சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தென்காசியில் தானும், கோவில்பட்டியில் ராதிகாவும் போட்டியிட வாய்ப்புள்ளதாக சரத்குமார் தெரிவித்தார்.
முன்னதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது மாநில பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடி திரவியபுரத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான ரா.சரத்குமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.சுந்தர் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் எம்.பாகீரதி வரவேற்றார்.
மாநில முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார், மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், கொள்கை பரப்பு செயலாளர் என்.எம்.எஸ்.விவேகானந்தன், அரசியல் ஆலோசகர்கள் ஆர்.ஜெயப்பிரகாஷ், டி.டி.என்.லாரன்ஸ், துணைப் பொதுச்செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், ஜி.ஈஸ்வரன் ஆகியோர் பேசினர். தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எம்.எக்ஸ்.வில்சன் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
இனி முழு நேரமும் கட்சிப் பணியே..
கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், நான் முழுநேர கட்சிப் பணியை தொடங்கியுள்ளேன். கட்சியின் வளர்ச்சியை லட்சியமாகக் கொண்டு நிச்சயம் பணியாற்றுவேன். இந்த முறை நிச்சயம் நான் தேர்தலில் போட்டியிடுவேன். நான் கோவில்பட்டி அல்லது வேளச்சேரி தொகுதியில் போட்டியிடப்போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தலைவர் எந்தத் தொகுதியில் போட்டியிடச் செல்கிறாரோ அந்தத் தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றார் ராதிகா.
கோவில்பட்டியில் ராதிகா:
தொடர்ந்து சரத்குமார் பேசும்போது, இந்தக் கூட்டணி சிறப்பாக அமையும். கமல்ஹாசன் எண்ணத்தையும் அறிந்து, எங்கே நாம் பின்வாங்க வேண்டுமோ, அங்கு பின்வாங்கிக் கொள்வோம். மற்ற இடத்தில் வியூகத்தை அமைத்து வெற்றி பெறுவோம். ராதாபுரம் தொகுதியில் கட்சியின் அரசியல் ஆலோசகர் லாரன்ஸ் தான் வேட்பாளர். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.
அதுபோல கோவில்பட்டி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். நான் ஆலங்குளம், தென்காசியில் நிற்கலாம். எங்கே நின்றாலும் உழைப்பு முக்கியம். உழைப்பும் உறுதியும் இருக்கும் போது வெற்றி பெறுவோம் என்றார் அவர்.
சரத்குமாருக்கு அதிகாரம்:
கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக ரா.சரத்குமார் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதுபோல முதன்மை பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமார், பொருளாளராக ஏ.என்.சுந்தரேசன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள், மண்டல செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு கூட்ட மேடையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
2021 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகம் குறித்து முடிவெடுக்க சரத்குமாருக்கு அதிகாரம் வழங்கி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேர்தல் அறிக்கை வெளியீடு:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையையும் நேற்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் சரத்குமார் வெளியிட்டார். 'பணமில்லா அரசியல், உண்மையான ஜனநாயகம், எளியவருக்கும் வாய்ப்பு' என்ற தலைப்பில் 12 பக்கங்களை கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பண அரசியலை ஒழிப்போம், கல்வி, மருத்துவம், அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு எந்த இலவசங்களும் கிடையாது. தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண விவகாரங்களை அரசே கையாளும். வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவோம். முழுநேரமும் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். தனியார் நிறுவன வேலைவாப்புகளில் தமிழர்களுக்கு 90 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். ரேசன் பொருட்கள் வீட்டுக்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
நிறைவாக கட்சியின் இளைஞரணி துணைச் செயலாளர் டி.குரூஸ் திவாகர் நன்றி கூறினார். மாநிலம் முழுவதும் இருந்து மாநில, மண்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் சரத்குமாரின் உரை:
சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ள முக்கியமான நேரத்தில் இந்த பொதுக்குழு நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தோம். இம்முறை எங்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும். ஒன்றிரண்டு இடங்களை கொடுத்தால் நிச்சயமாக நிற்கமாட்டோம். அதுபோல தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதற்கு பிறகும் நமக்கு முறையான அழைப்பு வரவில்லையெனால் அவர்கள் நம்மை மதிக்கவில்லை என்று அர்த்தம். நம்மை கறிவேப்பிலை போல பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும்.
மேலும் நமது வாக்குச்சதவீதம் என்ன, நமக்கான இடம் தமிழகத்தில் எங்கே இருக்கிறது, தமிழக மக்கள் நம்மை எப்படி வரவேற்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளோம். என்ன விமர்சனம் வந்தாலும், யார் நையாண்டி செய்தாலும் இந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம். இத்தனை நாட்களும் நமது உழைப்பை மற்ற கட்சிக்கு கொடுத்துவிட்டோம். நம்மை அவர்களது தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த முறை அந்த நிலை இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்நிலையில் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்துவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. இருவரும் பேசி புதிய அணியை உருவாக்க முடிவு செய்தோம். இரு திராவிட கட்சிகளை தவிர்த்து நல்ல கூட்டணி அமையுமா என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இது தொடர்பாக இரு கட்சிகளும் ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
அதன் பிறகு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினேன். முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11.55 மணியளவில் கமல்ஹாசன் என்னை தொடர்பு கொண்டு கொள்கை ரீதியாக நாம் இணைகிறோம் என்ற மகிழ்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.
கமல் தான் முதல்வர் வேட்பாளர்:
எங்கள் அணியில் முதல்வர் வேட்பாளர் யார் என எல்லோரும் கேட்கிறார்கள். எங்கள் அணியில் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பிறகு நடப்பதை பின்னர் கமல் கூறுவார். யார் யார் எந்த பதவியில் இருப்பார்கள் என்பதை கமல் தான் கூறுவார். யார் முதல்வர் என்பது முக்கியமல்ல. வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம். அது தான் தேர்தலுக்கான வியூகம். இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த 2- 3 நாட்களில் இந்த பேச்சுவார்த்தை மேலும் வலுவடைந்து ஒரு சிறந்த கூட்டணி உருவாகும்.
இந்தக் கூட்டணி மூன்றாவது அணி அல்ல. முதன்மையான கூட்டணி. மக்களுக்கான கூட்டணி. வெற்றிக்கான வியூகத்தை அமைத்து இன்றே பணியை தொடங்குங்கள். ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என வீடு வீடாக சென்று மக்கள் காலில் விழுந்து கேட்க நான் தயாராக இருக்கிறேன்.
அதுபோல நீங்களும் வீடு வீடாக சென்று மக்கள் காலில் விழுந்து ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என கூறுங்கள். தொண்டர்கள் வியூகம் அமைத்து பணியாற்றுங்கள். கடினமாக உழைக்க வேண்டும். அவ்வாறு உழைத்தால் நமது முதன்மை கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமர வைக்க முடியும் என்றார் சரத்குமார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago