கடந்த வருடங்களில் நாடாளுமன்ற முக்கிய விவாதங்களில் பெண்களின் பிரச்சினைகளுக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கும் தொடர்ந்து அழுத்தமாகக் குரல் கொடுத்து வருபவர், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் பயணத்தில் பல இடையூறுகளையும், தனிமனிதத் தாக்குதல்களையும் வெற்றிகரமாகக் கடந்தவர், என தற்போது தேசிய அளவில் பெண்களின் நம்பிக்கை முகமாக மாறி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியுடன் மகளிர் தினத்தில் நடத்தப்பட்ட சிறு உரையாடல்….
கவுன்சிலர், வட்டாரச் செயலாளர், மாவட்டச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர், தேசியச் செயலாளர், தேசிய பொதுச் செயலாளர், செய்தித் தொடர்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என ஒரு சாமானியப் பெண்ணின் கனவுப் பயணத்தைக் கடந்து வந்துள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?
ஜோதிமணி என்ற நான், எம்.பி. ஆனதாக என்றுமே நினைத்ததில்லை. சாமானியப் பெண்களாகிய நம் அனைவருக்கும் மாற்றத்தை அடைய வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால், அதற்கு நாம் நிறையப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் பின்னணி, பொருளாதாரப் பின்னணி இல்லாமல் இம்மாதிரியான நிறைய தடைகள் பெண்களுக்கு உள்ளன. இந்த எம்.பி. பதவியை நம்மில் ஒருவருக்குக் கிடைத்த வாய்ப்பாகத்தான் நான் பார்க்கிறேன். நான் இந்த இடத்தில் இருப்பது நிறைய பேருக்குத் தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த வகையில் இந்தப் பயணம் சிறப்பானது.
25 வருடங்களுக்கும் மேலாக மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாமல் உள்ளது. இவ்வளவு காலம் ஆகியும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கான காரணமாக நீங்கள் நினைப்பது?
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் காங்கிரஸ் நிறைவேற்றியது. ஆனால், மக்களவையில் போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் காங்கிரஸால் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது பாஜக ஆட்சியில் உள்ள காலகட்டத்தில் மகளிர் மசோதவை நாம் சிந்தித்துப் பார்க்கவே முடியாது. காங்கிரஸ்தான் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்தைக் கொண்டுவந்தது. ஆனால், பாஜக போன்ற கட்சிகள் பெண்களை அதிகாரப்படுத்த வேண்டும் என்று நினைக்காது. ஆர்எஸ்எஸ்ஸின் அடிப்படைச் சித்தாந்தமே பெண்களின் வளர்ச்சிக்கு எதிரானது. எனவே, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரை பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது 33% என்பதைவிட 50% ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லாத் துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள். ஆண்களைவிட சிறப்பானவர்கள் பெண்கள் என நாம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டு இருக்கிறோம். நூற்றாண்டு காலமாக, இதற்காக நாம் போராடி வருகிறோம். இட ஒதுக்கீடு என்பது பெண்களுக்கான சலுகை அல்ல. இது பெண்களுக்கான சமவுரிமை.
பெண்களை அதிகாரப்படுத்துவதில் ஏன் அரசியல் கட்சிகள் பின்தங்கியுள்ளன? பெண்களை அதிகாரப்படுத்துவது எவ்வளவு முக்கியத்துவமானது?
பெண்களை அதிகாரப்படுத்தினால்தான் எந்தச் சமூகமும் வளர முடியும். பெண்களை அதிகாரப்படுத்தாமல் எந்தச் சமூகமும் முன்னோக்கிய பாய்ச்சலை நிகழ்த்த முடியாது. உலகெங்கிலும் பெண்கள் எங்கு அதிகாரப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ அங்குதான் நாம் வளர்ச்சியைப் பார்க்க முடியும். பெண்களை அதிகாரப்படுத்த வேண்டும் என்றுதான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்கள். பெண்களுக்கான முன்னுரிமைக்காக ஏராளமான சீர்திருத்தங்களை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்ற கட்சிகளைவிட சிறப்பாகச் செயல்படுகிறது.
பெண்களை ஆள்வதற்குத் தகுதியற்றவர்களாகவும், அதிகாரத்தைக் கையாள முடியாதவர்களாகவும், அவர்களைப் போகப் பொருளாகவும், சமையல் செய்யவும், குழந்தை பிறப்பிக்கும் இயந்திரங்களாகவும் பார்க்கும் மனநிலைதான் சமூகத்தில் உள்ளது. அதன் நீட்சியாகத்தான் அரசியல் கட்சிகள் உள்ளன. இதற்கு எதிராகத்தான் நாம் போராட வேண்டியுள்ளது.
பொது வாழ்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக முதலில் தொடுக்கப்படும் ஆயுதம் தனிமனிதத் தாக்குதல். அதனை நீங்கள் எவ்வாறு எதிர் கொண்டீர்கள்? அரசியலில் பயணிக்க விரும்பும் பெண்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை?
எல்லாத் துறைகளிலும் பெண்கள் சிறப்பாகச் செயல்படுவது போல் அரசியலிலும் அவர்கள் சிறப்பாக செயல்படமுடியும். பெண்கள் அரசியலுக்கு வந்தால்தான் நாம் அரசியலையே மாற்ற முடியும். அரசியலுடனான மக்களின் உணர்வுபூர்வமான பந்தம் என்பது தற்போது குறைந்துவிட்டது.
இந்த உணர்வுபூர்வ பந்தத்தைப் பெண்களால் அதிக அளவில் ஏற்படுத்த முடியும். பெண்களால் மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற முடியும். அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, பெண்கள் அரசியலுக்கு வருவது ஆண்கள் அரசியலுக்கு வருவதைவிட முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், இன்னமும் பெண்கள் மீதான் ஒடுக்குமுறைகளையும், ஆணாதிக்கம் சிந்தனை கொண்ட சமூகமாகத்தான் நாம் உள்ளோம். இதை எல்லாம் மாற்றம் வேண்டும் என்றால் நிறைய பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். இது தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல, நமது சமூகக் கடமை.
அடுத்தது பெண்கள் மீதான தனிமனிதத் தாக்குதல் என்பது நமது சமூக அமைப்புகளில் இணைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதலே தனி மனிதத் தாக்குதல்களை பாஜக போன்ற கட்சிகள் பயன்படுத்தி வந்திருக்கின்றன. நான் மட்டுமல்ல சமூகத்துக்காகப் பணிபுரியும் பல பெண்கள் இதனை எதிர்கொண்டு இருக்கிறார்கள். தனி மனிதத் தாக்குதல்களைக் கையில் எடுத்தால் பெண்கள் கூனிக் குறுகி மீண்டும் வீட்டுக்குள்ளாகவே சென்று விடுவார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால், அந்தக் காலம் சென்றுவிட்டது. தற்போதைய பெண்கள் தங்கள் மீதான ஆபாசத் தாக்குதல்களை தைரியமாக எதிர்கொள்கிறார்கள். எனவே, தனிமனித ஆபாசத் தாக்குதல்களை எல்லாம் பயந்து பின்வாங்காமல் பெண்கள் துணிச்சலாகக் கையாண்டு அவர்களை தோலுரித்துக் காட்ட வேண்டும்.
அரசியலைத் தவிர்த்து உங்களுக்கு எழுத்திலும், புத்தக வாசிப்பிலும் நிறைய ஆர்வம் உண்டு. அந்த வகையில் எழுத்தாளராக இந்திராவை நீங்கள் தேடுகீறிர்களா? எதிர்காலத்தில் இந்திராவைப் பார்க்கலாமா?
எழுத்தாளர் இந்திரா... அந்தக் காலக்கட்டம் ஏதோ முன் ஜென்மம் போல் உள்ளது. படிப்பது எழுதுவது என்பது எனக்கு மிகப் பிடித்தமான விஷயம். புத்தகம் படித்தல் என்பது கூடு விட்டுக் கூடு பாய்வதைப் போன்றது.. இன்னொருவருடைய அனுபவத்தை நாம் படிக்கிறோம், எழுதுகிறோம் அல்லவா…என்னைப் பொறுத்தவரை அது ஒரு மாயஜாலமான தருணம்.
எழுத்து என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு ஊடகம். அது தன்னைத் தானே படைத்துக் கொள்ளும். அரசியலை முடித்துக்கொண்டு விரைவில் படிக்கவும், எழுதுவதற்கான காலமும் விரைவில் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு நீண்ட காலம் அரசியலில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
நான் 21 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். கால் நூற்றாண்டைக் கடந்துவிட்டேன். எனவே, நான் இன்னும் பத்து வருடத்தில் ஓய்வுபெற்று, அந்த இடத்தில் இளைஞர்கள் வரவேண்டும் என்று விரும்புகிறேன். அரசியலுக்குப் பிறகு நிச்சயம் நான் விரும்பும் இந்திராவைப் பார்க்கலாம். நாய், பூனை, எழுத்து, பயணங்கள் என எனது அடுத்தகட்டம் தொடரும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago