மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளைத் துன்பத்தில் தள்ளிய மோடிக்கு திமுகவைக் குற்றம் சாட்ட உரிமை இருக்கிறதா? குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவந்து லட்சக்கணக்கான மக்களை நிம்மதி இல்லாமல் ஆக்கியது யார்? அத்தகைய மோடிக்கு திமுகவைப் பற்றிப் பேச உரிமை உண்டா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்கள் பயணத்தை ஜனவரி 25ஆம் தேதி திருவண்ணாமலையில் நான் தொடங்கினேன். இதுவரை நான்கு கட்டங்களாக நடந்துள்ள இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இதுவரை 152 தொகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை மனுக்களாக வாங்கி வைத்துள்ளேன். ஐந்தாம் கட்டப் பயணத்தை இன்று தொடங்குகிறேன்.
தமிழ்நாட்டுப் பக்கமாக அடிக்கடி வர ஆரம்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தேர்தல் வரப்போவதால் இனி அடிக்கடி வருவார் என்று நான் சில வாரங்களுக்கு முன்னால் சொன்னேன். அதே மாதிரிதான் அவரும் வருகிறார்.
» தா.பாண்டியன் மறைவு; உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு: மார்க்சிஸ்ட் இரங்கல்
» சட்டப்பேரவை பிற்பகல் 3 மணிக்குக் கூடுகிறது: இன்றே முடிக்கப்பட வாய்ப்பு
கடந்த முறை வந்தவர் ஒரு பக்கம் பழனிசாமி கையையும் இன்னொரு பக்கம் பன்னீர்செல்வம் கையையும் தூக்கிக் காண்பித்தார். இரண்டுமே ஊழல் கைகள். அதைப் பிடிப்பதன் மூலமாக இந்த ஊழலுக்கு தானும் உடந்தை என்பதைப் போலக் காட்டினார்.
தனது தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறு, குறு தொழில் துறையை மொத்தமாக மோடி சிதைத்துவிட்டார் என்று கோவை, திருப்பூர் வட்டாரத்து வர்த்தகர்களுக்கே தெரியும். எனவே, மோடி சொல்வது கடைந்தெடுத்த பச்சைப் பொய் என்பதைச் சொல்வார்கள்.
கொட்டும் பனியில் 90 நாட்களைக் கடந்தும் போராடும் விவசாயிகள் மீது கொஞ்சமும் இரக்கம் பிறக்காத பிரதமர் மோடி, இந்திய நாட்டின் வேளாண்மையைக் காக்க வந்த நவபுருஷரைப் போலப் பேசிவிட்டுப் போயிருக்கிறார்.
தான் ஒரு பிரதமர் என்பதையும் மறந்து தரமற்ற முறையில் திமுக குறித்து மோடி செய்துள்ள விமர்சனங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது எனவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகப் பெண்கள்தான் என்றும் சொல்லி இருக்கிறார் மோடி. என்ன ஆதாரத்தை வைத்துக் கொண்டு மோடி இப்படிப் பேசினார்? அவருக்கு தரப்பட்ட புள்ளிவிவரம் என்ன?
அராஜகத்தைப் பற்றி யார் பேசுவது? 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பச்சைப் படுகொலைகளை இந்திய நாடு இன்னும் மறக்கவில்லை. குஜராத்தை விட்டு மோடி டெல்லிக்கு வந்துவிட்டார் என்பதற்காக அந்தப் பாவங்கள் துடைக்கப்பட்டுவிடாது.
மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளைத் துன்பத்தில் தள்ளிய மோடிக்கு திமுகவை குற்றம் சாட்ட உரிமை இருக்கிறதா? இதுவரைக்கும் பல விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். அவர்களது மரணத்துக்கு யார் காரணம்?
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவந்து லட்சக்கணக்கான மக்களை நிம்மதி இல்லாமல் ஆக்கியது யார்? அத்தகைய மோடிக்கு திமுகவைப் பற்றிப் பேச உரிமை உண்டா? கொள்ளை அடிப்பதைத் தொழிலாகக் கொண்ட டெண்டர் பழனிசாமியையும் பாதபூஜை பன்னீர்செல்வத்தையும் மிரட்டிப் பணிய வைத்து அப்பாவி அதிமுக தொண்டர்களின் வாக்கை பாஜகவுக்குத் திருடிப் போக வந்திருக்கும் மோடிக்கு திமுகவைப் பற்றிப் பேச உரிமை இல்லை.
இந்திய நாட்டின் அதிகாரம் பொருந்திய பதவியில் இருக்கும் மோடி அவர்களே, சமீபகாலமாக தமிழக - புதுவை பாஜகவில் சேரும் சிலரது பின்னணி என்ன என்பதை மத்திய உளவுத்துறை மூலமாக விவசாரித்துப் பாருங்கள்.
1) புளியந்தோப்பு அஞ்சலை - கொலை உள்ளிட்ட பத்து குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன. 2) கல்வெட்டு ரவி 6 முறை குண்டர் சட்டத்தில் கைது, 8 கொலை வழக்குகள் உள்ளிட்ட 30 குற்ற வழக்குகள். 3) புதுவை எழிலரசி புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் சிறைக்குச் சென்றவர்.
4) சீர்காழி சத்யா – செங்கல்பட்டு பகுதியில் மணல் கொள்ளையைத் தடுப்போரைத் தலையை வெட்டிக் கொலை செய்யும் கூலிப்படைத் தலைவர். 5) சேலம் முரளி, 6) நெற்குன்றம் சூர்யா, 7) புதுவை சோழன், 8) புதுவை விக்கி, 9) பாம் வேலு, 10) மயிலாப்பூர் டொக்கன் ராஜா, 11) குரங்கு ஆனந்த், 12) குடவாசல் அருண், 13) சீர்காழி ஆனந்த், 14) சென்னை பாலாஜி, 15) குடந்தை அரசன், 16) தஞ்சை பாம் பாலாஜி, 17) ஸ்பீடு பாலாஜி, 18) அரியமங்கலம் ஜாகிர், 19) தஞ்சை பாக்கெட் ராஜா, 20) குடவாசல் சீனு, 21) பல்லு கார்த்திக், 22) பல்லு சீனு, 23) பூண்டு மதன், 24) மெடிக்கல் காலேஜ் வெற்றி, 25) சுரேஷ், 26) மண்ணிவாக்கம் ஜோஷ்வா.
இவர்கள் எல்லாம் யார் என்று விசாரியுங்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விசாரிக்கச் சொல்லுங்கள். வாய்க்கு வந்த வார்த்தைகளால் திமுகவை விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
“ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா" என்று பேசி இருக்கிறார் மோடி. நல்லவேளை இதைக் கேட்க ஜெயலலிதா உயிரோடு இல்லை. மாநிலங்களில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தது தமிழகத்தைச் சேர்ந்த இந்த லேடியா? குஜராத்தை சேர்ந்த மோடியா? என்று ஜெயலலிதா உரக்கக் கேட்டது இன்னும் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கிறது மோடி அவர்களே.
"ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. ஊழல் நிறைந்த இந்த ஜெயலலிதா ஆட்சியை மாற்ற வேண்டும்" என்று 2016 மே 7ஆம் நாள் ஓசூரிலும் சென்னையிலும் நீங்கள்தான் பேசினீர்கள் மோடி அவர்களே. மறந்துவிட்டதா?
"குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் முதல் பெரியவர்கள் குடிக்கும் மதுபானம் வரை ஊழல் செய்தவர் ஜெயலலிதா. ஊழல் மேல் ஊழல் செய்யும் ஆட்சிக்குச் சொந்தக்காரர் ஜெயலலிதா" என்று 2016ஆம் ஆண்டு மே 5-ம் தேதி மதுரையில் பேசியவர் அமித் ஷா.
அந்தத் தேர்தலில் தமிழக பாஜக ஒரு விளம்பரம் வெளியிட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை முதல்வர் ஜெயலலிதா சந்திக்க மறுத்துவிட்டார் என்பதை வைத்து அந்த கார்ட்டூன் வரையப்பட்டு இருந்தது.
"அம்மா! அமைச்சர் பியூஸ் கோயல் வந்திருக்காங்கம்மா. ஏதோ திட்டங்கள் பற்றி பேச வேண்டுமாம்" என்று வீட்டுப் பணியாளர் சொல்வார். உடனே சசிகலா சொல்வார், ''இவங்களுக்கு வேற வேலையே கிடையாது. அம்மா பிஸியா இருக்காங்கன்னு சொல்லு'' என்பார். அப்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் சீட்டு விளையாடிக் கொண்டு இருப்பது போல படம் வரையப்பட்டு இருந்தது. அந்த ஜெயலலிதா இறந்து போய்விட்டார் என்பதால் அவரது படத்துக்கு பூ அள்ளிப் போட்டு, அவரது கட்சித் தொண்டர்களை ஏமாற்ற வந்திருக்கிறார் மோடி.
இதுபோன்ற பல நாடகங்களை பார்த்துப் பார்த்து பழகியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். தனது கொள்ளையில் இருந்து தப்ப மோடியை ஆதரிக்கிறார் பழனிசாமி. அதிமுகவின் அப்பாவித் தொண்டர்களை ஏப்பம் விடுவதற்கு வருகிறார் மோடி. இந்தச் சந்தர்ப்பவாதக் கூட்டணியை மக்கள் அறிவார்கள். ஏமாற மாட்டார்கள்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago