செம்மொழி நிறுவனத்தைச் சிதைத்த பாஜக, தமிழ் அடையாள வேடமிட்டு உள்ளே நுழையத் திட்டமிடுகிறது என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (மார்ச் 02) வெளியிட்ட அறிக்கை:
"தங்களிடமுள்ள சர்வ பலத்தையும் முழு வீச்சில் இறக்கிவிட ஆயத்தம்!
எப்படியாவது தமிழ்நாட்டைக் கொஞ்சமாவது காவிமயமாக்கி ஆர்எஸ்எஸ் - பாஜகவை வைத்து கலாச்சார, அரசியல் ரீதியாக ஊடுருவி, திராவிட இயக்கங்களை அழித்து, திராவிடச் சித்தாந்தங்களை அழித்து, தமிழ்நாட்டின் தனித்தன்மையை மாற்றிவிட கடுமையான முயற்சிகளில் இப்போது தீவிரமாக, மத்தியில் உள்ள ஆட்சி அதிகாரச் செல்வாக்கு என்ற ஆயுதத்தைக் கொண்டு, இங்குள்ள ஊழல் நிறைந்த, 'மடியில் கனம் உள்ள' அதிமுக ஆட்சியைப் பயன்படுத்தி உண்மையான திராவிடர் இயக்கத்தை ஆட்சிக்கு வர முடியாமல் செய்யும் வியூகத்தை, இந்தத் தேர்தல் களத்தில் அமைத்திட, தங்களிடமுள்ள 'சர்வ பலத்தையும்' முழு வீச்சில் இறக்கிவிட ஆயத்தமாகிவிட்டனர்!
» அமமுக தலைமையில் ஒரு கூட்டணி; திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே இலக்கு: தினகரன்
» காங்கிரஸைக் கை கழுவுகிறதா திமுக? கூட்டணியில் என்னதான் பிரச்சினை?
பல்வேறு உத்திகளையும், 'வித்தை'களையும் கைமுதலாகக் கொண்டு...
தமிழ்நாடு பெரியார் மண், திராவிட மண், சமூக நீதி மண் என்பதை எப்படியாவது மாற்றிவிட பல்வேறு உத்திகளையும், 'வித்தை'களையும் கைமுதலாகக் கொண்டு ஆர்எஸ்எஸ் - பாஜக இறங்கியுள்ளது! வீரத்தால் வெல்ல முடியாதபோது, வஞ்சகத்தையே ஒப்பனை மூலம் அரங்கேற்றி, சூது, சூழ்ச்சி மூலம் 'விஷ உருண்டைக்குத் தேன் தடவிக் கொடுப்பது' அவர்களின் வாடிக்கை.
'திடீர் தமிழ்க் காதல்' பீறிட்டுக் கிளம்ப வேண்டிய அவசியம் என்ன?
தமிழ்நாட்டு மக்களுக்கு, வாக்காளர்களுக்கு வலை வீசிட இப்போது ஒரு புது முறை ஒன்றை வடக்கே இருந்து வந்து தமிழ்நாட்டைப் 'பிடிக்க' எண்ணும் ஆர்எஸ்எஸ் - பாஜக தலைவர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற பலரும் தமிழ் மொழி, திருக்குறள், தமிழ் இலக்கியத்தின் பாடல்கள், தமிழ்க் கலாச்சாரத்தின் பழைமை, பெருமை பற்றிப் பேசி, 'எங்களால் இந்த அழகிய தமிழ் மொழியைப் படிக்க முடியவில்லையே!' என்று கூறி, 'வானவில்' போல் பல வண்ண வண்ண வேடிக்கைகளை விட்டுச் செல்கின்றனர்!
இவர்களுக்கு இப்போது 'திடீர் தமிழ்க் காதல்' பீறிட்டுக் கிளம்ப வேண்டியதன் அவசியம் என்ன? உரைகளைத் தயாரித்து இவர்களுக்கு யார் யோசனை சொல்லியிருக்கிறார்கள் என்ற பூனைக்குட்டி இப்போது வெளியே வந்துவிட்டது!
ஆர்எஸ்எஸ் சில விபீடணர்களைத் தயாரித்துள்ளதோடு, சில சாதிக்காரர்களுக்குத் தூண்டில் போட்டு இழுத்து வைத்தும் உள்ளது!
'தமிழ்ப் பெருமை பஜனை' என்ற பாசாங்குத் தனம்!
தென்னிந்தியாவுக்கு உள்ள அமைப்பாளர் ஒருவர் கொடுத்துள்ள அறிக்கையின்படி, தமிழர்களை, தமிழ்நாட்டவரை 'வளைக்க' தமிழ் அடையாளத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் திட்டமாம். அதன் விளைவுதான் இப்போது வடபுலத்திலிருந்து வரும் காவித் தலைவர்களின் 'தமிழ்ப் பெருமை பஜனை' என்ற பாசாங்குத் தனம்! இது ஒரு தேர்தல் உத்தி. இதைப் புரியாத அளவுக்கு தெளிவற்றவர்கள் அல்ல திராவிடத் தமிழ் மக்கள், குறிப்பாக வாக்காளர்கள்!
'தமிழ்ப் பெருமை போற்றி! போற்றி!!' அகவல் பாடுவது யாரை ஏமாற்ற?
1. உண்மையில் தமிழ் மீது பற்றோ, பாசமோ, அக்கறையோ இருந்தால், மத்திய அரசு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை அலட்சியப்படுத்தி இருப்பார்களா? கருணாநிதி தம் முயற்சியால் காங்கிரஸ் - திமுக இடம்பெற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் தமிழுக்கு செம்மொழித் தகுதி அளிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
அதனைக் கடந்த ஏழு ஆண்டுகால பாஜக - ஆர்எஸ்எஸ் ஆட்சி எவ்வளவு சிதைத்து, சின்னாபின்னமாக்கி, அந்த மாபெரும் ஆய்வு நிறுவனத்தை, அதன் தனி அடையாளத்தை நீர்த்துப் போக வைத்து, ஏதோ தினக் கூலி நிறுவனம் போல செய்துவிட்டு, இப்படி 'தமிழ்ப் பெருமை போற்றி! போற்றி!!' அகவல் பாடுவது யாரை ஏமாற்ற?
2. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் இன்னமும் இந்தியில் கடிதம் அனுப்புவதும், அதை சுயமரியாதை உள்ள அந்த உறுப்பினர்கள் திருப்பி அனுப்புவதும் தொடர்கதையாக தொடருகிறதா இல்லையா? அப்புறம் ஏன் இந்தத் 'தமிழ்ப் பெருமை' மாய்மாலம்?
3. மத்திய அரசு, ஒத்திசைவுப் பட்டியலில் கல்வி இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்க, படிக்க வாய்ப்பு ஏற்படுத்த தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு மறுத்துக்கொண்டே, 'தமிழ் புராதன மொழி' என்று பசப்புரை செய்து, 'ஓநாய்கள், ஆடு நனைகிறதே என்று அழுவதுமான காட்சி அரங்கேற்றம் எல்லாம் ஏமாற்று வித்தைகள் அல்லாது வேறு என்ன?
4. உள்ளபடியே தமிழ் மொழி மீது இவர்களுக்கு உண்மையான அக்கறையும், ஆர்வமும் இருக்குமேயானால், உலகப் பொது நூலாம் திருக்குறளை தேசிய நூலாகப் பிரகடனப்படுத்தலாமே, செய்ய முன்வருவார்களா?
5. செம்மொழித் தகுதியுள்ள தமிழ் மொழி உலகத்தின் பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. அந்தத் தமிழ் மொழிக்கு இவர்கள் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய தொகை எவ்வளவு? பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு இதுவரை இவர்கள் செலவழித்த தொகை எவ்வளவு? என்பது மக்களுக்குப் புரியாதா?".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago