மண்டலப் புற்றுநோய் மையமாகச் செயல்பட்டு வரும் கோவை அரசு மருத்துவமனையில் சராசரியாக ஆண்டுக்கு 2 ஆயிரம் புற்றுநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு உடலின் மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் துல்லியமாகக் கதிர்வீச்சு செலுத்தி சிகிச்சை அளிக்கப் பயன்படும் ‘லீனியர் ஆக்ஸிலரேட்டர்’ என்ற நவீன இயந்திரம் ரூ.25 கோடி செலவில் நிறுவப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
‘லீனியர் ஆக்சிலரேட்டர்’ இயந்திரத்தின் மூலம் தொடக்க நிலையில் புற்றுநோயைக் கண்டறிந்தால் குணப்படுத்தலாம். அந்த வகையில் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய் போன்றவற்றுக்கு இந்த இயந்திரம் மூலம் தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளிக்கலாம். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் ரூ.1.50 லட்சம் வரை செலவாகும் என்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால், கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் வேறு துறை சார்ந்த மருத்துவர்களை நியமித்துள்ளதால் நவீன இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
துறையில் 8 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 5 பேரில் 2 பேர் மட்டும் கதிரியக்க சிகிச்சைத் துறை சார்ந்த மருத்துவர்கள். மீதமுள்ள 3 பேர் வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்தவர்கள். இதனால், புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு இரு மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. சிகிச்சைக்காக நோயாளிகள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதேபோல, பொது மருத்துவத் துறை, எலும்பு மருத்துவத் துறையிலும் சம்பந்தமில்லாத மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கோவை அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல் பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதேநிலை உள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காலிப் பணியிடமாகக் காட்டவில்லை
கலந்தாய்வின்போது இந்தப் பிரச்சினை சரிசெய்யப்படும் என மருத்துவர்கள் நம்பி வந்த நிலையில், வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை காலி என, கலந்தாய்வின்போது தெரிவிக்கவில்லை என்று கலந்தாய்வில் கலந்துகொண்ட மருத்துவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், தகுதியானவர்கள் கதிரியக்க சிகிச்சைத் துறையில் பணிபுரியாத நிலை நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாகக் கதிரியக்க சிகிச்சைத் துறை மருத்துவர் ஒருவர், மருத்துவக் கல்வி இயக்குநருக்கு (டிஎம்இ) நாராயணபாபுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கதிரியக்க சிகிச்சைத் துறையில் உதவிப் பேராசிரியர், 'சீனியர் ரெசிடன்ட்' பணியிடங்களில் வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், என்னைப் போன்று கதிரியக்க சிகிச்சைத் துறையில் தகுதி பெற்றவர்கள் ‘லீனியர் ஆக்ஸிலரேட்டர்’ சிகிச்சை மையங்களில் பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, தமிழகம் முழுவதும் சிகிச்சைபெறும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதிதாகத் திறக்கப்பட்ட ‘லீனியர் ஆக்ஸிலரேட்டர்’ சிகிச்சை மையங்களில் 'ரேடியோ தெரபிஸ்ட்' பற்றாக்குறை நிலவுகிறது. வரும் 28-ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளதால், இதை அவசர கோரிக்கையாகக் கருதி, தகுதியற்ற மருத்துவர்கள் உள்ள பணியிடங்களை காலிப் பணியிடங்களாக கலந்தாய்வின்போது தெரிவிக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இதே கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.
தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவார்கள்
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவிடம் கேட்டதற்கு, “சில மருத்துவர்கள் வசதிக்காக வேறு துறைகளில் பணியாற்ற அனுமதிக்குமாறு கேட்கின்றனர். அதை நாங்கள் அனுமதிப்பதில்லை. அந்தந்தத் துறை சார்ந்தவர்கள் கலந்தாய்வின்போது தங்கள் துறைக்கு மாற்றப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago