கமிஷன் அடிப்பதற்கே கடன் வாங்கிய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே பழனிசாமிதான் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 25) காணொலி ஒன்றை தமது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில் ஸ்டாலின் பேசியுள்ளதாவது:
"தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. அதனால், அதிமுக அரசு அவசரக் கோலத்தில், அலங்கோலமாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
» அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்? அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது
சட்டமன்றம் அவர்களது சத்தமன்றமாகவே மாறிவிட்டதால், மக்களாகிய உங்களிடம் சில கருத்துகளைப் பேசுவதற்கான காணொலிதான் இது. தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக ஆக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி.
இத்தகைய ஆட்சி தனது அந்திமக் காலத்தில் ஒரு இடைக்கால நிதிநிலை அறிக்கையை கொடுத்திருக்கிறது. இதைப் பார்த்து நிதிநிலையின் கவலைக்கிடமான அறிக்கை என்றுதான் சொல்ல முடியும்!
கடன் வாங்கி கடன் வாங்கி, தமிழ்நாட்டின் கடன் தொகையை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக ஆக்கிய கடனாளி அரசு தான் இந்த பழனிசாமி அரசு.
திமுக ஆட்சியில் 438.78 கோடி ரூபாய் உபரி வருவாயுடன் நிதி நிலை அறிக்கையை விட்டுச் சென்றோம். ஆனால், இன்று வருவாய் பற்றாக்குறை 41 ஆயிரத்து 417 கோடி ரூபாய். இதற்கு எதற்காக ஒரு நிதிநிலை அறிக்கை தேவையா?
2006 - 2011 திமுக ஆட்சியின்போது வாங்கப்பட்ட கடன், 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய். ஆனால், 2011 - 2021 அதிமுக ஆட்சியில் வாங்கியிருக்கும் கடன், 4 லட்சத்து 68 ஆயிரத்து 648 கோடி ரூபாய். சுதந்திரம் வாங்கியதில் இருந்து, 2011 திமுக ஆட்சி வரை மொத்தக் கடன் 1 லட்சம் கோடி ரூபாய். இப்போது அதிமுக ஆட்சியில், 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கியுள்ளனர்.
கடன், நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, இதுதான் அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை. கடன் 500 சதவீதம் அதிகரித்துவிட்டது. இந்த நிமிடம் பிறக்கப் போகும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடனைச் சுமத்தியுள்ளது அதிமுக அரசு. இதுதான் வெற்றிநடை போடும் பழனிசாமி ஆட்சியில் பரதன் பன்னீர்செல்வம் பார்த்த கணக்கு வழக்கு!
கடன் வாங்கி, ஏதாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. டெண்டர்களை விட்டு, அந்தப் பணத்தை தனது பினாமிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டும்தான் பழனிசாமிக்குத் தெரிந்த ஒரே நிதி நிர்வாகமாக இருந்துள்ளது.
2015-16 நிதிநிலை அறிக்கையில் 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம் என்று அதிமுக அரசு சொன்னது. இதையே ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் கடந்த ஐந்து வருடமாக பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கூறி வருகிறார்கள். ஆனால், ஒரு வருடத்தில் கூட இந்த வளர்ச்சியை எட்ட முடியவில்லை.
திமுக ஆட்சியில் 10.9 சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி, அதிமுக ஆட்சியில் 4.6 சதவீதமாகச் சரிந்து விட்டது. அதிமுக ஆட்சியில் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
இன்றைக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருப்பது பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு.
மத்திய அரசாங்கம் தினந்தோறும் மக்களுக்கு சாட்டையடி தண்டனை தருவதைப் போல பெட்ரோல் விலையையும் டீசல் விலையையும் உயர்த்திக் கொண்டு வருகிறது.
மத்திய, மாநில அரசு போடும் வரிகளின் காரணமாகத்தான் இந்த அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டு வரியைப் போடுகிறது. இதனால் விலை கூடுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் விலைவாசி உயர்கிறது. மளிகைப் பொருள் விலை உயர்கிறது. காய்கறிகள் விலை உயர்கிறது.
எனவே, இவற்றுக்கு மோடி மட்டுமல்ல, பழனிசாமியும்தான் பொறுப்பு. கரோனா காலத்திலும் பெட்ரோல், டீசலுக்கு வரி போட்டு மக்களை வாட்டி வதைத்தவர் தான் இந்த பழனிசாமி.
இந்த வரியைக் குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்ல எல்லா விலையும் குறையும். ஆனால், பழனிசாமி அதைச் செய்ய மாட்டார். டெண்டர் போட்டுக் கொள்ளை அடிப்பதாக இருந்தால் விதிகளை ஒரே நாள் ராத்திரியில் திருத்துவார்.
வெறுமனே நம்பரைக் காட்டி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் பழனிசாமியும் பன்னீர்செல்வமும். 2021-22 இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்ட எந்த முக்கியமான திட்டத்துக்காவது நிதி ஒதுக்கப்பட்டதா என்றால் இல்லை!
அண்மையில் பிரதமர் தொடங்கி வைத்த 9 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. பிரதமர் தொடங்கி வைத்த கல்லணை கால்வாய் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.
பழனிசாமி ஊர் ஊராகப் போய் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்க் கடன் தள்ளுபடி செய்ததாகச் சொல்லி வருகிறார். ஆனால், 5,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி 7,110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படவில்லை. பிறகு எப்படி 16 லட்சம் விவசாயிகள் பயனடைகிறார்கள் என்று பட்ஜெட்டில் கூறியிருக்கிறார்கள்.
அதாவது, லட்சக்கணக்கான விவசாயிகளை நம்பவைத்துக் கழுத்தறுக்கிறார் பழனிசாமி. பணமே ஒதுக்காமல், எப்படி அவரால் கடன்களை ரத்து செய்ய முடியும்?
தேர்தலுக்காகவே அறிவிப்புகளை வெளியிடுகிறார். தொடக்க விழா நடத்துகிறார் என்று நான் குற்றம் சாட்டினேன். அதை இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை நிரூபித்து விட்டது.
நிதி மேலாண்மையில் வரலாறு காணாத தோல்வி அடைந்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 10 ஆண்டு காலத்தில் ஒரு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கூட கடன் வாங்கிய நிதியை பயன்படுத்தாமல், கமிஷன் அடிப்பதற்கே கடன் வாங்கிய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே பழனிசாமிதான்.
எப்படியாவது தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்து விளம்பரம் செய்து கொள்கிறார் பழனிசாமி.
தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து, அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதல்வர்.
தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.
வேலைவாய்ப்பும் இல்லை; தொழிற்சாலையும் இல்லை என்பதை விட, மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் கீழே விழுந்து கிடக்கும் நிலைக்குத் தமிழகத்தைக் கொண்டு போய்விட்டார்கள்.
தமிழக நிதி மேலாண்மை வரலாற்றில் நிதியமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிசாமியும், அதிமுக ஆட்சியும் ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
கடைசி நேரத்தில் காரியத்திற்கு ஆகாத கல்வெட்டுகளைத் திறந்து வைத்து, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியடைந்த ஒரு அவல ஆட்சியைக் கொடுத்து விட்டுச் செல்லப் போகிறார்கள்.
கவலைக்கிடமான முறையில் ஒரு நிதிநிலை அறிக்கையை வாசிப்பதை விட பன்னீர்செல்வம் சும்மா இருந்திருக்கலாம். பேப்பர் செலவாவது மிச்சம் ஆகி இருக்கும். இந்த 110 பக்கங்களும் 'வேஸ்ட்'!
ஆட்சி செய்யத் தெரியாதவர்களிடம் ஆட்சியும், நிர்வாகம் செய்யத் தகுதியில்லாதவர்களிடம் நிர்வாகமும் போனால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் இந்த நிதிநிலை அறிக்கை. தாங்கள் 'வேஸ்ட்' என்பதை அவர்களே நாட்டுக்குச் சொல்லிவிட்டார்கள்!".
இவ்வாறு அந்தக் காணொலியில் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago