பாஸ்டேக் அமல்படுத்தியும் பயனில்லை; சுங்கச்சாவடிகளில் தொடரும் நூதன மோசடி: லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

By சு.கோமதிவிநாயகம்

தமிழகத்தில் இருந்து தீப்பெட்டி, உப்பு, கடலைமிட்டாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கனரக லாரிகளில் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த லாரிகள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளில் நின்று பணம் செலுத்த அதிக நேரம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி உருவாகி சிக்கலை ஏற்படுத்தியது.

இதற்கு தீர்வு காணும் பொருட்டு, மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸ்டேக் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பாஸ்டேக் திட்டத்தை கடந்த 15-ம் தேதி முதல் மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு 100 சதவீத அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பாஸ்டேக் கணக்கில் அவ்வப்போது, வாக னங்கள் செல்லாத நிலையில் பணம் எடுக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

மாற்றுவழி அவசியம்

இதுகுறித்து தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்க மத்திய குழு உறுப்பினர் பூ.கணேஷ்குமார் கூறியதாவது: மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், டிஜிட்டல் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டோம். பாஸ்டேக் கணக்கில் ஒரு கனரக வாகனத்துக்கு குறைந்தளவு ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும். அதற்கு கீழ் தொகை வந்துவிட்டால் பாஸ்டேக் கணக்கு தானாக ரத்தாகி விடும். மீண்டும் அதனை செயல்படுத்த பாஸ்டேக் கணக்கில் பணம் செலுத்தினால், குறைந்தது அரைமணி நேரத்துக்கு பின்னரே செயல்பாட்டுக்கு வருகிறது.

ஒருவேளை உரிமையாளர் கவனக்குறைவாக இருந்து, பாஸ்டேக் கணக்கில் ஆயிரத்துக்கும் கீழ் இருப்பு குறைந்தால், அந்த வாகனம் எந்த சுங்கச்சாவடியில் நிற்கிறதோ அதனை கடக்க முடியாது. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தி செல்ல கண்டிப்பாக ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும்.

பணம் சுரண்டல்

ஒவ்வொரு சுங்கச்சாவடியையும் கனரக வாகனம் கடந்து சென்ற சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் தான் பணம் எடுத்ததாக அதன் உரிமையாளருக்கு வங்கியில் இருந்து குறுந்தகவல் செல்போனுக்கு வரும். சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக்கின் பார் குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, அந்த வாகனத்தின் பதிவு எண், வாகனத்தின் தன்மை, வங்கி கணக்கு, உரிமையாளரின் விவரங்கள் உள்ளிட்டவை தெரிந்துவிடும். ஸ்கேன் செய்த விவரங்கள் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சுங்கச்சாவடியில் இருந்து அக்வாரிங் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து, என்பிசிஐ-க்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் அந்த பார் குறியீடை ஸ்கேன் செய்தவுடன் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் பாஸ்டேக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும்.

அதே வாகனத்துக்கு, அந்த வாகனம் செல்லாத நேரத்திலும், சுங்கச்சாவடிகளில் உள்ள மென்பொருளில் தேதி மற்றும் நேரத்தை மாற்றி அனுப்பி வைத்து, பணத்தை எடுக்கின்றனர். இந்த குறுஞ்செய்தி பெற்றவுடன் வாகன உரிமையாளர் சென்று வங்கிக்கு முறையிட்டால், எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. புகார் எழுதிக்கொடுங்கள் என்கின்றனர். என்ஹெச்ஏ புகார் எண் 1033-க்கும் புகார் அளிக்குமாறு தெரிவிக்கின்றனர். வாகன உரிமையாளரை அலைக்கழிப்பதால், நேரமும், காலமும் வீணடிக்கப்படுகிறது. இதே போல், ரூ.50, ரூ.100 என ஒரு நாளைக்கு இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நூதன முறையில் சுரண்டல்கள் நடக்கின்றன. ரூ.50க்கு எத்தனை முறை போராட முடியும். இதையே அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் பணம் சுரண்டப்படுகிறது.

குறைகளை களைய வேண்டும்

பாஸ்டேக் அறிமுகப்படுத்தப் பட்டபோது, வாகனங்களுக்கு ஒரு மாதத்துக்கு 7.5 சதவீதம் திரும்ப அளிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால், அதன் பின்னர் 5 சதவீதமாகி, 2.5 சதவீதமாக கொண்டு வந்தனர். கடந்த ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை எந்த வாகனங்களுக்கும் பணம் திரும்ப வழங்க என்ஹெச்ஏ மறுக்கிறது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, சுங்கச்சாவடியை கடந்தவுடன் பணம் எடுத்ததற்கான குறுந்தகவல் உரிமையாளருக்கு வர வேண்டும். பாஸ்டேக்கில் உள்ள குறைகளை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்