சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 88.
நுரையீரல் தொற்று மற்றும் வயோதிகம் காரணமாக தா.பாண்டியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. வென்டிலேட்டர் மூலம் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மூத்த தலைவர்களாக தமிழகத்தில் சிலரே எஞ்சியுள்ளனர். அதில் முக்கியமானவர்கள் சங்கரய்யா, நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் ஆவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 3 முறையும், தேசிய கவுன்சில் உறுப்பினராக இறுதி வரையிலும் பணியாற்றியவர் தா.பாண்டியன்.
நீண்ட கால அரசியல் அனுபவம், வலிமையான வாதத்திறமை, ஆழ்ந்த மார்க்சிய அறிவு மிக்கவர். தனது வாதத்தில் எதிராளியையும் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டவர் தா.பாண்டியன். கல்லூரிப் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர். சிறந்த மேடைப்பேச்சாளர். மாணவர் பெருமன்றம் மூலம் அரசியலில் நுழைந்தவர், ஜீவா மூலம் ஆளாக்கப்பட்ட தலைவர் ஆவார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1932-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி பிறந்தவர். பெற்றோர் ஆசிரியர்களாக இருந்ததால் இயற்கையாகவே படிப்பில் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர், உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இன்டர்மீடியட் படிக்கும்போது இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் 1953-ம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டவர். கடைசி வரை கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்தார்.
பட்டப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். ஜாய்சி என்ற மனைவியும் டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர். கட்சியில் தீவிர ஈடுபாடு காரணமாக முழு நேர ஊழியரானார். சென்னை சென்று சட்டம் படித்தார். ஜனசக்தி பத்திரிகையில் எழுதத் தொடங்கினார். மனைவி காரைக்குடியில் பள்ளி ஆசிரியையாக இருந்ததால் வந்த சொற்ப வருமானம் கட்சியின் அலவன்ஸ் காரணமாக மிகுந்த சிரமத்திற்கிடையே வாழ்க்கை ஜீவனம் நடந்தது.
கடந்த 2012-ம் ஆண்டு மனைவி இறந்தபோது ஒரு முழம் பூ கூட அவள் ஆசைப்பட்ட நேரத்தில் வாங்கிக்கொடுக்க முடியாத நிலையில் நான் இருந்தேன் என வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
2 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இடையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி இருந்த அவர், பின்னர் 2000-ம் ஆண்டில் மீண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கட்சியின் மாநிலச் செயலாளராக மூன்று முறை பதவி வகித்தார்.
கட்சியின் தேசியக்குழு உறுப்பினரான அவர், தான் மரணிக்கும் வரை அப்பொறுப்பில் இருந்தார். சிறந்த மொழிபெயர்ப்பாளர். எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், மேடைப்பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இதுவரை 13 சிறு வெளியீடுகள், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.
சமீபத்தில் மதுரையில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் உடல்நிலை இயலாமையால் சக்கர நாற்காலியில் அமர்ந்து பேசினார். என் உடல்தான் நலிவுற்றிருக்கிறதே தவிர, மண்டை சரியாக உள்ளது எனத் தனது வழக்கமான பாணியில் இந்திய அரசியலை விளாசினார்.
இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டி எப்படி வாதம் செய்ய வேண்டும், நாகரிக அரசியல் ஆழ்ந்த ஞானம் உள்ளிட்டவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தா.பாண்டியன் இன்று சிந்திப்பதை நிறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago