‘போர்முனைக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் தெருமுனைக்கும் பயன்பட வேண்டும்’ என்று நூல் வெளியீட்டு நிகழ்வில் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கேட்டுக்கொண்டார்
‘இந்து தமிழ் திசை’ வெளியீடான, ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்முனை முதல்தெருமுனை வரை’ நூல் வெளியீட்டுநிகழ்வு இணைய வழியே நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற தலைவரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவருமான பத்ம டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை நிகழ்வுக்கு தலைமையேற்று, நூலை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:
இன்றைக்கு நவீன அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்பு முயற்சிகள் நடைபெற அப்துல்கலாம் உந்துதலாக இருந்தார். போர்முனைக்குப் பயன்படும் ராணுவக் கண்டுபிடிப்புகள் சிறியளவில் மட்டுமே தெரியும் ரகசியமாக முன்பு இருந்தன. வி.டில்லிபாபு எளிய தமிழில் எழுதி இவற்றை பொதுமக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார். இதையொரு சவாலாகவே எடுத்து சாதித்திருக்கிறார்.
ஓர் எழுத்தாளரின் புத்தகம் வாசகர் மனதில் எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதிலேயே அந்தப் புத்தகத்தின் வெற்றிஅடங்கியிருக்கிறது. படிக்கிற வாசகர் புத்தகத்தில் உள்ள செய்திகளோடு ஒன்றிப்போக வேண்டும். அந்த வகையில் இந்த நூல் வாசகர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, டிஆர்டிஓ-வின் கண்டுபிடிப்புகளை அனைத்து மக்களும் அறிந்துகொள்ளவும், நாமும் டிஆர்டிஓ-வில் சேர வேண்டுமென்கிற ஆர்வத்தையும் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.
போர்முனைக்கான கண்டுபிடிப்புகள் தெருமுனைக்கும் பயன்பட வேண்டும். அவை ஏர்முனை வரைக்கும் செல்ல வேண்டும். அதுவேசிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான பயனளிக்கும் செயல்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கருத்துரைகள் வருமாறு:
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த முனைவர்வெ.பொன்ராஜ்: ஏவுகணை, ராக்கெட், போர் விமானங்கள் எனஅனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளும் மக்கள் சமூகத்துக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த நூலிலுள்ள செய்திகள் ராணுவ வீரர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பயனளிக்கும் தகவல்களைக் கொண்டுள்ளது. டிஆர்டிஓ பணிகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் ஒரு மாற்றத்தின் இயக்கமாக இந்த நூல் அமைந்துள்ளது.
தமிழக காவல் துறையின் டிஐஜி.யும் எழுத்தாளருமான முனைவர் பி.சாமூண்டேஸ்வரி, ஐபிஎஸ்: இந்த நூல் முழுவதையும் படித்தேன். நூலிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் அருமையாக உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சாமானிய மக்கள், மாணவர்கள், அறிவியல் ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான தகவல்களோடு சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. என்னுடைய துறை சார்ந்த பல நடவடிக்கைகளுக்கும் பயன்படும் பல தகவல்களும் நூலில் உள்ளன.
சென்னை ஆவடியிலுள்ள போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன மதிப்புறு விஞ்ஞானியும் இயக்குநருமான வி.பாலமுருகன்: டிஆர்டிஓ நிறுவனத்தின் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்த செயல்பாடுகளைத் தெருமுனைக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு இந்த நூல் திட்டமிட்டு எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள அறிவியல் தகவல்கள், படிக்கும்போது உத்வேகம் அளிக்கும் வகையில் தரப்பட்டுள்ளன. இந்தநூல் அழகாகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
ஏற்புரையாற்றி தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குநர் டாக்டர் வி.டில்லிபாபு பேசும்போது, ‘‘அறிவியலை எளியதமிழில் எழுதுவதென்பதே சவாலானது. அதிலும் நிறைய புதிய சொற்களைத் தேடிக் கண்டுபிடித்து எழுதவேண்டும். வாசிப்பதற்கு சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். எனக்கான பணிகளுக்கிடையே மிகுந்தஈடுபாட்டோடு இந்த நூலை எழுதினேன். நூலைப் படிப்பவர்களுக்கு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்தால் அதுவே இந்த நூலை எழுதியதற்கான பயனாக இருக்கும்” என்றார்.
முன்னதாக, ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் நூலைப் பற்றிய அறிமுகவுரையாற்றினார். ‘இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார்.நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago