கோவையில் ரூ.12,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர்

By செய்திப்பிரிவு

கோவையில் நேற்று ரூ.12,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களைபிரதமர் மோடி தொடங்கிவைத்தார். கோவை கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலை வகித்தார். மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத்ஜோஷி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

இதில், பிரதமர் மோடி பேசியதாவது: கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டம் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு நீர்ப் பாசன வசதி கிடைக்கும். குறிப்பாக, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர். இத்தருணத்தில் திருவள்ளுவரின் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் /தொழுதுண்டு பின்செல்வர்,’ என்ற திருக்குறள் நினைவுக்குவருகிறது.

நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்காற்றி வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் அவசியம். இச்சூழலில் புதிய மின் திட்டங்களை தொடங்கி வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நெய்வேலியில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் திட்டம் ரூ.7,800 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 65 சதவீதத்துக்கும் கூடுதலான மின்சாரம் தமிழகத்துக்கே கிடைக்கும்.

துறைமுகங்கள் மேம்பாடு

தூத்துக்குடி வஉசி சிதம்பரனார் துறைமுகம் தொடர்பான திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் மேம்பாடு குறித்த அவரதுகொள்கை நமக்கு உத்வேகத்தை அளிக்கிறது. புதிய திட்டங்கள் இத்துறைமுகத்தின் சரக்குகளைக் கையாளும் திறனை வலுப்படுத்துவதுடன், பசுமைத் துறைமுகம் சார்ந்த முயற்சிக்கு உதவும். இதேபோல, இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவற்றால் சர்வதேச அளவில் வர்த்தகம் மேம்படும்.

துறைமுகம் சார்ந்த ஆராய்ச்சி குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டை ‘சாகர் மாலா’ திட்டத்தின் மூலம் உணரலாம். இதில் வரும் 2035-ம் ஆண்டு வரை சுமார் ரூ.6லட்சம் கோடியில் 575 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும், பெரும்புதூர் அருகே பல்வகை சரக்குகளைக் கையாளும்புதிய பூங்கா விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதுதவிர, வ.உ.சி. துறைமுகப் பகுதியில் உள்ள சாலை 8 வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

அந்த துறைமுகத்தில் ஏற்கெனவே 500 கிலோவாட் திறன்கொண்ட சூரிய மின்சக்தி திட்டம்நிறுவப்பட்டுள்ளது. தற்போது மேலும் 140 கிலோவாட் திறன்கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி, 5 மெகாவாட் தரைத் தள சூரிய மின்சக்தி திட்டப் பணி ரூ.20 கோடியில் நடைபெறுகிறது. இத்திட்டம் துறைமுகத்தின் 60 சதவீத மின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர், மதுரை , திருச்சி மாவட்டங்களில் ரூ.332 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4,344 வீடுகளை திறந்து வைத்ததில் பெருமிதம் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் 9 சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மக்களின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்துபணியாற்றி, சுயசார்பு பாரதத்தை உருவாக்குவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக மோடி பேசத் தொடங்கும்போது `வணக்கம்' என்றும், முடிக்கும்போது `நன்றி, வணக்கம்'என்றும் தமிழில் கூறினார். விழாவில்,அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக எம்.பி.க்கள் ரவீந்திரநாத்,நவநீதகிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதிய திட்டங்கள்

இந்த விழாவில், நெய்வேலியில் ரூ.7,800 கோடி மதிப்பில், 1,000மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் திறந்துவைத்தார். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும். இதேபோல, ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கரில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கீழ்பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தையும் தொடங்கிவைத்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 8 வழிச்சாலை, கோரம்பள்ளம் பாலம்மற்றும் ரயில்வே பாலப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.20 கோடியில் வ.உ.சி.துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் சூரிய மின் சக்தி தொகுப்பு திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைத்தார்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ரூ.330 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை பிரதமர் திறந்துவைத்தார். ரூ.107 கோடி மதிப்பில் கோவை, மதுரை, சேலம்,தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்