தமிழக அரசின் கடன் குறித்து, முற்றிலும் தவறான வாதங்களை பொது வெளியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) கலைவாணர் அரங்கில், சட்டப்பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசியதாவது:
"தமிழக அரசுக்கும், அதிமுகவுக்கும் மாபெரும் மக்கள் செல்வாக்கு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அதனை திசை திருப்பும் வகையில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மொத்த நிலுவைக் கடன் 4.79 லட்சம் கோடி ரூபாய் எனவும், பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்படுகிறது எனவும், முற்றிலும் தவறான வாதங்களை பொது வெளியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஸ்டாலின் தனது வாதத்தை இப்பேரவைக்கு வந்து நேருக்கு நேராக என் முன் வைத்து, நான் தருகின்ற பதிலை அவர் கேட்க முடியும். ஆனால், திமுகவின் வழக்கப்படி, அவர் வெளிநடப்பு அவை புறக்கணிப்பு செய்துவிட்டார்.
» தமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது: ஹெச்.ராஜா
» இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
ஆனால், இந்த ஜனநாயகக் கடமையை திமுகவினர் என்றுமே மதிப்பதில்லை. ஏதோ சுற்றுலாவுக்கு வருவதுபோல வருகிறார்கள். இங்கே உட்கார்ந்து சிரிக்கிறார்கள், பேசுகிறார்கள். வந்ததும் வெளிநடப்பு என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறார்கள். ஸ்டாலின் முதல்வரான பிறகுதான் பேரவைக்கு வருவோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் முதல்வராகப் போவதில்லை. திமுகவினர் என்றைக்குமே சட்டப்பேரவைக்கு வரவே போவதில்லை. தேர்தலில் படுதோல்வியை திமுக சந்திக்கப் போகிறது.
திமுக ஆட்சிக் காலமான 2006-2007 ஆம் ஆண்டு முதல், 2010-2011 ஆம் ஆண்டு வரை, மொத்தம் கடனாகப் பெறப்பட்ட தொகை 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே எனவும், தற்போது அதிமுக ஆட்சியில் கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி ரூபாய் வாங்கப்பட்டதாகவும், இவை தேவையற்ற செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது எனவும், எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். இவை அனைத்தும் முற்றிலும் தவறான வாதங்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூறப்படுகின்ற விதண்டாவாதம்.
ஒரு மாநிலத்தின் கடனின் அளவைப் பார்க்கும் பொழுது, அதை அந்த மாநிலத்தினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடுவதே சரியான அளவுகோல். ஏனெனில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. 2010-2011 ஆம் ஆண்டில், மொத்தக் கடன் 1 லட்சத்து 1,349.47 கோடி ரூபாயாக இருந்தது என்றால், அந்த வருடத்தின் மாநில உற்பத்தி மதிப்பு 5 லட்சத்து 18 ஆயிரத்து 576 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
அதேசமயம், 2020-2021 ஆம் ஆண்டில், மொத்தக் கடன் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502.54 கோடி ரூபாயாக இருக்கிறது என்றால், இந்த ஆண்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 19 லட்சத்து 43 ஆயிரத்து 399 லட்சம் கோடி. அதனால் தான், மொத்தக் கடன் அளவை மதிப்பிடும் போது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் அளவின் விகிதாச்சாரம் எவ்வளவு இருக்கின்றது என்பதையே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தக் கணக்கெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.
ஜெயலலிதா அரசின், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 2010-2011 ஆம் ஆண்டில் 5.19 லட்சம் கோடி ரூபாயாகவும், 2011-2012 ஆம் ஆண்டில் தொடர்ந்து 7.5 லட்சம் கோடி ரூபாயாகவும், 2012-2013 ஆம் ஆண்டில் 8.54 லட்சம் கோடி ரூபாயாகவும், படிப்படியாக உயர்ந்து, 2018-2019 ஆம் ஆண்டில், 16.30 லட்சம் கோடி ரூபாயாகவும், 2019-2020 ஆம் ஆண்டில் 18.54 லட்சம் கோடி ரூபாயாகவும், தற்போது, 2020-2021 ஆம் ஆண்டில் 19.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, உயர்ந்து கொண்டே வருவதால், கடன் அளவு உயர்ந்தாலும், அதை திருப்பிச் செலுத்துவதற்கான திறனும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆகவே, ஆண்டுக் கணக்கில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உயர்ந்தது போலவே, மொத்த நிகரக் கடன் அளவும் உயர்ந்து வருவது ஒரு அசாதாரணமான நிகழ்வு அல்ல.
மேலும், பண வீக்கம், ஒவ்வொரு ஆண்டும் இருப்பதால், பணத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகின்றது. அதாவது, 2011 ஆம் ஆண்டில், 10 ரூபாய்க்கு வாங்கிய பொருட்களை தற்பொழுது அதே 10 ரூபாய்க்கு வாங்க இயலாது. பண வீக்கத்தையும் மதிப்பில் எடுத்துக் கொண்ட பிறகே, மொத்தக் கடன் அளவை ஒப்பிட வேண்டும்.
2011-2012 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் மொத்த அளவு 1.07 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், 2020-2021 ஆம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின் மொத்த அளவு சுமார் 3.28 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். ஆகவே, 2021-2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தக் கடன் 5.7 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படும்பொழுது, மாநிலத்தின் வருவாய் வரவினங்களான 2.19 லட்சம் கோடி ரூபாயில் மொத்தக் கடன் சுமார் 2.5 மடங்கு அளவே உள்ளது.
அரசு, கடன் தொகையைப் பெற்று மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவினங்களை மேற்கொண்டும், மூலதனச் செலவினங்களை மேற்கொண்டு, மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறது. இதுதான் உண்மை நிலை.
ஆண்டுதோறும், நிகரக் கடனளவு உயர்ந்து வந்தாலும், பொருளாதார உற்பத்தி மதிப்பும் உயர்ந்து வருவதால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், நிகரக் கடனளவின் சதவிகிதத்தை மதிப்பிட்டு, அதை அளவுகோலாகப் பயன்படுத்துவதே சரியான முறையாக இருக்கும். ஏனெனில், ஆண்டுதோறும் பொருளாதார உற்பத்தி மதிப்பு உயர்ந்து வருவதால், கடனை திரும்பச் செலுத்துவதற்கான, அரசின் திறனும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இது போக, 2020-2021 ஆம் ஆண்டில், கரோனா பெருந்தொற்று பாதிப்பினால் நமது பொருளாதாரம் மற்றும் வரி வருவாயில் பெருமளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் பொழுது, நிதிப் பற்றாக்குறை, 59 ஆயிரத்து 346 கோடி ரூபாயாக, அதாவது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.84 சதவீதமாக இருக்கும் என்றுதான் மதிப்பிட்டோம். ஆனால், கரோனா தாக்கத்தினால், வருவாய் வரவினங்களில் 38 ஆயிரத்து 674.52 கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
வருவாய் செலவினங்களை கட்டுப்படுத்த நாம் சில நடவடிக்கைகளை எடுத்தாலும், அதற்கு மேலும் செலவினங்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தால், மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவர். எனவே, மக்கள் நலச் செலவினங்களையும், மூலதனச் செலவினங்களையும் இந்த வருடம் மக்களின் நலன் கருதி செய்துள்ளோம். இந்த நிதியாண்டில், வருவாய் வரவினங்கள் பெருமளவில் குறைந்தபோதிலும், வருவாய் செலவினங்கள் அதிகரித்துள்ளன. இந்தப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.
அவ்வாறு செய்யவில்லை எனில் மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்திருப்பார்கள். எனவேதான், 2020-2021 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 57 ஆயிரத்து 802.94 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்ட கடனின் அளவு, திருத்த மதிப்பீடுகளில் 92 ஆயிரத்து 497.95 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதையெல்லாம் மனதில் வைத்துதான், கடனளவைப் பொறுத்தவரை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 2020-2021 ஆம் ஆண்டில், 28.90 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்றும், 2021-2022 ஆம் ஆண்டில், 28.70 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்றும், 2022-2023 ஆம் ஆண்டில், 29.30 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்றும், 2023-2024 ஆம் ஆண்டில், 29.10 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்றும், மத்திய 15-வது நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது.
15-வது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட கடன் அளவுக்குள்தான், தமிழ்நாடு அரசு கடன் பெற்றுள்ளது. ஆகவே, 15-வது நிதிக் குழு குறிப்பிட்டுள்ள சதவீதங்களின்படி, 2021-2022 ஆம் ஆண்டில், நிதிப் பற்றாக்குறை 4 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டு, 3.94 சதவீதமாக வரவு-செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்தக் கடன் அளவு 26.69 சதவீதமாக 2021-2022 ஆம் நிதியாண்டில் கட்டுப்படுத்தப்படும்.
இதுபோக, 2022-2023 ஆம் ஆண்டில், நிதிக் குழு நிர்ணயித்தவாறு, 3.5 சதவீதத்திற்குள் நிதிப் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும். மொத்தக் கடன் அளவும் நிதிக் குழு நிர்ணயித்துள்ள 29.30 சதவீதத்திற்குள் உறுதியாகக் கட்டுப்படுத்தப்படும். இந்த பணியையும் மீண்டும் வெற்றி பெற்று, திரும்ப வந்து செய்து முடிப்போம்.
திமுக அரசு, 2009-2010 ஆம் நிதியாண்டில், 18.53 விழுக்காடு நிலுவைக் கடனை விட்டுச் சென்றது. திமுக ஆட்சியில், 2010-2011 ஆம் ஆண்டில், நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்பதைவிட அதிகரித்து, 3.72 சதவீதமாக மிகவும் உயர்வான அளவில் இருந்தது. 2010-2011 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தபொழுது, நிதிப் பற்றாக்குறை 2009-2010 ஆம் ஆண்டுக்கான திருத்த மதிப்பீடுகளின்படி, 12 ஆயிரத்து 860.45 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3.23 சதவீதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டது.
அதன் பிறகு, ஜெயலலிதா அரசு பதவி ஏற்றவுடன், பற்றாக்குறை படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 2011-2012, 2012-2013 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் வருவாய் உபரி நிலையை எட்டி, மிகப் பெரிய சாதனை புரிந்தது. அதுமட்டுமல்லாமல், மொத்த நிலுவைக் கடன் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 15.36 விழுக்காடாக குறைக்கப்பட்டது.
திமுக ஆட்சிக் காலமான 2006-2007 ஆம் ஆண்டு முதல், 2010-2011 ஆம் ஆண்டு வரை, மொத்தம் கடனாகப் பெறப்பட்ட தொகை 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே எனவும், தற்போது அதிமுக ஆட்சியில் கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி ரூபாய் வாங்கப்பட்டதாகவும், இவை தேவையற்ற செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. இது முற்றிலும் தவறான வாதம் ஆகும். ஏனென்றால், வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல்வேறு நலத் திட்டங்களுக்காகவும், குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பல திட்டங்களும், மூலதன உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் பெருமளவில் வளர்ச்சியை, பொருளாதார நிலையை ஊக்குவிக்கின்ற திட்டங்களாகும்.
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் மூலம் கடனுதவி பெறப்பட்டு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்மூலம், மாநிலத்தின் வரி வசூல் பெருகி, இறுதியில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துகின்ற திறன் நம் மாநிலத்திற்குக் கூடும் என்கிற அடிப்படையில்தான் பன்னாட்டு நிதி நிறுவனங்கள், அது ஆசிய வளர்ச்சி வங்கியாக இருந்தாலும் சரி, உலக வங்கியாக இருந்தாலும் சரி, போட்டி போட்டுக் கொண்டு கடனுதவிகளை நம் மாநிலத்திற்கு வழங்கி வருகின்றன.
ஓர் அரசுக்கு வாங்குகின்ற கடனை திருப்பிச் செலுத்துகின்ற திறன் இருக்கிறதா என்பதனை ஆய்வு செய்து, ஆராய்ந்து பார்த்துதான் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். ஆக, நம்முடைய மாநில அரசுக்கு, தமிழக அரசுக்கு வாங்குகின்ற கடனை திருப்பிச் செலுத்துகின்ற திறன் இருக்கிறது என்று நம்பிக்கை வைத்துதான் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன.
கடனாகப் பெறப்படும் அந்த நிதியை எந்தவொரு ஆடம்பரச் செலவுகளுக்கும் பயன்படுத்துவதில்லை; மாநிலத்தினுடைய வளர்ச்சிப் பணிகளுக்காக மட்டுமே நாம் செலவிட்டு வந்திருக்கிறோம்.
ஆக, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், கடன் நிலுவைக்கான விகிதாச்சாரம், 2020-2021 ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் 31.53 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் 29.74 சதவீதமாகவும், கேரளத்தைப் பொறுத்தவரையில் 29.41 சதவீதமாகவும், ஆந்திரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் 29.34 சதவீதமாகவும் உள்ளது.
2019-2020 ஆம் ஆண்டில், மத்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடனின் சதவீதம் 72.40 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், மத்திய அரசினுடைய நிதிப் பற்றாக்குறை, 2020-2021 ஆம் ஆண்டு 9.5 சதவீதமாக இருக்கும் எனவும், 2021-2022 ஆம் ஆண்டில், 6.8 சதவீதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, தேசிய அளவிலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் கடன் வாங்குவதன் மூலமாகவே, மக்கள் நலச் செலவினங்கள் அதே அளவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு சர்வதேச அளவில், பல நாடுகள் கடன் வாங்கித்தான் செலவினங்களை மேற்கொண்டுள்ளன. இந்த ஆண்டில், பல நாடுகள், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதத்திற்கு மேல் கடன் வாங்கியுள்ளன. மாநிலத்தில் 1.5 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை மட்டுமே கூடுதல் கடன் பெற்றுள்ளோம். ஆகவே, மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதியை ஏற்படுத்தும்வண்ணம், சிலர் அரசியல் ஆதாயத்திற்காக முற்றிலும் தவறான பிரச்சாரம் செய்ய கூடாது".
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago