தா.பா. மறைவு; ஒரு போர்ப் படைத் தளபதியை நாடு இழந்துவிட்டது: கி.வீரமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல்

By செய்திப்பிரிவு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு கி.வீரமணி, கமல்ஹாசன், ஜவாஹிருல்லா, சரத்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்:

மாணவர் பருவந்தொட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு 88ஆம் வயதுவரை பொதுவுடமைத் தத்துவத்தினை உயிர் மூச்சாகக் கொண்டு பணியாற்றிய சுயமரியாதை வீரர் தா.பாண்டியன் மறைவுற்றார் என்ற தகவல் கம்யூனிஸ்ட் கட்சியையும் கடந்து, தமிழகப் பொது வாழ்வுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்பதே சரியானது.

கல்லூரி விரிவுரையாளராகத் தொடங்கி, பின் வழக்கறிஞராகப் பணியாற்றி, அதற்குப் பின் அவற்றையெல்லாம் தூக்கியெறிந்து முழுநேரப் பொதுப் பணியில் ஒப்படைத்துக் கொண்ட ஒப்பற்ற தொண்டறச் செம்மல் தா.பா.

பெரியார் நூற்றாண்டு விழாவில் பல முக்கிய ஊர்களில் எல்லாம் பங்கேற்று அவர் ஆற்றிய உரைகள் 'சமுதாய விஞ்ஞானி பெரியார்' எனும் நூலாக நாம் வெளியிட்டோம், பல பதிப்புகளாக வெளிவந்துள்ளன.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, அவரால் கொண்டுவரப்பட்ட வருமான வரம்பு ஆணையை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட அனைத்து மாநாடுகள், நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்ற சமூக நீதியாளர் அவர்!

கடந்த ஆண்டு பெரியார் நினைவு நாளில் அவருக்குப் 'பெரியார் விருது' அளித்து பெருமகிழ்ச்சி கொண்டது திராவிடர் கழகம். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், சென்னை பெரியார் திடலில் கடைசிவரையில் அமர்ந்து, 'இந்த விருதுக்கு நிகர் வேறு ஒன்றும் இல்லை!' என்று மனம் திறந்து நெகிழ்ச்சியுரையாற்றினார்.

கடந்த 18.2.2021 அன்று மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் மாநாட்டில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், கோடையிடியென அவருக்கே உரித்தான வகையில் ஆற்றிய உரை அவரின் மரண சாசனமாகி விட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக, மத்தியக் குழு உறுப்பினராக, 'ஜனசக்தி'யின் ஆசிரியராக, நாடாளுமன்ற உறுப்பினராக, தலைசிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராகப் பரிணமித்தவர் தா.பா.

உடலால் தா.பா. மறைந்தாலும், அவரின் உரைவீச்சு என்னும் சங்கநாதம், முழக்கம் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது பிரிவு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எவ்வளவு துயரமோ, அதே அளவு துயரத்தை திராவிடர் கழகம் வெளிப்படுத்துகிறது.

அவரின் அளப்பரிய பொதுத் தொண்டுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக நீதி, மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல்கள் கிளர்ந்துள்ள ஒரு காலகட்டத்தில், ஒரு போர்ப் படைத் தளபதியை நாடு இழந்துவிட்டது. அவர் எந்த லட்சியத்துக்காக வாழ்ந்தாரோ, அந்த லட்சியச் சுடரை ஏந்துவோம், பணி முடிப்போம்!

அவரின் மிகப்பெரிய இழப்பால் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தோழர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

பொதுவுடமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிச வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு.

எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவரும் மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியுமான தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவுடமை சகாப்தத்தின் தமிழகத்தின் வரலாற்றை எழுதும்போது தா.பாண்டியனின் உழைப்பும் போராட்டக் குணங்களும் அதிகமான பக்கங்களை நிரப்பும் என்றால் அது மிகையல்ல. அவரது அறிவாற்றலும் அதனை வெளிப்படுத்தும் அவரது மொழியாற்றலும் கொள்கை எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் வல்லமையுடையதாக அமைந்திருந்தன.

இக்கட்டான அரசியல் சூழ்நிலை காலகட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செயலாளராக தொழிலாளர் வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும் அவர் ஆற்றிய பணிகள் மெச்சத்தக்கதாகும்.

ஒரு அரசியல்வாதி என்ற நிலையைத் தாண்டி ஒரு உற்ற தோழனாக பல்வேறு அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டு எனக்கு ஆலோசனை வழங்கும் ஒரு சகோதரனாகத் திகழ்ந்த தா.பாண்டியனின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாகும்.

பிப்ரவரி 21 அன்று மதுரையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் அவரோடு நானும் கலந்துகொண்டேன். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் வந்து கம்பீரமான குரலில் பொதுவுடமைக் கொள்கை முழக்கத்தை முழங்கிவிட்டு தன் இறுதி மூச்சுக் காற்றை தா.பாண்டியன் நிறுத்தியுள்ளது கம்யூனிஸ்ட் பேரியக்கத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் மிகப்பெரும் இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரத்குமார், நிறுவனத் தலைவர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், 1989 முதல் 1996 வரை இரண்டு முறை மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்தவருமான தா.பாண்டியனின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

மாணவப் பருவத்தில் கம்யூனிச சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர், கொள்கைப் பிடிப்போடு தனது இறுதிநாள் வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரது இழப்பு கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.

தா.பாண்டியனின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், அரசியல் இயக்கத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்