சசிகலாவின் அரசியல் விலகல்; அதிமுகவை வளைக்க பாஜக செய்த ஏற்பாடு: கி.வீரமணி விமர்சனம்

By செய்திப்பிரிவு

சசிகலாவின் அரசியல் விலகல், அதிமுகவை வளைத்துவிட பாஜக செய்கின்ற ஓர் ஏற்பாடு என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கை:

"சசிகலா பெங்களூருவிலிருந்து விடுதலையாகி வந்த நிலையில், செய்தியாளர்களிடையே பேசியபோது, 'தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக' அறிவித்தார். 'அடக்குமுறைகளைச் சந்திப்பேன்' என்றார்!

விடுதலையானபோது என்ன சொன்னார் சசிகலா?

கடந்த பிப்.24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளில், அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, 'விரைவில் தொண்டர்களையும், மக்களையும் சந்திப்பேன்' என்றார்! அதிமுகவில் அவர் உரிமை கோரிய வழக்கையும் விரைவுபடுத்த முயற்சி எடுத்தார்.

இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை இணைத்தே தேர்தலை சந்திக்க வேண்டும்; அவர்களை அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவின் இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்களுடன் பேசும்போது, 'சசிகலாவை ஏற்க அவர்களோ, அவர்களில் ஒருவரோ தயக்கம் காட்டி, மறுப்புத் தெரிவித்ததாக' ஊடகங்களில் செய்திகள் உலா வந்தன!

அவர்களை அதிமுக கூட்டணியில் இவர்கள் சேர்க்காவிட்டாலும், எங்களுக்குக் கொடுக்கும் இடங்களில் அவருக்குக் கொடுத்து இணைத்தால் மட்டுமே திமுகவைத் தோற்கடிக்க முடியும் என்று பயமுறுத்திய நிலையில், சசிகலா வந்தால் தன் நிலை கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சத்தால், அதற்கு இடமே இல்லை என்று தனது கட்சிப் பேச்சாளர்கள் மூலம் தெளிவுபடுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் பிரதமரைச் சந்தித்து வெளியில் வந்து, நூற்றுக்கு நூறு சசிகலாவை சேர்ப்பதில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனால் ஏற்பட்ட தேக்கத்தைப் போக்கி, தந்திரமான சில வியூகத்தை வகுக்க பாஜக திட்டமிட்டே சசிகலாவை அரசியலிலிருந்து 'ஒதுங்கியிருப்பதாக' அறிக்கைவிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றே தெரிகிறது. அதன்மூலம் தாங்கள் நினைக்கும் வண்ணம், அதிமுகவை வளைத்துவிட பாஜக செய்கின்ற ஓர் ஏற்பாடு, சசிகலாவை வைத்தே இந்த காய் நகர்த்தப்பட்டிருக்கிறது என்பது நமது கருத்து.

அரசியலிலிருந்து விலகவில்லை, ஒதுங்கித்தான் உள்ளார்

அரசியலிலிருந்து அவர் விலகவில்லை; 'ஒதுங்குவதாகவே' குறிப்பிட்டுள்ளார். அரசியலிலிருந்து விலகுவது வேறு; அது முற்றுப்புள்ளி போல! அரசியலிலிருந்து ஒதுங்குவது என்பது அரைப்புள்ளி போல! சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக வேகம் காட்டியவர். இப்பொழுது 'யூ டர்ன்' எடுத்து, அரசியலிலிருந்து 'ஒதுங்குவதாக' அறிக்கை வெளியிடுவதை சாதாரணமாகவோ, இயல்பானதாகவோ அரசியல் தெரிந்தவர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

அதிமுகவின் இரு பிரிவுகளையும் இணைக்க முயன்று, அதில் வெற்றி பெற முடியாத நிலையில், அதற்கு அடுத்த நகர்த்தலாக சசிகலாவை ஒதுங்கி இருக்கச் செய்வதன்மூலம், அவர்தம் ஆதரவாளர்களின் வாக்குகளை அதிமுக - பாஜக கூட்டணிக்குக் கொண்டு வரலாம் என்ற ஒரு கணக்கு இதற்குள் இருக்கிறது. சசிகலாவின் அறிக்கையை பாஜக பொறுப்பாளர்கள் வேக வேகமாக வரவேற்றதே இதற்குப் போதிய ஆதாரமாகும். ஆனால், அது தப்புக் கணக்கே!

ஆளும் அதிமுகவில் ஏற்கெனவே பல குழப்பங்களும், கோஷ்டிகளும் பனிப்போர்களும் நடந்துகொண்டு இருக்கும் நிலையில், சசிகலா எடுத்த இந்த நிலைப்பாடு, மேலும் அதிருப்தியையும், நம்பகமற்ற தன்மையையும் ஏற்படுத்தும். சசிகலாவை முதல்வர் பதவியை ஏற்காமல் செய்தது பாஜக என்பதெல்லாம் அவருடைய அபிமானிகளுக்கு, ஆதரவாளர்களுத் தெரியுமே, அது எதிர்விளைவை ஏற்படுத்தவே செய்யும். தேர்தல் பணியில் கோஷ்டிகளும், போட்டிகளும் உச்சக்கட்டத்திற்குச் செல்லும்; திமுகவின் வெற்றித் திசை மேலும் பிரகாசமாகவே ஜொலிக்கும்.

இப்பொழுதே இவ்வளவுச் சங்கடங்கள், இவர்கள் கையில் ஆட்சி சென்றால் என்னவாகும் என்ற பொதுஜன அபிப்ராயம் மேலோங்கும். பாஜகவின் சித்து விளையாட்டின்மீது அடங்காக் கோபம் பீறிட்டுக் கிளம்பும், அதனை வாக்குச் சீட்டின்மூலம் வெகு மக்கள் நிரூபிப்பார்கள், இது கல்லின்மேல் எழுத்து!

இந்தத் தேர்தலில் பாஜகவைத் தங்களின் எஜமானர்களைப் போலவே கருதி நடந்துகொள்ளும் அதிமுகவிடம் அதிக இடங்களைப் பெற்றுவிட, எது அல்லது எவர் தடையாக இருக்கிறதோ அவரை 'சற்றே விலகியிரும் பிள்ளாய்' பாடிய உத்தி, தந்திரம், வியூகமும்கூட இதில் உண்டு.

முன்பு ஜெயலலிதா என்ன சொன்னார்? அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 'மோடியா லேடியா' என்று கேட்டாரே, அதெல்லாம் இப்போது 'வசதியாக' அவர்களின் அனைத்துத் தரப்பினருக்கும் மறந்துவிட்டதா? அதற்குக் காரணம் வெளிப்படை, அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிக்கலிலிருந்து அவரவர்கள் விடுபட வேண்டிய நிர்ப்பந்தம், அவர்கள் அனைவருக்கும், இப்படி பலப்பல!

உண்மையான எதிரி யார்?

'திமுகதான் எங்கள் முதல் எதிரி' என்று கூறி, 'அதனைத் தோற்கடிக்க ஒன்று சேருங்கள்' என்று அறிக்கை விடுகிறார்; உண்மையில் எதிரி யார்? கழகங்களே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, அண்ணா கண்ட ஆட்சிகள் உருவாகாமல் தடுக்க, ஆர்எஸ்எஸ், பாஜக தமிழ்நாட்டில் காலூன்றும் நோக்கத்தோடு இப்படி அதிமுகவை உடைப்பது யார்?

உண்மையான பாதுகாவலன் திமுகவே!

அதிமுக என்பதற்கு இன்று என்ன தனி அடையாளம்? மாநில உரிமைகள், தமிழ் இனப் பண்பாட்டு அடையாளங்கள் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றனவே, மொழி உரிமை சிதைக்கப்படுகிறதே, கல்வியில் பச்சையாக குலதர்மம் கோலோச்சும் நிலையும், எந்த சமூகநீதியை சட்டமாக்கினோம் என்று கூறிப் பெருமை கொண்டாடினோமோ, அதனை அடியோடு தகர்க்கும் பணிகள் இன்று மத்திய பாஜக ஆட்சியால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்து கொண்டிருக்கும் கொடுமையைத் தடுத்து, தனித்துவ திராவிட தமிழர் தமிழ்நாட்டு உரிமைகளுக்கு அரண் அமைப்பது, திமுக என்ற மாபெரும் பாதுகாவலன் அல்லவா?

ஏதாவது பொதுநலக் கண்ணோட்டமோ, இன நலக் கண்ணோட்டமோ, மக்கள் நல கண்ணோட்டமோ இதில் இருக்கிறதா? அண்ணா பெயரில் உள்ள ஓர் ஆட்சியின் கதி இப்படியா நிர்கதியாக ஆகவேண்டும்? டெல்லியில் எம்ஜிஆரின் கையை முறுக்கியவர்கள் அன்றைய ஆர்எஸ்எஸ் குண்டர்கள்!

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய (17.2.1983) முதல்வ எம்ஜிஆர் கடுமையாக எச்சரித்தார், 'இந்து மதத்தை இப்படி எல்லாம் காப்பாற்ற முடியாது; என்னைத் தடை செய்யும் அளவுக்கு மட்டமாக நடந்துகொண்டார்கள். இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக ஆர்எஸ்எஸ்காரர்கள் நடந்துகொண்டதுபோல் இதுவரை நடந்தில்லை' என்று முதல்வர் எம்ஜிஆர் குமுறியதை அதிமுக அறியுமா?

எம்ஜிஆரையே அவமதித்த எம்ஜிஆரிடமே வன்முறையைக் காட்டிய கட்சியிடம் அதிமுக கூட்டணி சேருவது எந்த வகையில் சரியானது, நேர்மையானது?

இன்று அவ்வமைப்பு தமிழ்நாட்டின் அதிமுக அரசையும், அக்கட்சியின் அத்தனைப் பிரிவுகளையும் முறுக்கி முறுக்கி இப்படி சாசனம் தயாரித்து வெற்றி கொள்ளப் பார்க்கிறதே! இதனைத் தமிழ்நாட்டு வாக்காளர்கள் புரிந்துள்ளனர்!

2019 மக்களவைத் தேர்தல் முடிவு என்ன?

2019 இல் நாடாளுமன்றத் தேர்தலில் பண பலமும், பராக்கிரமப் படையெடுப்பும் படுதோல்வியே கண்டது!
தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையில், வாக்காளர்களைப் பொறுத்தவரையில் மிகுந்த தெளிவுடனும், முடிவுடனும் இருக்கிறார்கள்.

காரணம், ஒவ்வொரு தமிழ்நாட்டுக் குடும்பமும் கொதி நெருப்பின்மேல் நின்று கொண்டுள்ள நிலையே எதார்த்தம்!
விலைவாசி ஏற்றம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து, மகளிருக்குப் பாதுகாப்பின்மை போன்ற தாங்கொணாக் கொடுமைகளும், அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிய ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடும் நிலை; இல்லத்தரசிகளின் வற்றாத கண்ணீர், இவற்றைப் போக்கிட இப்போதுள்ள அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்த மக்கள் தாங்களே பாயும் 'ஏவுகணைகளாக' மாறுவதை எவராலும் தடுத்துவிட முடியாது!
பிரிந்தவர்கள் இணைந்து நின்றாலும், அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு ஒருபோதும் கிட்டாது!

1999 இல் ஜெயலலிதா சொன்னது என்ன?

ஜெயலலிதா இருந்தபோதே அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தோல்வி ஏற்பட்ட இக்கட்டான அனுபவங்களை மனதிற்கொண்டே, ’என் வாழ்நாளில் நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அதற்காக வருந்துகிறேன். இனிமேல், எக்காலத்திலும் அந்தத் தவறைச் செய்யமாட்டேன்' என்று சென்னைக் கடற்கரையில், 1999 இல் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாநாட்டில் பகிரங்கமாகப் பேசினார்.

அதை மீறி, அவரே பாஜகவுடன் கூட்டு சேர்ந்து, படுதோல்வி அடைந்தார். திமுக கூட்டணி பெரு வெற்றி பெற்றது.
அதில் கற்றுக்கொண்ட அரசியல் பாடத்தின் காரணமாக, பிரதமராக வந்த மோடி வற்புறுத்தியும் கூட்டுச் சேர மறுத்தார். அதனால்தான் அவரது கடைசி தேர்தலில் 'மோடியா? லேடியா?' என்று தேர்தல் மேடைகளில் முழங்கினார்.

உண்மைத் திராவிடம் வெல்லும்!

இதை மீறித்தான் இப்போது 'ஜெயலலிதா ஆட்சி', 'ஜெயலலிதா ஆன்மா' பேசும் இவர்கள், அவர் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிராக இப்படி ஒரு அடிமைச் சாசனம் எழுதுகின்றனர்! தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் கற்பிப்பிப்பது உறுதி! திராவிடம் வெல்லும்!".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்