கமலுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை; வெற்றிக்குப் பிறகே முதல்வர் குறித்து முடிவு: சரத்குமார் பேட்டி

By செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் தங்கள் கூட்டணியில் இணையுமாறு, கமலுக்கு சரத்குமார் அழைப்பு விடுத்தார்.

அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியும் விலகி, மாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கி இருப்பதாக, நேற்று (பிப். 26) இருவரும் கூட்டாக அறிவித்தனர். இந்தக் கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகளை வரவேற்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சரத்குமார், ஐஜேகே துணைப் பொதுச்செயலாளர் ரவிபாபு ஆகியோர், இன்று (பிப். 27) மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "இந்தத் தேர்தலில் நல்லவர்கள், ஒருமித்த கருத்துடையவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், கமல்ஹாசனைச் சந்தித்து அவரின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். அவரது கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றேன். இதை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்துப் பொறுப்பாளர்கள் ஆலோசிப்பார்கள். அதன்பிறகு, ஒரு நல்ல முடிவு வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

அதன்பிறகு, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்?

10 ஆண்டுகாலமாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தேன். ஒருவாரத்திற்கு முன்புகூட, அதிமுக கூட்டணியில்தான் சமக இருக்கிறது, கூட்டணி தொடர்கிறது என்று முதல்வர் சொன்னார். ஆனால், எல்லாவற்றுக்கும் கால எல்லை இருக்கிறது. எங்களை நிலைநாட்டிக் கொள்வதற்கும், எங்களின் ஓட்டு விகிதாச்சாரம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அவகாசமே இல்லாமல் போய்விட்டது. ஓட்டு விகிதாச்சாரம் இருக்கிறது என்பதால்தான் ஜெயலலிதா எங்களுடன் பயணித்தார். மதிப்பு இல்லாவிட்டால் பயணித்திருக்க முடியாது. ஆனால், இப்போது அந்த மதிப்பு என்ன என்பது தெரியாமல் போய்விட்டது.

ஜனவரி மாதம் மண்டலப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, இந்த முறை அழைப்பு வராவிட்டாலும், தேர்தலைச் சந்திக்க முடியுமா எனக் கேட்டேன். அவர்களும் அந்த மாதிரி ஒரு சூழல் வந்தால் முடிவெடுப்போம் எனக் கூறியிருந்தனர். எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எவ்வளவு காலம்தான் காத்துக் கொண்டிருக்க முடியும்? எங்களை அழைத்துப் பேசியிருக்கலாம் என்றுதான் தோன்றியது. அதனால்தான், அடுத்த முடிவுகளை எடுத்தோம்.

என் அரசியல் பயணம் தொடர வேண்டும். மக்களுக்காக நான் பயணிக்கிறேன். நேற்று ஒரு முடிவெடுத்துக் கூட்டணி அறிவித்தோம். அது தொடர்பாக, கமல்ஹாசனிடம் பேசினோம். சிறப்பான கூட்டணியை உருவாக்குவோம் என்று அவரிடம் சொன்னேன்.

இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்?

முதலில் பேச்சுவார்த்தை முடிய வேண்டும். முதலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளைத் தொடங்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகே முடிவெடுப்போம்.

அமமுக இந்த அணியில் இணையுமா?

தினமும் ஒரு செய்தி வரும். ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்.

அனைவரும் என்று குறிப்பிடுகிறீர்களா? இல்லை நடிகர்களைக் குறிப்பிடுகிறீர்களா?

நடிகர்கள் எனப் பிரித்துப் பேச வேண்டாம். எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

இதுவரை சமக மக்கள் பிரச்சினைகளுக்குப் போராட்டங்கள் நடத்தவில்லையே?

போராடவில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?

இந்தக் கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணையுமா?

யார் யாருக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ, இம்முறை மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கிறார்களோ, அவர்கள் இணைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

வெற்றிநடை போடுகிறதா தமிழகம்?

வெற்றிநடை போடுவதற்கான ஏற்பாட்டை நாங்கள் செய்யலாம் என இருக்கிறோம். காலில் விழுந்து மக்களிடம் கேட்கிறேன். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட வேண்டாம். வருங்காலச் சந்ததி பாதிக்கப்படும். பணமே வாங்கமாட்டோம் என முடிவெடுத்தால் இந்த நாட்டில் மாற்றம் ஏற்படும். சாமானியரும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என நினைப்பவர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்றால், பண அரசியலை ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்