சென்னைக்கு அருகே புதிய தொழிற்பூங்கா உருவாக்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி கோவையில் இன்று நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா, முடிந்த திட்டங்களை பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கும் நிகழ்வு, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று (பிப். 25) மதியம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் கே.பழனிசாமி தலைமை வகித்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலை வகித்தார். மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.
பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று முடிந்த திட்டங்களை பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:
"இன்று கோயம்புத்தூரில் நான் இருப்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொழில் நகரம். புதுமை படைக்கும் நகரம் கோயம்புத்தூர். கோவை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி இருக்கின்றோம்.
பவானிசாகர் பாசனத்திட்டத்தின் மூலம் இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும். குறிப்பாக, இத்திட்டத்தின் வாயிலாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர். இத்தருணத்தில் வள்ளுவர் கூறிய 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்வர்' என்ற திருக்குறள் எனக்கு நினைவுக்கு வருகிறது.
இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் தான் முக்கியம். இந்நிலையில், மின்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளதற்கு பெருமிதம் கொள்கிறேன்.
தூத்துக்குடி துறைமுகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்கள் சரக்கு கையாளும் திறனை மேலும் வலுப்படுத்துவதோடு, பசுமைப் பொருளாதாரம் சார்ந்த முழு முயற்சிக்கு உறுதி சேர்க்கும். இது மட்டுமல்லாது இந்தியாவின் கடற்கரைகளில் அதிகளவில் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட துறைமுகமாக, இத்துறைமுகத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். உலக அளவில் வர்த்தகம் மற்றும் சரக்கு கையாளும் மையமாக இந்தியா பிரதிபலிக்க இது உதவுகின்றது.
துறைமுகம் சார்ந்த ஆராய்ச்சி குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டை சாகர் மாலா திட்டத்தின் மூலம் நன்கு உணரமுடியும். இத்திட்டத்தின் கீழ், 2015-ம் ஆண்டு முதல் 2035-ம் ஆண்டு வரையில் சுமார் ரூ.6 லட்சம் கோடி செலவில் 575 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றுள் துறைமுகங்களை நவீனமயமாக்கல், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், இணைப்புச் சாலைகள் விரிவாக்கம், துறைமுகத்தோடு தொடர்புடைய தொழில் வளர்ச்சி கடற்கரை பகுதி மக்களின் மேம்பாடு ஆகியவை அடங்கும்.
அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் சென்னைக்கு அருகே குரோம்பேட்டையில் பல்வேறு சரக்குகளை கையாளும் ஒரு புதிய தொழிற்பூங்கா விரைவில் தொடங்கப்பட உள்ளது. சாகர் மாலா திட்டத்தின் மூலம் வ.உ.சி துறைமுகப் பகுதியில் உள்ள சாலை விரிவுபடுத்தப்பட உள்ளது. சரக்கு வாகனங்கள் துறைமுகத்திற்கு வந்து செல்லும் நேரத்தைக் குறைக்கவும் இது உதவுகின்றது.
வளர்ச்சியும் சுற்றுச்சூழல் மீதான அக்கறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. துறைமுகத்தில் ஏற்கெனவே 500 கிலோ வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்பட்டுள்ளது. தற்போது 140 கிலோ வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மட்டுமல்லாமல், 5 நகரங்களில், 5 மெகா பட்ஜெட், ரூ.300 கோடி செலவில் பணிகள் மேற்கொண்டிருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது.
நெய்வேலியில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் திட்டம் ரூ.7,800 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தியில் 65 சதவீதத்துக்கும் அதிகமான மின்சாரம் தமிழகத்துக்கே வழங்கப்படும்.
தனிநபரின் வளர்ச்சியின் மையக்கருவாக இதனை உறுதி செய்யும் அடிப்படை வழிகளில் ஒன்று அனைவருக்கும் குடியிருப்புகளை ஏற்படுத்தித் தருவதாகும். அம்மக்களின் கனவுகளை நனவாக்கும் விதமாக பிரதமரின் வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் சுமார் ரூ.332 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4,344 வீடுகளை திறந்து வைத்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆன நிலையில், குடியிருப்புகள் இல்லாத மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து மத்திய அரசு முனைப்போடு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 9 சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களுக்கான அடிக்கல் நாட்டியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கும் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.
மக்களின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றுவோம். சுயசார்பு பாரதத்தை உருவாக்குவோம்".
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடி பேசத் தொடங்கும்போதும், பேசி முடிக்கும் போதும் 'வணக்கம்', 'நன்றி' என தமிழில் கூறினார். விழா அரங்குக்கு வந்த பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுக எம்.பி-க்கள் ரவீந்திரநாத், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
என்னென்ன திட்டங்கள்?
நெய்வேலியில் ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனில் வடிவமைக்கப்பட்ட புதிய அனல் மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ரூ.3,000 கோடி மதிப்பிலான என்எல்சிஐஎல் நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய சக்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார். பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் திருப்பூர் வீரபாண்டி, மதுரை நகரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த குடியிருப்புகள் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
கீழ்பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.20 கோடி செலவில், 5 மெகாவாட் சூரிய மின்சக்தி தொகுப்புக்கும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கோவை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சை, திருப்பூர், வேலூர் மற்றும் தூத்துக்குடி உட்பட ஸ்மார்ட்சிட்டி நகரங்களில் ரூ.107 கோடியில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago