முதல்வர் பழனிசாமியின் பிடியிலிருந்து தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் வெளியில் வந்து, பெண் எஸ்.பி-யின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்.பி-யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், தாமதித்தால், தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 05) வெளியிட்ட அறிக்கை:
"சிறப்பு டிஜிபியால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி-க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்குத் திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலை மிரட்டலைப் பார்த்துக் கொந்தளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் தமிழகக் காவல்துறைத் தலைவரைச் சந்தித்துப் புகாரளித்த பிறகும், இந்த நிமிடம் வரை சிறப்பு டிஜிபியையும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி-யையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி பெண்ணினத்திற்கே சாபக்கேடாகி விட்டார்!
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் இன்னும் பழனிசாமியின் சட்ட விரோத உத்தரவுகளை மதித்து பாலியல் தொந்தரவு கொடுத்தவரையும், புகார் கொடுக்க விடாமல் தடுத்தவரையும் தமிழகத் தலைமைச் செயலாளரும், உள்துறைச் செயலாளரும் காப்பாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது.
» யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2021 முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு: எப்படி விண்ணப்பிப்பது விவரம்
பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள பெண் போலீஸ் எஸ்.பி-க்கு கொலை மிரட்டல் விடுக்கும் துணிச்சல் குற்றவாளிகளுக்கு வந்தது எப்படி? இப்படி அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ள இரு போலீஸ் அதிகாரிகளையும் இன்னும் சஸ்பெண்ட் செய்து கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது எதற்காக?
அதிமுகவுக்கு தேர்தல் வேலை செய்யப் போகிறார்களா? தனக்குச் சிறப்பு டிஜிபியின் காருக்குள் நேர்ந்த கொடுமை குறித்து பெண் எஸ்.பி. புகாரளித்து 13 நாட்கள் கழிந்து விட்டன. நான் கண்டித்து அறிக்கை விட்டு, திமுக மற்றும் மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்திய பிறகு, எஸ்.பி-யின் புகார் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து சிறப்பு டிஜிபியையும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி-யையும் ஏ1 மற்றும் ஏ2-களாக அறிவித்து இன்றோடு 7 நாட்களாகி விட்டன. ஆனாலும் இதுவரை சிறப்பு டிஜிபியும், செங்கல்பட்டு எஸ்.பி-யாக இருந்தவரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை. சிபிசிஐடி பதிவு செய்த வழக்கில் கைதும் செய்யப்படவில்லை!
ஒரு பெண் எஸ்.பி-க்கே நிகழ்ந்த இந்த அநீதி மற்றும் பாலியல் சித்ரவதையைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழகமே எரிமலையாகக் குமுறிக் கொண்டு இருக்கிறது.
தாய்மார்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஏற்கெனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டது.
பரனூர் சுங்கச்சாவடியில் அத்துமீறி பெண் எஸ்.பி. மறிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு, மனித உரிமை ஆணையம் உள்துறைச் செயலாளருக்கும் தமிழக டிஜிபிக்கும் நோட்டீஸ் அனுப்பி விட்டது. மேலும், தமிழக டிஜிபியை நேற்றைய தினம் 10 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து 'பெண் எஸ்.பி-க்கு கொலை மிரட்டல்' எனப் புகாரும் அளித்து விட்டார்கள்.
சக பெண் அதிகாரிக்கு நீதிகேட்டு முறையிட்ட அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளின் தார்மீக, அறவுணர்ச்சியை நான் பாராட்டுகின்ற நேரத்தில், தமிழகமெங்கும் 'இருவரையும் கைது செய்' என்ற தாய்மார்கள் போராட்டக்குரல் கேட்பதை உணர முடிகிறது.
ஆனாலும் இந்த இரு குற்றவாளிகளையும் முதல்வர் பழனிசாமியும் அவரது பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்கும் உள்துறை செயலாளரும், தலைமைச் செயலாளரும் அரண் போல் நின்று காப்பாற்றி வருவது நியாயமா? ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்கும் இவர்கள் சக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நடைபெற்ற இந்தக் கொடுமையை இன்னும் வேடிக்கை பார்ப்பதா?
பாலியல் அத்துமீறலும், அதிகாரத் திமிரும் கொண்டு, அடக்கி ஒடுக்க நினைக்கும் இந்த அட்டூழியச் செயல் தமிழகக் காவல்துறை வரலாற்றில், ஏன், தமிழக அரசு நிர்வாக வரலாற்றில் கூட ஒரு அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக குற்றவாளிகளை இரண்டு ஆண்டுகள் காப்பாற்றினார் முதல்வர் பழனிசாமி. பிறகு ஒரு பெண் எஸ்.பி-க்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு வழக்கில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தும் அந்த ஐ.ஜி-யைக் காப்பாற்றி, தன் மீதுள்ள ஊழல் வழக்குகளையும் தனது அமைச்சரவை சகாக்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளையும் நீர்த்துப் போக வைத்தார்.
இப்போது தனது 'கைத்தடியாக' இருந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினரின் அராஜகத்தை வேடிக்கை பார்த்து, விவசாயிகள் மீதே கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த சிறப்பு டிஜிபி-யையும், எதிர்க்கட்சியினர் மீது தடியடி நடத்தவும், பொய் வழக்குப் போடவும் துணை போன செங்கல்பட்டு எஸ்.பி-யையும் பாதுகாத்து நிற்பது முதல்வர் பழனிசாமி மட்டுமல்ல, தற்போதுள்ள தமிழக அரசு நிர்வாக இயந்திரமும்தான் என்பது வெட்கித் தலை குனிய வைக்கிறது. சட்டத்தின் ஆட்சி அதிமுக ஆட்சியின் அந்திம காலத்தில் மேலும் சந்தி சிரித்து நிற்கிறது.
'பாலியல் புகாருக்கு உள்ளானவர்களைப் பாதுகாப்பதும்' 'பெண் எஸ்.பி-களுக்கே பாதுகாப்பற்றதும்' தான் அதிமுக ஆட்சியில் 'வெற்றி நடை போடும் தமிழகம்' என்ற பிரச்சாரத்தின் லட்சணமா? அதற்கு மக்கள் வரிப்பணத்தில் விளம்பரமா? வெட்கம்! வெட்கம்! மன்னிக்க முடியாத குற்றம்!
பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முதல்வர் பழனிசாமிக்குத் தமிழகத் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்! ஆகவே முதல்வர் பழனிசாமியின் பிடியிலிருந்து தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் வெளியில் வந்து, பெண்ணினத்தின், அதிலும் ஒரு பெண் எஸ்.பி-யின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்.பி-யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை தாமதித்தால், தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago