தா.பா. மறைவு; பொதுவுடமை இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல்

By செய்திப்பிரிவு

தா.பாண்டியன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ், நிறுவனர், பாமக:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

நாடு போற்றிய பொதுவுடமைத் தலைவர்களில் ஒருவரான ஜீவாவின் அன்பைப் பெற்றவரான தா.பாண்டியன், இளம் வயதிலிருந்தே பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்திருக்கிறார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த தா.பாண்டியன், அந்தப் பணியைத் துறந்துவிட்டு பொதுவுடமைக் கட்சியில் இணைந்து பணியாற்றினார். ஜீவா உருவாக்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராகவும், பின்னாளில் ஜனசக்தி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுடனும், நல்லக்கண்ணு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுடனும் இணைந்து அரசியல் பணியாற்றியவர். கடந்த பல ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமல் இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவரது மறைவு தமிழகத்தில் பொதுவுடமை இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

தா.பாண்டியனை இழந்து வாடும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தோழர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாமக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழக காங்கிரஸ்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான தா.பாண்டியன் தமது 88ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இளமைப் பருவம் முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து இலக்கிய ஆர்வத்தின் மூலம் ஜீவானந்தத்தின் ஆதரவின் காரணமாக தீவிரமாக இலக்கியப் பணியாற்றியவர். அற்புதமான சொற்பொழிவாளர். ஆங்கில மேடைப் பேச்சுகளை மிகச் சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்ப்பவர்.

மிகச் சிறந்த எழுத்தாளரான இவர், ஜனசக்தி வார இதழின் ஆசிரியராக இருந்தவர். மேடைப் பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தமக்கென தனி முத்திரை பதித்தவர். இந்திய தேசிய காங்கிரஸோடு, குறிப்பாக மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்.

தா.பாண்டியன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென்று ஓர் தனி இடம் வைத்திருந்த கம்யூனிசம் கொள்கை கொண்டவர். இலக்கியத்தில் தனித்திறமை கொண்டவர். எளிமையாக வாழ்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டவர். தன் இறுதி மூச்சு வரை பொதுமக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

தான் சார்ந்த கட்சியில் உறுப்பினர் பதவி முதல் 3 முறை மாநில செயலாளர், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினர் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு, கட்சிக்கு பெயரும், புகழும் தேடித்தந்ததில் மிகவும் முக்கியமானவர். நாடாளுமன்றத்தில் தமிழக மக்கள் நலனுக்காக தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்தவர். ஏழை, எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டவர். மாறுபட்ட கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சியினராலும் அன்பு பாராட்டப்பட்டவர்.

ஜி.கே.மூப்பனாரோடு அன்போடு நெருங்கிப் பழகியவர். என்னோடும் அன்போடு பழகியவர்.

தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து கடமை உணர்வோடு பணியாற்றிய பெருமைக்குரியவர்.

அரசியல் சார்ந்த கருத்து, பொது நலன் சார்ந்த கருத்து ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மை கொண்டவர்.

இப்படி பல்வேறு சிறப்புகளுக்கு உரியவரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு மிகவும் வேதனைக்குரியது, வருத்தம் அளிக்கிறது.

அவரது இழப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், குடும்பத்தாருக்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்