கள நிலவரம்: கனமழை புரட்டி எடுத்த கடலூரின் தற்போதைய நிலை என்ன?

By என்.முருகவேல்

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்தது. மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்களில் 43 பேரில் 27 பேருக்கு இதுவரை 1 கோடியே 8 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் முழுவதும் நவ.9-ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையினால் மாவட்டத்தின் உட்பகுதிகளான பண்ருட்டி,சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோயில், நெய்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய இடங்களில் சராசரியாக 38 செ.மீ.மழை பெய்ததது. இதில் நெய்வேலியில் அதிகபட்சமாக 48 செ.மீ மழை பதிவானது.

இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட 9 வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, மரவள்ளி, சவுக்கை என சுமார் 75 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கான குடிசைகள் சேதம்

மேலும், 12 ஆயிரம் குடிசைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதில் அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 3,893 குடிசைகள் சேதமடைந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட கால் நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

2000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதால் பெரும்பாலான ஊராட்சிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்தது. மாவட்டத்தின் பெரும்பாலன சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் கிராமப் புறங்களுக்கான போக்குவரத்து தடைபட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே எல்லப்பன் பேட்டையில் ரயில் தாண்டவாளத்தின் கீழ் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரயில் தண்டவாளம் சேதமடைந்தது.இதனால் கடலூர் -திருச்சி பயணிகள் ரயில் மற்றும் நாகூர் -பெங்களூர் ரயில் விழுப்புரம் மார்க்கமாக இயக்கப்பட்டது.

மீட்புப் பணிகள்

கனமழை ஏற்படுத்திய வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களை மீட்க, 85 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு 37 மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் பேர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.இதுவரை 57 கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள திருப்பூர், விழுப்புரம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 2000 மின்வாரிய ஊழியர்கள் கடலூர் மாவட்ட கிராமங்களில் மின் இணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரித்துச் செல்லப்பட்ட சாலைகளில் மண்கொட்டி சாலையை சமன்படுத்தும் பணிகளும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளும், துண்டிக்கப்பட்ட சாலைகளிலும் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்றுவருகிறது.

மீண்டும் மிரட்டிய மழை

நவ.9-ம் தேதி வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக் காரணமாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அதிகபட்சமாக 48 செ.மீ மழை பெய்தது. இதற்கு அடுத்தபடியாக சேத்தியாத்தோப்பில் 32.5 செ.மீ, சிதம்பரத்தில் 31.4 செ.மீ., பரங்கிப்பேட்டையில் 31.6 செ.மீ,பண்ருட்டியில் 20.4 செ.மீ. மழை பதிவானது.சில தினங்களாக ஓய்ந்திருந்த மழை சனிக்கிழமை முதல் மீண்டும் பெய்யத் துவங்கியதால், பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் மேலும் வேதனக்கு ஆளாயினர்

அமைச்சரவைக் குழுவுக்கு எதிர்ப்பு

இந்த நிலையில் அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவைக் குழுவினர் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும், அரசின் நிவாரண உதவிகளையும், மீட்புப் பணிகளையும் துரிதப்படுத்தி வருகின்றனர். மீண்டும் மழை தொடங்கிய நிலையில் கடலூர் பண்ருட்டி, சிதம்பரம் பகுதியில் நிவாரணப் பணிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர்களைக் கண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

சாலை மறியல்

இதனிடையே நிவாரண உதவிகள் சரிவர கிடைக்கவில்லை எனவும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பாரபட்சத்தோடு செயல்படுவதாகவும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும், மின் இணைப்பு வழங்குவதற்கு கட்டணம் கேட்பதாகவும் கூறி குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம்,நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

'தானே'வை தாண்டிய உயிர் பலி

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வீசிய 'தானே' புயலின் கோரத் தாண்டவத்துக்கு 21 பேர் பலியாயினர்.தற்போது மழை வெள்ளம் ஏற்படுத்திய உயிர்சேதம் 'தானே' புயலின் போது ஏற்பட்டதைக் காட்டிலும் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.அதாவது 43 பேர் இதுவரை மழை வெள்ளத்தால் இறந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நிவாரணப் பணிகளை செயல்படுத்தப்பட்டது மற்றும் விரைவுப்படுத்துவது குறித்த பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் மற்றும் அமைச்சரவைக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் ஆலோசனை நடத்தினர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு வெள்ள நிவாரணப் பணி சிறப்பு அலுவலரும், ஊரக வளர்ச்சித்துறை செயலாளருமான ககன்தீப் சிங் பேடி.கூறும்போது, ''கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் போர்க்கால அடிப்படையில் விரைவாக சீரமைக்கப்பட்டு வருகிறது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்டத்தில் 8 இடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு 37 மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் பேர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. குடிசை வீடுகளை இழந்த 10,810 நபர்களுக்கு ரூ.4.93 கோடி மதிப்பில் நிவாரணம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 28 பசுக்கள், 40 கன்றுக்குட்டிகள், 30 ஆடுகள் இறந்துள்ளது கண்டறியப்பட்டு ரூ.15.75 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரத்துறை மூலம் 200 மருத்துவர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு, 240 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாம்களின் மூலம் 23,659 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.கால்நடைகளுக்காக 121 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 85,144 கால்நடைகளுக்கு தடுப்பூசியும், 32,151 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் பணியும் முடிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையின் மூலம் பரவனாறு, செங்கால் ஓடை பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட உடைப்புகள், 2.5 லட்சம் மணல் மூட்டைகளைக் கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்கும் பணிகளில் 25 ஜேசிபி இயந்திரங்களும், 3 நீர்; மிதவை ஜேசிபி இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளில் 1,800 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் பாசிமுத்தான் ஓடையில் 2 நீர் மிதவை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.கூட்டுறவுத்துறையின் மூலம் 296 ஊராட்சிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு கூடுதலாக பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டு 89,300 லிட்டர் கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மழையின் அளவு சீராக குறைந்து வருவதால் மொத்தமுள்ள 683 ஊராட்சிகளில் 671 ஊராட்சிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் சீரமைக்கும் பணிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 43 மின்மாற்றிகள், 210 கிலோ மீட்டர் நீளமுள்ள மின்கம்பிகள் மாற்றப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் இறந்த 43 நபர்களில் 27 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.1.08 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் கடலூர் மாவட்டத்தில், வடலூரை அடுத்த மருவாய் அருகே நடு பரவனாற்றில் ஏற்படும் உடைப்பால் 10 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. | அது குறித்த விரிவான செய்தி - >கடலூர் - மருவாயில் மழையால் 3,000 குடிசைகள் சேதம்: நிரந்தரத் தீர்வு எப்போது?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்