தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்துக் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: கோ.பிரகாஷ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்துக் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, அனைத்துக் கட்சி கூட்டத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி இன்று (மார்ச் 1) வெளியிட்ட செய்தி வெளியீடு:

''தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வரும் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக பிப். 26 அன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடித்தல் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தலைமையில் இன்று (மார்ச் 1) ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

"வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களின் கட்சிக் கூட்டத்திற்கும், தற்காலிக அலுவலகம் அமைத்தல், வாகனங்கள் மற்றும் ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு அனுமதி பெறுவது சம்பந்தமாக https://suvidha.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவோ, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரிலோ அனுமதி கோரலாம். எந்த முறையில் வழங்கினாலும் இம்முறை இணையதளம் மூலமே சம்பந்தப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். நேரில் கொடுக்கப்படும் விண்ணப்பங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இணையதளத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் தங்களின் கைபேசி எண் அளித்து அதன் மூலம் ஓடிபி பெற்று உள் சென்று தங்களிடம் உள்ள சரியான விவரங்களை அளித்து தங்களுக்குத் தேவையான அனுமதிகளைக் கோரலாம்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, மேற்கண்ட நிகழ்வுகளுக்கு 48 மணி நேரம் முன்னதாக மனு செய்ய வேண்டும். ஒப்புதல் பெறும் பட்சத்தில் ஒப்புதல் வழங்கிய 72 மணி நேரம் வரை கட்சிக் கூட்டம், ஒலிபெருக்கி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ஒரே இடத்தில் கூட்டம் நடத்தவோ அல்லது ஒலிபெருக்கி அமைக்க பலர் மனு செய்யும்பட்சத்தில் முதலில் மனு செய்தவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

மனுக்கள் பெற்றபின் காவல் ஒருங்கிணைப்பு அலுவலர் மூலம் பரிசீலனை செய்து பரிந்துரை செய்யும் பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரின் இணையதளக் கணக்குக்குச் செல்லும். அங்கு அவர் சம்பந்தப்பட்ட மனுவினைப் பரிசீலித்து ஏற்கவோ நிராகரிக்கவோ செய்யலாம். தேர்தல் நடத்தும் அலுவலர் சம்மந்தப்பட்ட மனுவினை ENCORE Permission Module என்கிற https://encore.eci.gov.in என்ற இணையதள முகவரியில் மேல்நடவடிக்கை மேற்கொண்டு மனுவினை ஏற்கும்பட்சத்தில், இணையதளத்திலிருந்து சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டுப் பதிவேற்றம் செய்வார். மேற்கண்ட அனுமதி தொடர்பாக அனுமதி வழங்கிய விவரங்களை இணையதளம் வழியாகவும் வேட்பாளர்களின் செயலி (Candidates App) மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் cVIGIL செயலியின் மூலம் தெரிவிக்கலாம்.

பொதுக்கூட்டங்கள் காவல்துறையின் கட்டுப்பாடுகள், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறுமின்றி இரவு 10 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் சேகரமாகும் உணவுப் பொட்டலங்கள் உட்பட இதர குப்பைகளை பொதுக்கூட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் அல்லது பிரமுகர்கள் தங்களது சொந்த செலவில் அகற்றிட வேண்டும். பிறர் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசுவதோ, முழக்கங்கள் எழுப்புவதோ, பிற மதத்தினர், இனத்தினர் அல்லது தனிப்பட்ட நபரைத் தாக்கிப் பேசுவதோ கூடாது. கொடி, தோரணங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்க்க வேண்டும். கரோனா தொற்றின் காரணமாகப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் பறக்கும் படை மற்றும் குழுக்களைக் கண்காணிப்பதற்காக ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அக்கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800-425-7012இல் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணிகளைச் சீராகக் கண்காணிக்க ஒருங்கிணைப்பாளர்கள், 17 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்தத் தேர்தலைச்ஷ் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்திட ஒத்துழைப்பு நல்க வேண்டும்".

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்