கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்வு செய்யப்பட்டது குறித்து பாஜக மேலிடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் ஆரம்பம் முதலே பாஜக அதிக தொகுதிகளைக் கேட்டு வந்தது. அதிமுக கூட்டணியில் பெரிய கட்சியான பாமக 23 தொகுதிகளைப் பெற்றது. பாஜக, தேமுதிக, தமாகா தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு பாஜக-அதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி 20 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் பாஜகவின் கன்னியாகுமரி வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் நிறுத்தப்படுவதாக டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் 2019-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

வசந்தகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானதை அடுத்து தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவே வாய்ப்புள்ளது.

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. இதனிடையே நேற்று முன்தினம் பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு அளித்தார். ரூபி மனோகரனும் போட்டியிடும் முடிவில் உள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னர் நாகர்கோவில் தொகுதியாக இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 1999-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 2004-ம் ஆண்டு போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். பின்னர் நாகர்கோவில் தொகுதி கன்னியாகுமரி தொகுதியாக மாற்றப்பட்டபோது 2009-ல் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு மாறி மாறி வெற்றி, தோல்வியைச் சந்தித்து வரும் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை 6-வது முறையாக இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE