அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; திருச்சியில் மக்கள் கடும் பாதிப்பு

By ஜெ.ஞானசேகர்

வேலைநிறுத்தம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகளே இயக்கப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் இல்லாமல் மக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் இன்று (பிப். 25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தன.

இதையடுத்து, வேலைநிறுத்தத்தை தவிர்க்கச் செய்யும் வகையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 வீதம் வழங்க அரசு உத்தரவிட்டது. மேலும், ஊழியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பல்வேறு விடுப்புகளும் ரத்து செய்யப்பட்டதுடன், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஏற்கெனவே அறிவித்தவாறு இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். திருச்சி மாவட்டத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, என்என்டியூசி உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, திருச்சி மாவட்டத்தில் வழக்கம்போல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மாநகர மற்றும் விரைவுப் பேருந்துகளில் பெரும்பாலானவை மாவட்டத்தில் உள்ள 14 பணிமனைகளிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாநகரப் பேருந்துகள் மிக மிக சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே இயங்கின. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், பொதுமக்கள் ஆட்டோ, கார் ஆகியவற்றில் வாடகைச் செலுத்தி செல்ல வேண்டியிருந்தது.

இதுதவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளும் சொற்ப எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டது. அதேவேளையில், தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

போராட்டம் குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் கூறுகையில், "வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் உட்பட போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் பெரும்பாலானோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால், திருச்சி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் 95 சதவீதம் இயங்கவில்லை. குறிப்பாக, மாற்றுப் பணி என்ற பெயரில் கடந்த 9 ஆண்டுகளாக ஊதியம் வாங்கிக் கொண்டிருந்த குறிப்பிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் வெற்றி அடைந்துள்ளது. எங்களது போராட்டத்தின் நியாயத்தை மக்கள் புரிந்து கொண்டு ஆதரவு அளித்துள்ளனர்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்