காங்கிரஸைக் கை கழுவுகிறதா திமுக? கூட்டணியில் என்னதான் பிரச்சினை?

By மு.அப்துல் முத்தலீஃப்

எண்ணிக்கை அடிப்படையில் கட்சிகளை அணுகும் திமுகவின் போக்கு காரணமாக கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் உள்ளதும், அதிக தொகுதிகளை வாங்கி வெற்றி பெற முடியாத நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க கூட்டணிக் கட்சிகளே வகை செய்வதாக திமுக எண்ணுவதும் தொகுதிப் பங்கீட்டில் எதிரொலிப்பதால் சிக்கல் எழுந்துள்ளது. இந்த விவகாரம் மதச்சார்பற்ற எண்ணம் கொண்டோரைக் கவலையுற வைத்துள்ளது.

திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் உள்ள வித்தியாசம் ஒப்பிட முடியாத ஒன்று. அதிமுகவைக் கடுமையாக விமர்சித்து ஊழல் பட்டியலை அளித்த பாமக, முதல்வர் வேட்பாளரையே ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அடம் பிடித்த தேமுதிக, அதிமுக கூட்டணியல்ல, எங்கள் தலைமையிலான கூட்டணி எனப் பிடிவாதம் பிடித்த பாஜக என கதம்பமாக உள்ளவர்கள் ஒன்று சேர்ந்துள்ள கூட்டணியாக அமைந்துள்ளது அதிமுக கூட்டணி.

மறுபுறம் திமுக கூட்டணி, ஆளுகின்ற அரசைக் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடி இணைந்த கூட்டணியாக உள்ளது. கொள்கை அடிப்படையில் இணைந்த மதச்சார்பற்ற கூட்டணி நாங்கள் என அதன் தலைவர்கள் அடிக்கடி கூறிவருகின்றனர். ஆனால், தற்போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது நடக்கும் நிகழ்வுகள், வெளிவரும் தகவல்கள் இந்தக் கூற்றை மறுக்கும் நிலையில் உள்ளதைக் காணமுடிகிறது.

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு தேமுதிகவுடன் மட்டும் சற்று சிக்கல் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், திமுகவில் அனைத்துக் கட்சிகளும் அதிருப்தியில் இருப்பதாகத் தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் தோழமைக் கட்சிகள் சொல்லும் காரணம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதையுடன் கூடிய தொகுதிகளை அளிக்க வேண்டும் என்பதே.

ஐபேக் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையைக் கேட்டு திமுக தலைமை அதிக இடங்களைத் தக்க வைக்க 180க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புகிறது. அதனால் தோழமைக் கட்சிகளுக்குக் குறைந்த இடங்களே ஒதுக்கும் நிலைக்கு வந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அளித்தது போன்ற அரவணைப்புடன் கூடிய அணுகுமுறை வேண்டும் என்பதே தோழமைக் கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் 180க்கும் குறைவான இடங்களில் நின்றால் திமுக ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றால் எங்களைக் கேட்கக்கூடாது என பிரசாந்த் கிஷோர் கூறியதாக ஒரு தகவல் ஓடுகிறது. அதேநேரம் திமுக நிர்வாகிகள் மத்தியிலும் அந்த எண்ணம் உள்ளது. 'இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை' என்று ரஜினி சொன்ன வசனம் திமுக நிர்வாகிகளால் மேற்கோள் காட்டப்படுகிறது. அதற்கு ஏற்ப திமுக தலைமை இயங்குவதில் தவறில்லை என்பது அக்கட்சி நிர்வாகிகளால் ஏற்றுக் கொள்ளப்படும் வாதமாக உள்ளது.

அதேநேரம் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக இணைந்து இயங்கும்போது அது தமிழக அரசியலில் ஸ்டாலின் போன்ற தலைவர்களுக்கு மதிப்புமிக்க இடத்தைத் தரும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. தோழமைக் கட்சிகளின் எண்ணிக்கை, வாக்குகள் அடிப்படையில் பார்க்கப்படுவது அல்ல என்பதை திமுக தலைவர் கருணாநிதி பல நேரம் உணர்ந்து வைத்திருந்தார். அதனால் அவர் கூட்டணிக் கட்சிகளை அணுகிய விதம் சிறப்பான ஒன்றாக இருக்கும்.

கட்சிகள் சிறிதோ, பெரிதோ இணைத்துக்கொண்டு மகா கூட்டணி என்கிற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்தார். இது 1989-ல், 1996-ல் நடந்தது. புதிதாக காங்கிரஸிலிருந்து பிரிந்தவர் தானே என மூப்பனாரைக் குறைவான எண்ணிக்கை கொடுத்து ஓரங்கட்டவில்லை. கணிசமான இடம் கொடுத்தார். திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

ஆனால், காங்கிரஸ் கட்சியை ஒதுக்கிவிட்டு 2014 மக்களவைத் தேர்தலை திமுக சந்தித்தது. அதில் திமுக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் பாதிப்பைச் சந்தித்தன. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணியாக மக்கள் நலக் கூட்டணி உருவான நிலையில், பாமக தனித்து நின்ற நிலையில் வாக்குகள் சிதறினால் யாருக்கு வேண்டுமானாலும் பாதிப்பு வரும், சில ஆயிரம், அல்லது சில நூறு வாக்குகள் தீர்மானிக்கும் என்கிற நிலையில் தேமுதிக, திமுக அணியில் வந்தால் வெற்றி நிச்சயம் என்று அப்போது அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியும் பழம் நழுவிப் பாலில் விழும் என தேமுதிக கூட்டணிக்குள் வருவதைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், திமுகவிலேயே தேமுதிகவைச் சீண்டும் வேலைகள் நடைபெற்றதாலும், விஜயகாந்தின் சில நிபந்தனைகள் ஒத்துவராததாலும் தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்குச் சென்றது. இதன் பாதிப்பு திமுகவுக்குக் கடுமையாக இருந்தது. பல தொகுதிகளில் அதிமுக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றது.

இதே நிலை தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலிலும் நிலவுகிறது. மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லாவிட்டாலும் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் கணிசமான வாக்குகளைத் தொகுதிக்கு 1000 முதல் 5000 வரை பிரிக்க வாய்ப்புள்ளது. மும்முனைப் போட்டி, திடீரென முதல்வர் பழனிசாமி அறிவித்த அறிவிப்புகள், திமுக வெற்றியை நூழிலையில் பறிக்க வாய்ப்புள்ளதை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிடமும், கூட்டணிக் கட்சிகளிடமும் தொகுதி எண்ணிக்கையில் திமுக நீக்கு போக்கின்றி தீவிரம் காட்டினால் ஒருவேளை காங்கிரஸ் வெளியில் சென்றால் அது திமுக 5 ஆண்டுகள் கட்டமைத்த பிம்பத்தை பாதிக்கும்.

இதுவரை திமுக வெல்லும் என்று கூறும் கருத்துக் கணிப்புகள் அத்தனையும் திமுக பலமான அணியை அமைத்து தேர்தலைச் சந்திப்பதை வைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோன்று பலமான அணி வெல்லும் அணி என்று மக்களை நம்ப வைப்பதும், ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிப்போம் என்று கட்சி சாராத பொதுவான வாக்காளர்களை எண்ண வைப்பதும் ஒருவகையான உத்தி என்பது கருணாநிதி கற்றறிந்து செயல்படுத்திக் காட்டிய வெற்றிகரமான உத்தி.

பிரசாந்த் கிஷோரை விட ஆகப்பெரிய ஆளுமையான, ராஜதந்திரியான கருணாநிதியின் இந்தத் தேர்தல் உத்தியை திமுக தலைவர்கள் மறுக்க வாய்ப்பில்லை. எண்ணிக்கையாக, வாக்குகளாக கட்சிகளை அணுகும் போக்கு எந்த நாளும் வெற்றி பெற்றதில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட ஒவ்வொரு கூட்டணிக் கட்சியின் சில, பல ஆயிரம் வாக்கும் சேர்ந்தே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். 60 வாக்குகளுக்காக 5 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீதிமன்றப் படியேறி நியாயம் கேட்டு நிற்கும் ராதாபுரம் அப்பாவு அதற்குச் சிறந்த உதாரணம்.

மறுபுறம் காங்கிரஸ் இல்லா தமிழகம் எனும் பாஜகவின் எண்ணத்தை திமுக தலைமையே நிறைவேற்றித் தருகிறதா? என்கிற கேள்வியும் எழுகிறது. பலமான இரண்டு அணிகள் தேர்தலைச் சந்திக்கும்போது எதிரணிக்கு வாய்ப்பு தரும் எந்தச் செயலையும் அனுமதிக்காத தலைமையே வென்றுள்ளது. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திமுக தலைவர் கருணாநிதியே உதாரணமாக இருந்தார்.

அதேநேரம் திமுக தரப்பில் வைக்கப்படும் ஒருவாதம் யதார்த்தத்துக்கு ஒத்துவருவதையும் மறுக்க முடியாது. கூட்டணியில் பெரிய கட்சியான திமுக ஆட்சி அமைக்க விரும்புகிறது. தோழமைக் கட்சிகள் பல நேரம் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், வெல்வது மிகக்குறைவாக உள்ளது. அதிக தொகுதிகள் வாங்கி நிற்பது கவுரவமா? வாங்கிய தொகுதிகளில் அதிக அளவில் வெல்வது கவுரவமா என்கிற கேள்வி திமுக நிர்வாகிகளின் வாதமாக உள்ளது.

கடந்த முறை 41 தொகுதிகளைப் போராடிக் கேட்டு நின்ற காங்கிரஸ் வென்ற தொகுதிகள் 9 மட்டுமே இது மற்ற கட்சிகளுக்கும் பொருந்தும். அதேபோன்று சின்னம் கிடைக்காமல், கிடைக்கும் சின்னத்தில் நிற்கவேண்டிய நிலையில் உள்ள கட்சிகள் தோல்வியைத் தழுவ அதிக வாய்ப்புள்ளது, அதுவும் எதிர் அணிக்குச் சாதகம். ஆகவே, கூட்டணிக் கட்சிகள் மனம் வருந்தினாலும் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்ற வாதம் வைக்கப்படுகிறது.

கூட்டணியின் பேச்சுவார்த்தையில் ஏற்ற இறக்கம் இருக்கும். 41 தொகுதிகளில் நின்ற நாம் 25 தொகுதிகளில் நிற்பதா என காங்கிரஸ் நினைக்கலாம். ஆனால், 25 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை வெல்ல வாய்ப்பிருக்கும்போது பழைய நினைப்பில் பிடிவாதம் பிடித்து வெளியேறினால் பாதிப்பு இருபுறமும்தான் என்பதும் வாதமாக உள்ளது.

கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிகவைத் தக்கவைக்கும் பெருந்தன்மையுடன் கூடிய அணுகுமுறையும், தற்போதைய யதார்த்தத்தை உணர்ந்து எண்ணிக்கைகளை ஏற்கும் மனோபாவமும் கொண்ட இலகுவான பேச்சுவார்த்தை இருபுறமும் தெளிவான முடிவை நோக்கி நகர்த்தும். ஸ்டாலின் 5 ஆண்டுகாலம் கட்டிக்காத்த சமூக நீதிக்கான அணியின் தலைவர் கவுரவமும் நீடிக்கும் என்பது அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்