தா.பாண்டியன் மறைவு; உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு: மார்க்சிஸ்ட் இரங்கல்

By செய்திப்பிரிவு

தா.பாண்டியன் மறைவு, உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (பிப். 26) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.

தா.பாண்டியன் 8-ம் வகுப்பு படிக்கும்போதே பேச்சுப் போட்டியில் இணைந்து சிறந்த பேச்சாளராக உருவானவர். தனது 15 வயதிலேயே பொதுவுடமை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கும்போது மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர். பின்னர், அதே கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, ஜீவானந்தம் தொடங்கிய கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். 'ஜனசக்தி' நாளிதழில் ஆசிரியராகப் பல ஆண்டு காலம் பணியாற்றியவர். 'சவுக்கடி' என்ற புனைபெயரில் இவர் எழுதிய கட்டுரைகளுக்கு கட்சி எல்லைகளையும் தாண்டி வாசகர்கள் உண்டு. சென்னை துறைமுகத்தில் தினக் கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி அதில் வெற்றியும் கண்டவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் பரந்த வாசிப்பு கொண்டவர். இவரது பேச்சுகள், எழுத்துகள், சொற்பொழிவுகள் அனைத்தும் பாமரருக்கும் புரியும் வகையில் பேசும் வலிமை பெற்றவர்.

வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, நாடாளுமன்றவாதி, சிறந்த அரசியல்வாதி என பன்முகத் திறன் பெற்று சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். இறுதியாக, மதுரையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுச்சி மாநாட்டில், 'என் உடல் உறுப்புகள் அனைத்தும் செயல்பட மறுக்கின்றன, ஆனால், எனது மூளை மட்டும் நன்றாக செயல்படுகிறது, எனது இறுதி மூச்சுவரை உழைக்கும் மக்களுக்காக போராடுவேன்' என உணர்ச்சிமிகு உரையாற்றினார்.

10 ஆண்டுகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர்.

பொது வாழ்வில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், இந்திய அரசியலில் மதவாத சக்திகளுக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும், உழைக்கும் மக்களின் நலன்களுக்காகவும் போராடிய சிறந்த போராளியாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் மட்டுமல்ல, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தா.பாண்டியன் மறைவால் துயருற்றிருக்கும் அவரது மகன் ஜவஹர், மகள்களான அருணா, பிரேமா மற்றும் குடும்பத்தாருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE