இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் 

By சுப.ஜனநாயகச் செல்வம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் (88) உடல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கீழவெள்ளமலைப்பட்டியில் உள்ள அவரது டேவிட் பண்ணையில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுநீரகக்கோளாறு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (88) நேற்று காலமானார். அவரது உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழவெள்ளமலைப்பட்டிக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், அக்கட்சி எம்பிக்கள் சுப்பராயன், எம்.செல்வராஜ், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், பி.சேதுராமன், மாவட்டச் செயலாளர்கள் சரவணன் (மாநகர்), காளிதாசன் (புறநகர்), முன்னாள் எம்எல்ஏக்கள் குணசேகரன், பழனிச்சாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், க.கனகராஜ், புறநகர் மாவட்ட செயலாளர் சி.ராமகிருஷ்ணன், தமுஎகச சார்பில் கருணாநிதி, கோடாங்கி சிவமணி ஆகியோர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ பா.சரவணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து டேவிட் பண்ணையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கத்தின்போது அவரது மகன் டேவிட் ஜவஹர், மகள்கள் அருணா, பிரேமா ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE