திமுக மீதான பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க 'செயல் வீரர்' செயலி அறிமுகம்; பெண்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ள ஸ்டாலின் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

திமுக மீதான பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க 'செயல் வீரர்' என்ற செயலியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்தார்.

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (பிப். 25), திருவண்ணாமலை திமுக அலுவலகம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற 'செயல் வீரர்' செயலி அறிமுக விழாவில் காணொலி வாயிலாகப் பங்கேற்று, அச்செயலியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

"தேர்தல் எனும் ஜனநாயகப் போர்க்களத்தில் உறுதியுடன் நிற்கும் திமுக தொண்டர்களுக்கு கூர் தீட்டப்பட்ட அறிவியல் ஆயுதம் ஒன்றை வழங்குகின்ற நிகழ்வு இது.

நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு பெற்று வரும் திமுகவிடம் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என்பதால் ஆட்சியாளர்களும் அவர்களின் கைக்கூலிகளும் நிழல் யுத்தத்தை நடத்துகிறார்கள். போர்க்களம் எதுவாக இருந்தாலும் வெற்றி திமுகவுக்குத்தான் என்பதை மரணத்திலும் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்ட தலைவர் கருணாநிதியின் தொண்டர்களான நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நிரூபித்திட வேண்டும்.

அதற்குத்தான் இந்தச் செயல் வீரர் செயலி அறிமுக விழா.

செயல் வீரர் என்றால் யார்? திமுகவின் ஒவ்வொரு தொண்டரும் செயல் வீரர்தான்.

ஊழியர்கள்-உறுப்பினர்கள் என்று சொல்லி வந்ததை மாற்றி, செயல் வீரர்கள் என மதிப்புடன் அழைத்த இயக்கம் இது. அதனால், திமுகவின் ஒவ்வொரு தொண்டருக்குமான இந்தச் செயலியை எல்லோரும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

எதற்காக இந்தச் செயலி?

மானமுள்ள ஆயிரம் பேருடன் சண்டை போட முடியும். மானமற்ற ஒருவனுடன் மல்லுக்கட்ட முடியாது என்றார் பெரியார்.

அதுபோலவே, உண்மைகளைப் பேசுவோரை எதிர்கொள்ள முடியும். பொய்களை மூட்டைக் கட்டிக் கொண்டு அவிழ்த்து விடுபவர்களை எதிர்கொள்வது சுலபமல்ல. ஆனால், இந்தத் தேர்தல் களத்தில் திமுகவுக்கு எதிராகப் பொய்களை அவிழ்த்துவிட்டு, அவதூறுகளைப் பரப்பிவிட்டு வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் பகல் கனவைக் கலைத்து, தூங்கவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.

திமுக உருவான காலத்திலிருந்து இந்த முக்கால் நூற்றாண்டுகளாக எத்தனையோ பொய்ப் பிரச்சாரங்கள், எத்தனையோ பழிகள், எவ்வளவோ அவதூறுகள். அத்தனையையும் தவிடுபொடியாக்கித்தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், திரும்பத் திரும்ப அந்தப் பொய்களையும் அவதூறுகளையும் எதிரிகள் பரப்பிக் கொண்டிருப்பார்கள். பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பயிர் விளைய வேண்டுமென்றால், களைகளை அகற்றியே ஆக வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகள் ஒவ்வொரு வீட்டிலும் பலன் தந்து கொண்டிருக்கின்றன. தலைவர் கருணாநிதியின் 69% இட ஒதுக்கீட்டால் அனைத்துச் சமுதாய மக்களும் பயன் பெற்றிருக்கிறார்கள். இளைஞர்கள் வேலைகளைப் பெற்றிருக்கிறார்கள். பல்லாயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, பெண்களுக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் பொறியாளர்கள், மருத்துவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதற்கு காரணம், நுழைவுத் தேர்வை கருணாநிதி அரசு ரத்து செய்ததுதான்.

விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம், வணிகர்களுக்கு ஒரு முனை வரி, தமிழ்நாடு முழுவதும் தொழில் முதலீடுகள், தொழிற்துறையினருக்கான வசதிகள், ஐ.டி. நிறுவனங்கள் வளர்ச்சிக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தகவல் தொழில்நுட்பக் கொள்கை.

ஏழைகளும் அடுக்குமாடிகளில் வசிப்பதற்காக குடிசை மாற்றுவாரியம், தொகுப்பு வீடுகள், அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வாழ்வதற்கு சமத்துவபுரம், சிறப்பான பொது விநியோகத் திட்டம், வீட்டுக்கு வீடு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, பொங்கல் சிறப்புத் தொகுப்பு, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, இன்னும் இதுபோல இன்னும் எத்தனையோ திட்டங்கள் என இந்தியாவில் எந்த ஆட்சியும் செய்யாத சாதனையை செய்தது தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

இந்த சாதனைப் பயிர்கள் இன்றளவும் தமிழ்நாட்டு மக்களுக்குப் பலன் தந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பயிர்களை அழித்திடும் களைகளாக பொய்யையும் அவதூறுகளையும் அள்ளி வீசி திமுகவின் வெற்றியைத் தடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

இன்றைக்கு வாழ்க்கை முறை மாறிவிட்டது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக செல்போனை எடுத்துப் பார்க்கிறோம். அதில் வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் என எல்லாவற்றிலும் ஏதாவது செய்திகள் வருகின்றன. நல்ல செய்திகளைவிட, உண்மைகளை விட, பொய்கள் வரிந்து கட்டி நிற்கின்றன. அதைத்தான் மக்கள் நம்ப வேண்டியிருக்கிறது. அதைப் பற்றிப் பேசுகிறார்கள். அதை உண்மை என நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதனால் நம்முடைய இன்றைய முதன்மையான பணி என்பது பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்பது. அவதூறுகளை விரட்டி அடிப்பது.

அதற்குத்தான் இந்தச் செயலி.

இதில் உங்களுக்கு உண்மைச் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். எதிரிகளுக்கான பதிலடிகள் வந்து கொண்டே இருக்கும். ஆதாரமான புகைப்படங்கள் வரும். வீடியோக்கள் வரும். அதனை நீங்கள் மூன்று முறை க்ளிக் செய்தால் முகநூல், ட்விட்டர் என எல்லாவற்றிலும் பதிவாகிவிடும். அதுபோல வாட்ஸ்அப் குரூப்களிலும் இதனைப் பகிரலாம்.

குறிப்பாக, பெண்களிடம் இந்தப் பிரச்சாரம் நடைபெற வேண்டும். வாக்காளர்களில் பாதிக்கும் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள். அவர்களால் நம்மைப் போல பொதுக்கூட்டம், மாநாடுகளுக்கு வர முடியாது. செய்தி சேனல்களைப் பார்ப்பதற்கும் அந்த அளவு நேரம் இருக்காது. ஆனால், அவர்கள் கையில் உள்ள செல்போனில் நமக்கு எதிரான செய்திகள் எளிதாகப் பரப்பப்படும். அதனை முறியடிப்பதற்கு, இந்தச் செயலி பயன்படும்.

உங்கள் வீட்டில் உள்ள பெண்கள், உறவுக்காரர்கள் ஆகியோருக்கு இதில் வரும் செய்திகளைப் பகிர்ந்தால், உங்கள் செல்போன் நம்பரிலிருந்து என்ன வந்திருக்கிறது என்று அவர்கள் நிச்சயமாகப் பார்த்துவிடுவார்கள். அவர்களைச் சுற்றியுள்ள பொய்த்திரை விலகும். உண்மைகள் தெளிவாகும்.

கோடிக்கணக்கான மக்களிடம் உண்மைகளைக் கொண்டு போய் சேர்த்துவிட முடியும். இதற்காக நீங்கள் செலவிட வேண்டியது, ஒரு நாளைக்கு 10 அல்லது 15 நிமிடம்தான்.

ஒவ்வொரு வாக்கும் தேர்தல் களத்தில் நமக்கு முக்கியமானது. அது பொய்ப் பிரச்சாரத்தால் தகர்ந்துவிடக்கூடாது. உண்மைகளை, சாதனைகளை முன்வைத்து, பொய்யர்களை, பித்தலாட்ட ஆட்சி நடத்துபவர்களை விரட்டி அடிக்க வேண்டியது நமக்கான கடமையாகும்.

இந்தக் கடமையை நாம் சரியாகச் செய்யாமல் சற்று அலட்சியமாக இருந்ததால்தான், இன்று தமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளது. உரிமைகள் பறிபோய், அடிமைகளால் ஆளப்படுகிறோம். இந்த இழிநிலையை மாற்றிட தொண்டர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, அயலக அணி, சட்டத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமானோர் நினைத்தால் ஒரு மணி நேரத்தில் கோடிக்கணக்கான பேருக்கு நமது செய்திகளைக் கொண்டு சேர்த்துவிட முடியும்.

ஒரு பொதுக்குழுவையே காணொலி மூலம் நடத்தி, இந்திய அரசியல் களத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த பெருமைக்குரியது திமுக. அதனால், தகவல் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி எதிரிகளின் பொய்களைத் தவிடுபொடியாக்குவோம். தலைவர் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதிய வைப்போம்.

தலைவர் கருணாநிதி வழியில் திமுக அரசை அமைக்க உறுதியேற்று, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம். மக்களின் கோரிக்கைகளை 100 நாளில் நிறைவேற்றுவோம்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்