அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு: உடலை மறைத்து வைத்த 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவசாயியின் உடலை 2 துண்டாக வெட்டி மறைத்து வைத்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருமானூர் அருகேயுள்ள சேனாபதி காலனித் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி சவரிமுத்து (40). இவர் கடந்த 18-ம் தேதி இரவு அதே கிராமத்தில் தான் சாகுபடி செய்துவரும் வயலுக்கு நீர் பாய்ச்சச் சென்றார்.

ஆனால் மறுநாள் காலைவரை அவர் வீடு திரும்பாததைக் கண்டு, சவரிமுத்துவின் மனைவி ஜெசிந்தா மேரி திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் சேனாபதி கிராமத்தில் விசாரணையை மேற்கொண்டனர். இவ்விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவரின் வயலில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி சவரிமுத்து உயிரிழந்துள்ளார் என்பதும், இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருக்க சவரிமுத்துவின் உடலை நண்பர்கள் உதவியுடன் முருகேசன் 2 துண்டுகளாக வெட்டி, அதை கரும்பு வயலில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சவரிமுத்துவின் உடலை நேற்று முன்தினம் போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இவ்விவகாரத்தில் சவரிமுத்துவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார்,உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர், வயலில் மின்வேலி அமைத்திருந்த முருகேசன் மற்றும் சவரிமுத்துவின் உடலை வெட்டி, மறைத்து வைக்க உதவிய அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன், அவரது மகன் சாமிதுரை ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE