திருவண்ணாமலையில் துளிர்க்காத இரட்டை இலை: சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் வெற்றியை ருசிக்காத அதிமுக 

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் வரலாற்றில் ஒரு முறை கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்பதால் 2021-ல் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழக தேர்தல் வரலாற்றில், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி, 15 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. திமுக 9 முறையும், காங்கிரஸ் 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதில், கடைசியாக நடைபெற்ற ஐந்து தேர்தல்களில் (1996 முதல் 2016 வரை) திமுக வெற்றி வாகை சூடியது. திமுக தொடங்கப்பட்ட நாள் முதல், திமுகவின் கோட்டை என அழைக்கும் அளவுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கின்றன. ‘திமுகவுக்குத் திருப்புமுனையைக் கொடுத்தது திருவண்ணாமலை’ என அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்றவர்களால் பேசப்பட்ட வரலாறு உண்டு. அவர்களது உச்சரிப்பு, ஸ்டாலின் மூலமாகவும் எதிரொலிக்கிறது.

திமுகவின் கோட்டை என அழைக்கப்பட்டு வரும் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுகவின் ‘இரட்டை இலை துளிர்க்க முடியாமல்‘ உள்ளது. அதிமுக தொடங்கப்பட்ட பிறகு நடைபெற்ற 10 தேர்தலில் (1977 முதல் 2016 வரை), ஒரு முறை கூட அக்கட்சியால் வெற்றியை ருசிக்கவில்லை. இதில் அதிமுக 5 முறை போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்துள்ளது. 4 முறை கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. இதில், 2 முறை (1984 மற்றும் 1991) கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டதால், 1989-ல் நடைபெற்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் 16-வது சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை துளிர்த்து, திமுகவின் கோட்டை என்ற சொல்லை தகர்த்தெறிய வேண்டுமென அக்கட்சியினர் விரும்புகின்றனர்.

இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, “அதிமுக தொடங்கி 48 ஆண்டுகள் கடந்தும், திருவண்ணாமலை தொகுதியில் இரட்டை இலை வெற்றி பெறவில்லை. வெற்றிக்கான சாத்தியக் கூறுகள் இருந்தபோதும், கூட்டணி தர்மம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், அதிமுக போட்டியிட்டபோது, கூட்டணி தர்மம் கடைப்பிடிக்கப்படவில்லை. அதன் விளைவு, கடந்த 3 தேர்தலில் (2006 முதல் 2016 வரை) அதிமுக தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. அந்த தேர்தலில் உட்கட்சிப் பூசலும், படுதோல்விக்கு வழி வகுத்தது.

தகுதியானவரைக் களம் இறக்குக

அண்ணாமலையார் பூமியான திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனின் ஆசையாகும். இந்தத் தேர்தலில், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியை வென்றெடுக்க, கட்சியை வழி நடத்தும் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரமாகச் செயல்பட வேண்டும். திமுகவை வீழ்த்தத் தகுதியானவரைத் தேர்வு செய்து களம் இறக்க வேண்டும்.

கூட்டணிக்கு விட்டுக்கொடுக்காதீர்

திருவண்ணாமலையைக் கேட்டு கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி கொடுத்தாலும், எக்காரணத்தை கொண்டும் தொகுதியை விட்டுக் கொடுக்கக்கூடாது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும். திருவண்ணாமலை தொகுதியின் வெற்றியை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குக் காணிக்கையாக்க வேண்டும். முதன்முறையாக இரட்டை இலை துளிர்ப்பதைப் பார்க்கும்போது தொண்டர்களின் ஆசையும் நிறைவேறும்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்