ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம் சரணடையும்; அன்று நீங்கள் எனக்காக கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

"தேர்தலுக்கு முன்பாகவோ அல்லது தேர்தலுக்கு பின்னரோ, ஒட்டுமொத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் நிச்சயமாக சசிகலாவிடம் சென்று சரணடையும். அன்று நீங்கள் (செய்தியாளர்கள்) எனக்காக கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

அவற்றிற்கு கார்த்தி சிதம்பரம் பதிலளித்தார். சசிகலா, சரத்குமார் சந்திப்பு குறித்த கேள்விக்கு அவர் கிண்டல் தொனியில் கூறிய பதில் கவனம் பெற்றுள்ளது.

கார்த்தி சிதம்பரம் பேட்டி:

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனரே...

சாலைப் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்ததைப்போல, போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினையிலும் செய்கிறார்கள். அதிமுக அரசு மனிதநேயம் இல்லாத அரசு. சேவை செய்பவர்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை பார்த்தாலே தெரியும் அவர்கள் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார்கள் என்பது. இந்தப் பொருளாதார சீர்கேட்டுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் தான் காரணம்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாஜக நேரடியாக வெற்றியடையாத மாநிலங்களில் எல்லாம் இது நடக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் எம்எல்ஏக்களை தூண்டி ராஜிநாமா செய்ய வைப்பது, அதன் பின்னர் ஆளுநர் மூலமாக புதிதாக ஆட்சி அமைக்க முயற்சி செய்வது, அதில் தோல்வியடைந்தால் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வருவது என்றொரு திட்டத்தை வைத்திருக்கின்றனர்.

இதையே அவர்கள் கோவாவில் செய்தார்கள். பின்னர், மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடகாவிலும் செய்தார்கள். இப்போது, புதுச்சேரியில் செய்துள்ளார்கள்.

நேரடியாக மக்களை சந்தித்து பிரதிநிதிகளை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறத் தவறும் பட்சத்தில் இத்தகைய மறைமுக வேலைகளை அவர்கள் செய்கின்றனர். இது பாஜகவின் பொது யுக்தி. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இன்னும் நான்கு வாரங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் எதற்காக புதுச்சேரி துணைநிலை ஆளுநரை இரவோடு இரவாக மாற்றினர். பொதுவாக, இப்படியான இக்கட்டான சூழலில் தமிழகத்தில் இருக்கும் ஆளுநரைத் தான் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக (பொறுப்பு) நியமிப்பார்கள். ஆனால், சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் புதுச்சேரி செல்லக்கூடிய ஆளுநரை விட்டுவிட்டு தெலுங்கானாவில் இருந்து புதுச்சேரிக்கு ஆளுநரை நியமித்துள்ளனர். அதுவும், முன்னதாக தமிழ்நாட்டில் அரசியல் செய்தவரை நியமித்துள்ளனர்.

இந்த மாறுதலை புதுச்சேரி நலன், தொழில் வளர்ச்சிக்காக செய்கிறோம் என்று அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை அல்ல. எப்படியாவது மறைமுகமாக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக செய்கிறார்கள்.

மக்கள் தேர்தலில் இதற்குத் தெளிவாக தீர்ப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் முறிவு ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே..

அவர் எதற்காக எங்கள் கூட்டணி பற்றி பேச வேண்டும். அவர்கள் ஆட்சியில் இருக்கப்போவது இன்னும் நான்கு வாரமோ ஆறு வாரமோ. அவர் அதை மட்டும் எண்ணினால் போதும். எங்கள் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது. இன்று எங்கள் மேலிடப் பார்வையாளர்கள் திமுகவுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறார்கள். நிச்சயமாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும் அதைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டாம். அவர்கள் பத்து வருடம் செய்த அவலத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

சரத்குமார் சசிகலா சந்தித்துள்ளனர். இதில் உங்கள் கருத்து என்ன?

சரத்குமார் கட்சி பற்றியோ அவர் கூட்டணி பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் நான் இன்றைக்கும் திருப்பிச் சொல்கிறேன் தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலுக்கு பின்போ ஒட்டுமொத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சசிகலாவிடம் சென்று சரண் அடையும் என்பதில் தெளிவாக உள்ளேன். அது நடந்தால், நீங்கள் எனக்காக கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்