடிய பெயரைச் சூட்டுவதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் சூட்டும்போது, எந்த சனாதனம் இச்சமூகத்தை இழிவுபடுத்தியதோ அதே சனாதானத்திற்குள் தான் இந்தச் சமூகம் மூழ்கடிக்கப்படும். இந்துக்களாய் ஒன்றிணைவோம் என்று பேசுபவர்கள்தான் இந்தக் குழப்பத்துக்கெல்லாம் காரணம். ஆடிட்டர் குருமூர்த்தி, எச்.ராஜா போன்றோர்கள் எங்களையும் இந்துக்களாக மதிப்பது உண்மையென்றால், கண்டதேவி தேரோட்டத்தில் கள்ளர் (நாட்டார்) சமூகத்தினருடன் சேர்ந்து நாங்களும் தேரிழுக்க முதலில் அனுமதி பெற்றுத்தரட்டும்.
டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்ற வாக்கு அரசியலில் நம்பிக்கையுள்ள தேவேந்திர குலத் தலைவர்கள் எல்லாம், ஒரு காலத்தில் தலித் விடுதலை பேசியவர்கள் தான். ஆனால், இன்று அந்த அரசியலை நம் மக்கள் விரும்பவில்லை, தேவேந்திரர் எனும் பொதுப்பெயரில் பட்டியலை விட்டு வெளியேறுவதையே விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டுதானே அவர்களும் அந்தக் குரலை எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்?
ஒட்டுமொத்தமாக இந்தச் சமூகமே பட்டியலின கோரிக்கையை ஆதரிக்கிறது என்ற கருத்தில் துளியும் உண்மையில்லை. அது ஊடகங்களாலும், சில அரசியல் கட்சிகளாலும் ஊதிப்பெரிதாக்கப்பட்ட பிம்பம். இடஒதுக்கீட்டின் பயனை அறிந்தவர்கள் யாரும் பட்டியலின வெளியேற்ற கோரிக்கையை ஆதரிக்க மாட்டார்கள். அவர்களின் குரல் அதிகம் வெளியே கேட்காததற்கு காரணம், அச்சம். இவர்களை எதிர்த்துப் பேசினால், "அவனை எல்லாம் இன்னுமாடா ஊரில் விட்டு வெச்சிருக்கீங்க?" என்று சில தலைவர்களே தாக்குதல் நடத்தத் தூண்டிவிடுவார்கள். அதன் தொடர்ச்சியாக வீடு சூறையாடப்படுவது தொடங்கி கொலை செய்யப்படுவது வரையிலான ஆபத்துக்கள் வரும். எனவேதான், அமைதி காக்கிறார்கள். உண்மையைப் பேசினால், பாஜகவினர் எப்படி தங்களை எதிர்ப்பவர்களை ஆன்டி இந்தியன், கிறிஸ்தவ கைக்கூலி என்பார்களோ, அதேபோன்ற குற்றச்சாட்டைத்தான் இவர்களும் சுமத்துவார்கள்.
உங்களுடைய பெயரும் கிறிஸ்தவப் பெயர் போல இருக்கிறதே?
(சிரிக்கிறார்). நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மாஞ்சோலை எஸ்டேட்டில். வீட்டுக்கு எட்டாவது பிள்ளை என்பதால், எட்வின் நம்புடையார் என்று பெயர் வைத்துவிட்டார்கள். என் அப்பா பெயர் கருப்பசாமி, அம்மா பெயர் பாப்பு. நான் மாஞ்சோலை வனப்பேச்சியம்மன் கோயில் பூசாரியாக இருந்தவன். இப்போதும் அந்த வழிபாட்டு முறையையே பின்பற்றுகிறேன்.
“ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாகி, அரசு துறை செயலாளராகவே ஆனாலும் சரி, இவன் ரிசர்வேஷனில் வேலைக்கு வந்தவன் என்று இழிவாகப் பேசப்படுகிற சூழல் இருக்கிறது. மருத்துவர் படிப்பில் சேர்ந்த மாணவனையும் இவனுக்கு ரிசர்வேஷனில்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்று இழிவுபடுத்துகிறார்கள். எனவேதான், நாங்கள் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை ஆதரிக்கிறோம்” என்கிறார்கள் படித்த தேவேந்திர குல வேளாளர்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ஆம், அப்படியொரு பொதுப்புத்தியை சிலர் திட்டமிட்டு உருவாக்கிவிட்டார்கள். பட்டியல் இனத்தவர்களுக்கு எல்லாமே இலவசம். அவர்கள் படிக்கவே வேண்டாம், அரசாங்க வேலையும் கிடைத்துவிடும். அவர்களுக்குக் கொடுக்கப்படும் காலர்ஷிப், உதவித்தொகை, வீட்டுமனை, வீடு எல்லாம் நாம் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்று வெறுப்பான கருத்தை பரப்பிவிட்டார்கள். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மையாக்குவதைப் போல, இந்தக் கருத்துக்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி இடஒதுக்கீட்டைப் பெறுவதை இழிவு, அவமானம் என்று இடஒதுக்கீட்டால் பயன்பெறும் சமூகங்களே சிந்திக்கிற நிலையை உருவாக்கிவிட்டார்கள். முதலில் இடஒதுக்கீடு என்ற வார்த்தையே தவறு, இடப்பங்கீடுதான் சரியான சொல். இடஒதுக்கீடு சலுகை அல்ல, அது நம் உரிமை.
இத்தனை ஆண்டுகாலமாக நாம் ஒடுக்கப்பட்டதற்கு போடப்படும் மருந்துதான் அது என்பதைக் கூட மறந்து, தாழ்வுமனப்பான்மைக்கு நம்மைத் தள்ளுகிறார்கள். பட்டியலினத்தவர்களை ரிஷர்வேசனில் வந்தவர்கள் என்று இழிவுபடுத்திய உயர் வகுப்பினர், இன்று தகுதி திறமையைப் பற்றிப் பேசாமல் 10 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றிருக்கிறார்களே, ஏன்? அதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்திருக்கிறார்களே, இது நியாயமா? 45 மதிப்பெண் எடுத்தவன் எல்லாம் டாக்டரா, அவனுக்கெல்லாம் அரசாங்க வேலையா என்று அவதூறு பேசியவர்கள், தலைமுறை தலைமுறையாக மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்துவிட்டு இப்போது ஆண்டு வருமானம் 8 லட்சம் இருந்தால்கூட நாங்கள் ஏழைதான் என்று சொல்வது எவ்வளவு பெரிய முரண்பாடு.
இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற சமூகங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரே இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறார்கள். இது இடஒதுக்கீட்டின் தோல்வியா? அல்லது பயன்பெற்றவர்கள் அதன் சிறப்பைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்காததன் விளைவா?
இடஒதுக்கீட்டின் பயன், அதைப் பெற்ற வரலாறு எதையுமே நாம் நம்முடைய பிள்ளைகளுக்குச் சொல்லித் தரவில்லை. நான் என்னுடைய கெட்டிக்காரத்தனத்தால்தான் படித்தேன், பெரிய வேலைக்குப் போனேன் என்று பிள்ளைகளிடம் சொன்னார்களே, தவிர நம்முடைய பூட்டன், தாத்தன் எல்லாம் ஏன் படிக்கவில்லை, எனக்கு எப்படி அந்த வாய்ப்பு கிடைத்தது என்கிற உண்மையையோ, வரலாற்றையோ சொல்லித்தரவில்லை. அம்பேத்கர் தந்த இடஒதுக்கீட்டால், தந்தைப் பெரியாரின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ கொள்கையால்தான் நமக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லியிருக்க வேண்டும்.
“தனியார் மயம், தாராளமயம் வந்த பிறகு, அரசு வேலை வாய்ப்பெல்லாம் குறைந்துவிடும். இடஒதுக்கீட்டால் பெரிய நன்மை கிடைக்காது. எப்படி கொங்கு வேளாளர்கள் தொழில் முயற்சிகளாலும், நாடார்கள் வணிக முயற்சிகளாலும் அந்தஸ்தை அடைந்தார்களோ, அதேபோல தேவேந்திரர்களும் தங்கள் குலத்தொழிலான வேளாண்மையைக் கையில் எடுக்க வேண்டும்” என்று தேவேந்திரர் அறக்கட்டளைத் தலைவர் தங்கராஜ் கூறியிருக்கிறாரே?
இது போகாத ஊருக்கு வழி சொல்கிற வேலை. இந்தச் சமூகம் இன்று கல்வி, வேலைவாய்ப்பில் ஓரளவுக்கு வாய்ப்பு பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இடஒதுக்கீடுதான். இந்தச் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்கிற கிராமங்களில் வேண்டுமானால் சாதி அடக்குமுறைகள் குறைந்திருக்கலாமே தவிர, குறைவாக வாழ்கிற ஊர்களில் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இன்னமும் பல கிராமங்களில் இம்மக்கள் காலில் செருப்பணிய முடியாத நிலை இருப்பதை மறந்துவிடக்கூடாது. நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள கரையிருப்பு கிராமத்தில் இருக்கிற தேவேந்திரர்களை எஸ்.சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்தான் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
இல்லையென்றால் ஊரையே காலி பண்ணச் செய்திருப்பார்கள். குலத்தொழில்களை கைவிடுகிற சமூகம்தான் முன்னேறும். அவனவன் குலத்தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறுவது, பாஜகவின் சித்தாந்தம்.
"இத்தனை ஆண்டுகளாக தேவேந்திரர்கள் காங்கிரசுக்கும், திமுகவுக்கும் வாக்களித்தார்கள். ஆனால், அவர்களை வெறும் வாக்குவங்கியாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தக் கட்சிகள் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தையும் தரவில்லை, அவர்களது கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. பாஜக இப்போது அவர்களை ஈர்த்துவிட்டது" என்று சொல்லப்படுகிற கருத்து உண்மையா?
வெளியே சாதி ஒழிப்பைப் பேசிவிட்டு, உள்ளே சாதியாக இயங்குகிற இயக்கம்தான் திமுகவும், கம்யூனிஸ்ட்களும். தேவேந்திரர்களுக்கு அவர்கள் பிரதிநிதித்துவம் தராததற்கு காரணம், இம்மக்கள் பரந்துபட்டு வாழ்கிறார்களே தவிர ஒரே தொகுதியிலோ, மாவட்டத்திலோ அடர்த்தியாக வாழவில்லை.
எனவே, அங்குள்ள ஆதிக்க சாதிகளுக்கே மாவட்ட செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர் போன்ற வாய்ப்புகளைக் கொடுத்துவிட்டு, அவர்களுக்குக் கீழே கொடி பிடிக்கிற, போஸ்டர் ஒட்டுகிற, வாழ்க கோஷமிடுகிற அடிமைகளாகத்தான் இம்மக்களை அக்கட்சிகள் வைத்திருக்கின்றன. மீறி யாராவது ஒருவர் மேலெழுந்து வந்தால், கொலை செய்யவும் துணிகின்றன ஆதிக்க சாதிகள். இந்தப் பிரச்சினைக்கு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம்தான் தீர்வு. தமிழ்நாட்டு மக்கள் தொகையை சாதிவாரியாக கணக்கெடுத்து, 100க்கு 100 சதவிகிதம் இடப்பங்கீட்டை அமல்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், தனியார் துறை என்று அனைத்து துறைகளிலும் அதனை அமல்படுத்த வேண்டும்.
இதுவரையில் இந்த சமூகத்துக்கு இடஒதுக்கீட்டின் வாயிலாகவும், அரசியல் ரீதியாகவும் கிடைத்தது என்ன என்பதை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி கூட, முருகவேல்ராஜன் போன்றோரை வட மாவட்டங்களிலேயே நிறுத்தி எம்எல்ஏ ஆக்கியிருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளராக இச்சமூகத்தைச் சேர்ந்த ராவணனை நியமித்திருக்கிறது.
திராவிடக் கட்சிகள் ஏன் இதுவரையில் செய்யவில்லை என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அடிமைகளின் விடுதலையை எஜமானர்கள் தீர்மானித்ததாக அச்சுப்பிழையாக கூட வரலாற்றில் பதிவு இல்லை. எனவே, பாஜக நமக்கான கட்சி என்று தேவேந்திரர்கள் கருதினால், அது நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் படுகுழி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பேட்டியில் அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago