அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடம் என்பது முக்கியமல்ல. கேட்கும் தொகுதிகளைக் கொடுங்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரிடமும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளுக்குக் கிள்ளிக் கொடுக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடும் நிலையில், அதிமுகவும் கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
வாக்குகள் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி என்றால் பாமக, அடுத்து தேமுதிக அடுத்து பாஜக வரும். ஆனால், மத்தியில் ஆளுகின்ற பெரிய கட்சி என்கிற அடிப்படையில் பாஜக தமிழகத்தில் அதிமுகவிடம் அதிக இடம் கேட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் முடிவு செய்வோம் என பாஜக தலைவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தம் கட்சிக்கு அதிக இடங்கள் வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது. அதேசமயம் அதிமுக 170 இடங்களுக்கு மேல் நின்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கூட்டணிக் கட்சிகளையும் விட்டுவிட மனமில்லை. இந்நிலையில் பாமகவின் கோரிக்கையான வன்னியர் உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றி பாமகவை 23 தொகுதிகளுக்குள் நிறுத்திய அதிமுக தலைமை, பாஜகவை 20 தொகுதிகளில் நிறுத்தத் திட்டமிட்டு இயங்கியது.
ஆனால், பாஜகவின் தேசிய தலைமை நெருக்குதல் காரணமாக அந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் மற்றும் புதுவைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவரை இரவு 10.30 மணி அளவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்தித்தனர். உடன் ரவீந்திரநாத் எம்.பி.யும், பாஜகவின் அமைப்பு தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷும் உடனிருந்தனர்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் அழைக்கப்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்துப் பல்வேறு ஊகங்கள் கிளம்பியுள்ளன. அமமுகவை அதிமுகவுடன் இணைப்பது குறித்து பாஜக தலைமை வலியுறுத்தியதாக ஒரு தகவலும், அமமுக குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் புகாருக்கு அதைப் பார்த்துக்கொள்ளலாம், தேர்தலைச் சந்தியுங்கள் என நம்பிக்கை அளிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரம் தொகுதி எண்ணிக்கை குறித்த பேச்சுவார்த்தைதான் பிரதான அம்சமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. இதில் தமிழகத்தில் பிரதான கட்சி என்கிற முறையில் 60 தொகுதிகள் வரை பாஜக தரப்பில் ஏற்கெனவே கேட்டதாகவும், அதிமுக அதிக எண்ணிக்கையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என அக்கட்சித் தலைமை கூறியதன் அடிப்படையில் பின்னர் குறைக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்றைய பேச்சுவார்த்தையின் பிரதான அம்சமாக பாஜகவுக்குக் கூட்டணியில் அதிக இடங்கள் ஒதுக்கப் பேசப்பட்டது. அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து 22 முதல் 25 தொகுதிகளுக்குள் தர ஒப்புக்கொள்ளப்பட்டது என்று கூறப்படுகிறது. இதில் முக்கியமாக எண்ணிக்கை, பிறகு பாஜக போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியல் அளிக்கப்படும். அதை மறுக்காமல் கொடுக்க வேண்டும் என்பதுதான் அமித் ஷா தரப்பில் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதனால் பாஜக கேட்கும் தொகுதிகளின் அடிப்படையில் எண்ணிக்கை கூடுதலாகவோ, குறைவாகவோ நிர்ணயிக்கப்படும். பாஜக, அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள் நிற்கும் தொகுதியைக் கேட்பதால் அதிமுகவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில் மாநில நிர்வாகிகள் கேட்கும் தொகுதிகளைக் கொடுத்துவிடுங்கள். எண்ணிக்கை பெரிய விஷயமல்ல என அமித்ஷா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
முக்கியமாக அமைச்சர் சரோஜா நின்று வென்ற ராசிபுரம் தொகுதி மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நிற்கவுள்ள காரைக்குடி தொகுதி, சத்யா மாவட்டச் செயலாளராக உள்ள தி.நகர் தொகுதி, மயிலாப்பூர் தொகுதி, அதிமுகவின் கோட்டையான பரமக்குடி தொகுதி உள்ளிட்ட ராமநாதபுரத்தில் உள்ள 4 தொகுதிகளையும், திருவாரூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கோவை வடக்கு அல்லது தெற்கு உள்ளிட்ட தொகுதிகளையும் பாஜக கேட்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
பொதுவாகத் தொகுதிகளைத் தேர்வு செய்வது, அல்லது கொடுக்கும் தொகுதிக்கு வேட்பாளரைத் தேர்வு செய்வது கட்சிகளின் வழக்கம். ஆனால், பாஜக பிரமுகர்களுக்காகத் தொகுதிகளைக் கேட்பதால் பிரச்சினை என அதிமுக தரப்பில் தகவல் ஓடுகிறது. ஆனாலும் இன்று மாலைக்குள் பாஜகவுக்கான தொகுதி எண்ணிக்கை இறுதிப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago