சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.
திருச்சியில் இன்று அவர் அளித்த பேட்டி:
''தமிழ்நாட்டு மக்கள் அரசியல்ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி. வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படு தோல்வி அடையும். 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் விவசாயிகள் போராடுகின்றனர். இந்த சூழலில்கூட அதிமுக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக வாய் திறக்கவில்லை. மத்திய அரசுக்கு எதிராக இதுவரை எதிர்ப்புக் குரல் எழுப்பாதது வெட்கக்கேடானது. முதல்வர் பழனிசாமி தலைமையிலான மாநில அரசு மத்திய அரசின் அடிமையாக உள்ளது.
கரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு பட்ஜெட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை 34.5 சதவீதம் குறைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு மிக மோசமாக உள்ளது. கடந்தாண்டில் ஒரு நபருக்கு சராசரியாக 45 நாட்கள் மட்டுமே வேலை அளிக்கப்பட்டுள்ளது. சராசரி ஊதியமாக ரூ.191 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
தின ஊதியம் ரூ.236 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதே குறைவு எனக் கூறி வரும் நிலையில், அதைக்கூட வழங்காத இந்த அரசுகளை என்னவென்று சொல்வது? அதேபோல கரோனா காரணமாக நாடு முழுவதும் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு மாற்று பணி வாய்ப்பு ஏற்படுத்த அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழ்நாட்டில் 2.88 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாடு தற்போதுள்ள நிலையில், அரசியல்ரீதியான மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து திமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். தேர்தல் பிரச்சாரத்துக்காக டெல்லியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய பாஜகவினர் வெறுப்பின் தூதுவர்களாகச் செயல்படுகின்றனர். பன்முகத்தன்மை வாய்ந்த இந்நாட்டினை ஒருமுகத்தன்மை கொண்டதாக மாற்ற முயற்சிக்கின்றனர். மக்களின் கலாச்சாரம், ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
கச்சா எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்துள்ள நிலையிலும், பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீது நிர்ணயிக்கும் வரிகளே இந்த விலை உயர்வுக்குக் காரணம். இது ஒரு பிக்பாக்கெட் அரசு. இதை எதிர்த்து நிச்சயம் போராடுவோம்''.
இவ்வாறு பிருந்தா காரத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago