10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி பெற சம்மதித்தோம்: அன்புமணி ராமதாஸ் 

By செய்திப்பிரிவு

வன்னியர் சமூகத்துக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை அளித்ததால் பாமகவுக்கான தொகுதிகளை குறைவாக பெற ஒப்புக்கொண்டோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாமக இடையே 23 தொகுதிகளை பாமகவுக்கு அளிப்பது என உடன்பாடு ஏற்பட்டது. முறைப்படி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்து ஒப்பந்தத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

“வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கும் பாமகவுக்கும் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாமக அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதால் நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரும் வெற்றிப்பெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தேர்தலைப்பொறுத்தவரை எங்களின் நோக்கம், கோரிக்கை வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அரசு அதை நிறைவேற்றி இருக்கிறது. எங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதனாலும் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்ற சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து பெற்றுள்ளோம்.

இதற்கு முக்கிய காரணம் வன்னியர்களுக்கு 10.5% குறைத்து அளித்ததால் நாங்கள் சட்டப்பேரவை தொகுதி எண்ணிக்கையை குறைத்துள்ளோம். 40 ஆண்டுகால போராட்டம் எங்களுக்கு நல்ல முடிவு வந்துள்ளது அதனால் எங்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். ஆனாலும் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE